Tuesday, December 11, 2007

குர்ஆன் மென்பொருள்!

குர்ஆன் மென்பொருட்கள் பல கிடைத்தாலும் தொழில்நுட்பக் குறைகள் மிகைத்தே காணப்படுகின்றன. இச்சூழலில் முழுக்க முழுக்க யூனிகோடுத் தமிழ், அரபி, மற்றும் ஆங்கிலத்தில் இணைந்த அருமையான அதுவும் முற்றிலும் இலவச பதிப்பாக ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து கணணியில் நிறுவிக்கொள்ளும் வசதி கொண்ட இம்மென்பொருள் எனக்கு திருப்தியாக உள்ளது. நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்.


செய்முறை - 1 (சுட்டியை கிளிக்கி நிறுவிக்கொள்க)

QRFull4beta1.exe (13.2 MB)


செய்முறை - 2 (கீழுள்ள வசனங்களுக்கான சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)

QR-MP3-89to114.exe

QR-MP3-78to88.exe

QR-MP3-50to77.exe
QR-MP3-30to49.exe

QR-MP3-15to29.exe
QR-MP3-05to14.exe
QR-MP3-02to04.exe


செய்முறை - 3 (கீழுள்ள விருப்பமொழி சுட்டிகளை கிளிக்கி தானியங்கி முறையில் நிறுவிக்கொள்க)

QR Tamil.exe
QR Malayalam.exe
QR Urdu.exe



சிறப்பம்சங்கள்

- ஸாஅத் அல் ஹம்தி அவர்களின் அழகிய குரலில்
- தமிழ், அரபி, ஆங்கிலம் மற்றும் விரும்பிய 24 மொழிகளில்...
- தேர்ந்தெடுத்த வசனங்களையோ முழுக்குர் ஆனையோ அரபி ஒலியுடன் கூடிய தமிழ் எழுத்தில் பயனடையும் வசதி
- வார்த்தைக்கு வார்த்தை அர்த்தங்களைக் காட்டும் வசதி
- தமிழ் அர்த்தத்துடன் குர் ஆனை மனப்பாடம் செய்து கொள்ள அருமையான வசதி (Ctrl+R)
- முதல் இலவச பதிவிறக்க குர் ஆன் மென்பொருள்



நிறுவி துவங்கியபின் வரும் முதல் சாளரம் கீழ்க்கண்டவாறு கிடைக்கும்: இதில் உள்ள கீழ்நோக்கிய அம்பு (down arrow) குறியைப் படத்தில் காட்டியுள்ளவாறு கிளிக்கினால்...



























கீழே உள்ளவாறு யூனிகோடுத் தமிழில் அரபி ஒலியுடன் குர் ஆனைக் கேட்டு பார்த்து மகிழலாம். புதிய அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்!

(செயலியை இலவசமாக அளிக்கும் www.Shaplus.com தளத்தினருக்கு நன்றிகள்)




















பயன் தரக்கூடியதாகத் இருப்பின் இருவரிகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். தவிர சந்தேகங்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.

Monday, December 3, 2007

இஸ்லாம் கூறும் எளிய தர்மம் - புன்னகை!

புன்னகையின் சிறப்பும் அதன் பயன்களும் அதனைக் குறித்தப் பல மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளும் சமீப காலங்களில் புன்னகைக் குறித்து வெளியாகி வரும் மருத்துவ அறிக்கைகளும் அனைத்துச் சமூகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்களிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமூகப் பிணைப்பை ஏற்படுத்தக் கூடிய ஓர் எளிய ஆனால் வசீகரமான உத்தியாக இப் புன்னகையைக் குறித்து இஸ்லாம் அழகிய முறையில் அறிவுறுத்திச் சென்றிருக்கிறது. இதைப் பிறர் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ள முஸ்லிம்கள் அறிந்தோ அறியாமலோ அதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தான் வேதனையான உண்மை.

அன்றைய இஸ்லாமியக் கூற்றுகள் - இன்றைக்கு வேறு வடிவில்!

A smile is a curve that sets everything straight. - Phyllis Diller

A smile is an inexpensive way to change your looks. - Charles Gordy

Today, give a stranger one of your smiles. It might be the only sunshine he sees all day. - H. Jackson Brown, Jr.

Life is like a mirror, we get the best results when we smile at it.

ஆனால் இஸ்லாமோ கீழ்க்கண்டவாறு கூறிவிட்டுச் சென்றிருக்கிறது.

''உன் சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகை புரிவது உனக்கு நல்லறமாகும். நீ நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நல்லறமாகும். பாதை தவறிய மனிதருக்குப் பாதையைக் காட்டுவதும் உனக்கு நல்லறமாகும். பார்வையிழந்தவருக்குப் பார்வையாக நீ ஆவதும் உனக்கு நல்லறமாகும். பாதையில் கிடக்கும் கல், முள், எலும்பு போன்றவற்றை நீ அகற்றுவதும் உனக்கு நல்லறமாகும். உனது வாளியில் உள்ள தண்ணீரை உனது சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் உனக்கு நல்லறமாகும்.'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

வேறு எந்த ஒரு மதத்திலும் இல்லாத அளவிற்கு, அறிவுக்கு ஒவ்வும் சிறந்த பகுத்தறிவுச் சித்தாந்தத்தை இஸ்லாம் புகுத்தியுள்ளதை இதில் காண முடியும். ஒரு மனிதன் தனக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பற்றியும் அதன் நன்மைகளைப் பற்றியும் சொல்லும் இறைவன், அதே அளவில் பயனைப் பெற்றுத் தரும் இன்னொரு செயல் பற்றியும் கூறுகிறான். இறைவழிபாட்டின் மூலம், தான் வழங்கும் நன்மைகளைப் போன்றே ஒரு மனிதன் சக மனிதர்களுடன் அன்புடன் கலந்துறவாடுவதற்கும் கொட்டித் தருவதாக வாக்களிக்கிறான். சுருக்கமாகச் சொல்வது என்றால், சமூகத்தினுள் அழகானதொரு பிணைப்பை ஏற்படுத்தும் இறைவனின் தயாள குணத்தினை சிந்தனையாளர்கள் இதில் இருந்து அறிந்து கொள்ள இயலும்.

தர்மம் என்பதெல்லாம் ஏதோ பணவசதியும் பொருள் வசதியும் நிறைந்தவர்களுக்கு மட்டும்தான் என்கிற குறுகியக் கண்ணோட்டத்தை அடியோடு மாற்றியமைக்கிறது இஸ்லாம். ஏழை, எளியவர்களும் தம்மால் இயன்ற தர்மத்தைச் செய்து நன்மையைப் பெற முடியும் என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளார்கள். எந்த அடிமட்ட நிலையில் இருக்கக் கூடிய வறியவர்களும் தர்மம் செய்து நன்மையை அடைந்து கொள்ளும் வழியினை இறைவன் கூறுகிறான்:

لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ وَمَا تُنفِقُواْ مِن شَيْءٍ فَإِنَّ اللّهَ بِهِ عَلِيمٌ

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:92)



சமூகத்தில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்னைகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற கொடிய பல செயல்கள் ஆகியவற்றின் மூல காரணமாக ஒருவரின் வறுமை சொல்லப்படுகிறது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வறுமையை ஒழிக்கும் ஒரே ஆயுதமாக "வளத்தை விநியோகித்தல்" எனும் அற்புதத் திட்டமான 'ஜகாத்'தை ஏற்படுத்திய இஸ்லாம், தமது இறைவிசுவாசத்தினைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தங்களால் இயன்ற அளவிற்குச் சமூகத்திற்கு, தான-தர்மங்கள் செய்வதை வலியுறுத்துகிறது. ஏழை, பணக்காரன் என்ற பெரும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்கான மூலக்காரணம் விநியோகத்தில்தான் உள்ளது என்பதை அறிந்து உருவாக்கப்பட்ட திட்டமே இது என்பதை சிந்திப்பவர்கள் உணர்ந்து கொள்ள இயலும்.

அதே போன்று ஒருவர் விரும்பிக்கொடுக்கும் தர்மமான சதகாவை இஸ்லாம் கொடுக்கச் சொல்லி மிகவும் வலியுறுத்துகிறது. தஸதகா (தர்மம் கொடுப்பது) எனும் வார்த்தை சதக்கா (உண்மையைச் சொல்வது / உண்மையாளராய் இருப்பது) எனும் அரபிப் பதத்திலிருந்து உருவானதாகும். மனமுவந்து கொடுக்கும் தர்மமான இதை ஒவ்வொருவரும் தனது தினசரி வாழ்க்கையில் ஓர் அங்கமாக ஆக்க வலியுறுத்தியுள்ளது இஸ்லாம்.

நபி(ஸல்) அவர்கள் ஒருவர் முகத்தில் காட்டும் மென்மையான புன்னகையும் அவர் பிறருக்குச் செய்யும் தர்மமே என்ற அளவிற்கு அதனை வலியுறுத்தியுள்ளார்கள். மக்கள் நடந்து செல்லும் பொதுவழிப் பாதைகளில் உள்ள கற்கள், முட்கள் ஆகிய தடைகளை அகற்றி வழிகளைச் சீரமைப்பது என்று கூறிய நபியவர்கள், புன்னகைப்பதும் அதற்கு ஈடான தர்மம் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதும் தர்மமாகும்! என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்" - அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (திர்மிதி 2022, 2037)

இறைவனிடமிருந்து இவ்வளவு எளிதாக நன்மையைப் பெற்றுத்தரும் ஒரு வாழ்வியல் நெறி வேறெந்த சமுதாயத்திலும் சொல்லப்பட்டதில்லை என்பது தெளிவு.

அதே சமயம் ஒருவர் ஒரேயடியாகச் சிடுமூஞ்சியாகவும் இல்லாமல், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் புன்னகை மன்னனாகவும் இல்லாமல் அளவுடனும் கனிவுடனும் சிரிப்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. தவிர, தக்கக் காரணமின்றி எப்போதும் சிரிப்பவர் எதிரில் உள்ளவரைப் பரிகாசம் செய்வதாகவும், மறைகழன்றவர் என்று பிறர் எண்ணவும் வாய்ப்புண்டு என்பதைக் கவனிக்கவேண்டும். எனவே புன்னகைக்கான அளவுகோலையும் அறிந்திடல் அவசியமாகிறது.

"நபி(ஸல்) அவர்கள் ஒரேயடியாக தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்க நான் இதுவரை கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகை புரிபவர்களாகவே இருந்தார்கள்" - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரி)

புன்னகை பூக்கும் இன்முகத்துடன் ஒருவர் ஒரு செய்தியைச் சொல்லும்போது அது கேட்பவருக்கு மனதில் பதியவும் சொல்வதைக் கூர்ந்து கேட்கும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் என உளவியல் ஆய்வு ஒன்று நிரூபிக்கிறது. சந்திப்புகளில் உள்ள இறுக்கத்தை ஓர் எளிய புன்னகை தளர்த்துவதோடு மட்டுமின்றி, எந்த ஒரு சிரமமான விஷயத்தையும் எளிதில் சாதிக்க வைக்கும் ஆற்றல் உள்ளதாகவும் விளங்குகிறது.

இஸ்லாத்தினைப் போன்று உறுதியான சமூகப் பிணைப்பை வாழ்வில் நடைமுறையில் செயல்படுத்தத் தூண்டும் மார்க்கம் வேறு ஏதுமில்லை. அன்பும் பாசமும் தான் ஒரு சமூகத்தை இணைக்கும் வலுவான சக்தியாக இருக்கும் என்பதை மிகவும் வலியுறுத்தக்கூடியது இஸ்லாம். இறைவன் தன் திருமறையில் கூறுவதைப் போன்று இந்தப்புன்னகை உள்ளங்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்த வல்லது என்பதை அதைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் உள்ளப்பூர்வமாக கடைபிடிக்கையில் உணரலாம்:

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الأَرْضِ جَمِيعاً مَّا أَلَّفَتْ بَيْنَ قُلُوبِهِمْ وَلَـكِنَّ اللّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை (அல்லாஹ்) உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:63)



சொல்வது வேறு - செய்வது வேறு என்ற நேரெதிராய் செயல்படும் இன்றைய காலகட்டத் தலைவர்கள் போன்று அல்லாமல் நபி(ஸல்) அவர்கள் மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்துக் காண்பித்துள்ளார்கள். "ஒரே சமயத்தில் மனித மனங்களையும் சிந்தனைகளையும் தம் பக்கம் வென்றெடுத்த ரகசியம் நபி(ஸல்) அவர்களின் அமைதி தவழும் புன்னகை பூத்த முகம்தான்!" என்பதைப் பல்வேறு நபித்தோழர்களின் அறிவிப்பில் இருந்து காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்களின் பேரனான ஹுஸைன்(ரலி) தம் தாத்தாவான நபிகளாரின் குணங்களைப் பற்றி, தம் தந்தையான அலீ(ரலி) அவர்களிடம் ஒருமுறை கேள்வி எழுப்பினார்கள். அலீ(ரலி) அவர்கள் நபிகளாரைப் பற்றிக் கூறுகையில் "இன்முகமும், பெருந்தன்மையும் கூடிய கனிவு அவர்களிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும். கடுமையாகவோ, முரட்டுத்தனமாகவோ நபியவர்கள் நடந்து கொண்டதேயில்லை. பிறர் குறைகளை ஆராயும் மனப்பான்மை உள்ளவராகவோ அல்லது அது போன்ற அற்பமான செய்கைகளிலோ அவர்கள் ஈடுபடாமல் விலகியிருப்பார்கள்" என்று பதிலளித்தார்கள். (தப்ரானி)

நபித்தோழர்கள் பலரின் அறிவிப்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் புன்னகை பூக்கும் முகமாகவும், நகைச்சுவையை ரசித்து சிரித்த சம்பங்கள் பலவும் அறிய முடிகிறது. நபியவர்களின் பிரத்யேகமான புன்னகையைக் கண்ட ஒவ்வொரு நபித்தோழரும் நபியவர்களுக்கு மிகவும் விருப்பமானவர் தாம்தான் என்ற எண்ணம் மிகைக்கும் அளவிற்கு அவர்களின் புன்னகையில் வசீகரம் இருந்தது.

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: "நான் இஸ்லாத்தை ஏற்ற கணத்திலிருந்து புன்னகை பூக்கும் முகம் தவிர வேறெதையும் நான் நபியவர்களிடம் கண்டதில்லை. அவர்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மெல்லிய புன்னகை பூப்பதைக் கண்டுள்ளேன். (புகாரி)

சக சகோதரர் ஒருவரைக் கண்டு புன்னகைப்பது ஒருவர் செய்யும் தர்மம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

என் வாழ்நாளில் நபியவர்கள் அளவிற்குப் புன்னகை பூத்த இன்னொருவரை நான் கண்டதேயில்லை என்று அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு ஹாரித் (திர்மிதி

புன்னகை - சில மருத்துவ உண்மைகள்:

புன்னகையைத் தம் முகத்தில் எப்போதும் இழையோடச் செய்பவர்கள் உடல் அளவிலும் மன அளவிலும் புத்துணர்வோடு வலம் வருகிறார்கள்.

புன்னகைப்பதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கிறது என்பதை University of Maryland Medical Center in Baltimore பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. ஒரே வயதையும் உடற்கூறுகளையும் ஒத்த (சிரித்த முகமாய் பழகுவர்களும், கடுகடுத்த குணம் கொண்டவர்களுமான) இரு வகைப்பட்ட மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 40% க்கும் மேற்பட்ட புன்னகைப்பிரியர்களுக்கு இதய நோய் அண்டும் வாய்ப்பே இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.

இதற்கான காரணங்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தும் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடிய endothelium எனும் உயிரணுப் படலம் பாதிப்படைவதாலேயே இதய நோய் உருவாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். சந்தோஷமான சமயங்களிலும் இப்படிப்பட்டவர்கள் மனம் விட்டு சிரிப்பதில்லை பிறரையும் சந்தோஷப்படுத்துவதில்லை என்ற விஷயங்கள் ஆய்வில் வெளிவந்துள்ளன.

உடற்பயிற்சி, புகைப்பிடிக்காமை, கொழுப்புச் சத்து குறைந்த நல்ல உணவுப்பழக்கம், ஆகிய மருத்துவப் பரிந்துரைகளில் இப்போது புன்னகை முதலிடம் பெறுகிறது. Internal Aerobics என்று மருத்துவர்கள் செல்லமாக அழைக்கும் இந்தப் புன்னகை முகத்தில் துவங்கி 400க்கும் மேற்பட்ட உடல் தசை நார்களை இயக்கி புத்துணர்வூட்டுவதால் இப்பெயர் வழங்கப்பட்டது.

அத்தோடு பெயருக்கு சிரிக்கும் சிரிப்பு வெறும் 2 தசை நார்களை மட்டுமே இயக்குகிறது என்ற கொசுறுச் செய்தியையும் அறிய முடிகிறது. சிரிப்பவர்களின் உள்ளம் சும்மா இருக்கிறது என்பதை அவர்கள் கண்கள் சிரிக்காமல் வெறுமையைக் காட்டுவதைக் கண்டு உணரமுடியும் என்கின்றனர் மனவியல் நிபுணர்கள்.

இதைப் பற்றி மேலும் ஆராய்ந்தோமானால் பல அற்புதங்கள் கிடைக்கின்றன. மூளைக்கும், நோய் எதிர்ப்புச்சக்திக்கும் இடையே உள்ள உறவை ஆராயும் psycho-neuroimmunology சமீபத்தில் புகழ் பெற்ற ஒரு மருத்துவ நிபுணத்துவமாகும். உணர்வுகளுக்கும் உடலுக்கும் இடைப்பட்ட தொடர்பிலான இந்த ஆய்வில் புன்னகை என்பது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யும் சுரப்பிகளைத் தூண்டுகிறது என்பதை அறியமுடிகிறது.


இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றி வருவதாகவும் தாம் ஒரு நல்ல முஸ்லிமுக்கு முன்னுதாரணம் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களில் சிலர் நபியவர்கள் காட்டித்தந்த இந்த எளிய முறையை ஏனோ பின்பற்றுவதில்லை. இறைவனுக்குச் செய்யும் கடமைகளான தொழுவதும் நோன்பு நோற்பதும் மட்டுமே அவர்களை நேர்வழியில் பால் கொண்டு சேர்த்துவிடும் என்பதில் நம்பிக்கைக் கொண்டு உள்ளனர். ஆனால் உண்மை அவ்வாறன்று: நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய சமூக உறவுகளைப் பேணுவதிலும் சகோதரர்களிடையே பரஸ்பர அன்பை வளர்த்துக் கொள்வதிலும் மிகவும் ஆர்வமூட்டி உள்ளார்கள் என்பதை நாம் கவனித்துத் திருத்திக்கொள்ள வேண்டும்.

சிரித்து மனம் மகிழ்வதை விரும்பாத மனிதரை உலகில் காண முடியாது. அதிகம் சிரிக்காத சிடுமூஞ்சியாய் இருப்பவரும் யதார்த்தத்தில் சிரிப்பதை விரும்பக்கூடியவரே!

நீங்கள் விரும்பிய ஒன்றை உங்கள் சகோதரருக்காக விரும்பாத வரையில் ஒருவர் உண்மையாளராக மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (சஹீஹ் புகாரி & முஸ்லிம்)

எனவே, இதுவரை நம் முகத்தில் அணிந்து வந்த கடுமை எனும் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு இந்த நிமிடம் முதல் ஒரு புத்துணர்வுடன் நமது வாழ்க்கையைத் துவக்குவோம். நம் குடும்பத்திலிருந்துத் துவங்கி, சகோதரர்களுடன், நண்பர்களுடன், அண்டை வீட்டார், உற்றார் உறவினர் ஆகிய அனைவருடனும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்து ஊக்கப்படுத்திய கனிவுடன் கூடி புன்னகையை முகத்தில் தவழ விடுவோம். அதன் மூலம் பிறரின் இறுக மூடப்பட்ட மனங்களையும் புன்னகை என்ற கனிவான நம் திறவுகோல் கொண்டு திறப்போம். இம்மையில் சமூகத்தில் சகோதரப் பிணைப்பை உறுதி செய்து கொள்வதுடன் மறுமையில் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்லியிருக்கும் புன்னகை எனும் நபிவழியைப் பின்பற்றியதன் மூலம் நிறைய தர்மங்கள் செய்த நன்மையையும் பெற்றுக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்!

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Sunday, September 23, 2007

கோபத்தால் ஆகாதெனினும்...!

மது அன்றாட வாழ்வில் வாதங்கள், சர்ச்சைகள் என்பதை ஒவ்வொரு கணத்திலும் சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் மனதில் தோன்றிய எண்ணத்திற்குத் தடையாகவோ அல்லது நம் எண்ண ஓட்டத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துகளோ ஆலோசனைகளோ முன்வைக்கப்படும்போது மனதில் விசாலமின்றி அவற்றை எதிர் கொள்வதால் நமது குறுகிய சிந்தனைகள்/முன் முடிவுகள் சர்ச்சைகளுக்குத் தூபமாக அமைகின்றன. மனநலவியல் ரீதியில் Phase of Denial என்றழைக்கப்படும் இத்தகைய குணம், எதிர்பார்ப்புக்கும் யதார்த்த நிலைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டமே!

தினசரி அலுவலில், வியாபாரத்தில், வீட்டில், கடைத்தெருவில், பொதுவிடங்களில் என்று எங்குப் பார்த்தாலும் இந்த வாத-பிரதிவாதங்கள் தொடர்கதையாகி வருகின்றன. குடும்பப் பிணைப்பிற்குள் மனைவி அல்லது கணவனோடு, பெற்றோர்களோடு, சகோதர சகோதரிகளோடு கருத்துப் பரிமாற்றங்கள் வாதங்களாகி, விவாதங்கள் விதாண்டாவாதங்களாகி, சர்ச்சைகள் முற்றி, இறுதியில் மனக்கசப்பும் விரக்தியும் ஏற்படுவது மனித வாழ்வில் ஒரு வாடிக்கையாகவே மாறிப்போய் இருக்கிறது. சமீபத்திய ஒரு புள்ளிவிபரப்படி பெரும்பாலானோருக்குக் கட்டுக்கடங்காத கோபம் வெளிப்படுவது தன் வீட்டில்தானாம்.

உதாரணத்திற்கு ஒரு சுழற்சியான நிகழ்ச்சியைப் பார்க்கலாம். தன் மகன் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று வந்துள்ளான் என்பதனால் அவனைத் திட்டித் தீர்த்த ஒரு தாய், தனது இயலாமையைக் காட்ட வழியின்றி வீட்டிற்கு வரும் தன் கணவன் மீது எரிந்து விழுகிறாள். மனைவியைக் கண்டிக்க முடியாமல் தவிக்கும் கணவன், தன் மனஅழுத்தத்தை, மறுநாள் தனது அலுவலகத்தில் தனக்குக் கீழ் பணிபுரியும் அலுவலர் மீது கொட்டுகிறார். மேலதிகாரி தன்னை இவ்வாறு பேசிவிட்டார் என்ற அழுத்தத்தில் வீட்டிற்கு வரும் அந்த அலுவலர், தன்னை எதிர்கொள்ளும் மனைவி மீது எரிந்து விழுகிறார்!. ஒன்றும் புரியாமல், எதிர்த்து பதிலும் பேச முடியாமல், கோபத்தை அடக்க முடியாமல் அவள் தன் பிள்ளைகள் மீது கொட்டித் தீர்க்கிறாள்.

ஏதேது? இது என்னைக் குறிவைத்து சொல்கின்ற மாதிரி உள்ளதே என்ற எண்ணம் இதை வாசிக்கும் உங்களுக்கு மேலிடுகிறதா? ஆமாம். ஆனால் இது உங்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை இல்லை. முழு மனித சமுதாயமும் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியப் பிரச்னைதான். ஆனால் இதற்கான தீர்வு என்ன? ஏதாவது வழிமுறைகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. அதற்கு முன் நீங்கள் யார்? இதனை ஒரு சிறு வித்தியாசத்தின் மூலம் பார்ப்போம்!

இறை நம்பிக்கையாளருக்கும் நம்பிக்கையற்றவருக்கும் உள்ள வித்தியாசம்!

பீதியோ அவநம்பிக்கையோ குற்ற உணர்ச்சியோ ஏற்படும் சமயங்களில் இறைநம்பிக்கை கொண்டவரின் செய்கைகளுக்கும் நம்பிக்கையற்றவரின் செய்கைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன் (அல்குர்ஆன் 71:10)

என்று இறைவனே வாக்களித்துள்ளதால் தனக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவேண்டியோ, தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியோ அல்லது தான் தவறுதலாகச் செய்து விட்ட ஒரு பாவத்தை, குற்றத்தை மன்னிக்க வேண்டியோ தன் சிரமத்தைக் குறைக்க இயலும் என்று நம்பும் ஒருவரிடம் மனமுருகிக் கேட்டுவிடுகையில் நம்பிக்கை கொண்ட ஒருவரின் மனதில் உள்ள பாரம் இறங்கி மனம் லேசாகி விடுகிறது. தனது தற்போதைய செய்கைகளுக்கான எதிர்வினைகளைத் தான் பின்னாளில் சந்திக்க வேண்டி வரும் என்ற எண்ணம் இறைநம்பிக்கையாளருக்கு இருப்பதனால் தவறுகளைத் தொடர்ந்து செய்வதில் இருந்து தப்பிக்க, இறைநம்பிக்கையும் இறைச் சார்பும் அவருக்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

இறைநம்பிக்கை அற்றவருக்கு இந்த வாய்ப்பு இல்லை! அதனால் தன் தவறுகளை ஒருவர் கண்காணிக்கிறார் என்ற எண்ணமோ, ஒருநாள் பதில் சொல்ல வேண்டி வரும் என்ற அச்சமோ இல்லாத காரணத்தால் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து பெரும் குற்றவாளியாக மாறும் வாய்ப்பே அதிகமாக உள்ளது!

ஒருவருக்குக் கோபத்தை உண்டாக்கும் காரணிகள் பற்றியும் ஒரு தனிமனிதனைத் தாண்டி முழு சமுதாயத்திற்கும் அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் பற்றியும் வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தரும் இறைமறையிலிருந்தும் இறைத்தூதர் கூற்றிலிருந்தும் சிலவற்றைப் பார்ப்போம்.


இறைவன் மனிதனை முதன்முதலாகப் படைக்கும்போதே பல்வேறு உணர்வுகளையும் தேவைகளையும் உள்ளடக்கிய ஓர் உயிரினமாகப் படைத்துள்ளான். ஆங்கிலத்தில் Human Instincts என்று அழைக்கப்படும் மனித உள்ளுணர்வானது, தீயவற்றிலிருந்து சரியானதைத் பிரித்தறிதல், அன்பு காட்டுதல், இரக்க உணர்வு, மற்றும் உடற்கூறு சம்பந்தமான தேவைகளான தாகம், பசி போன்ற பாஸிட்டிவ் குணங்களை உள்ளடக்கியது. வெறுப்பு, கோபம், அதன் விளைவாகத் தோன்றும் வன்முறைகள் போன்ற எதிர்மறையான மனித குணங்களையும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

Stress Management என்ற பெயரில் நவீன மருத்துவம், கோபத்தைத் தணிக்கும் வழிகளை ஆய்வு செய்து, ஆழ்நிலை தியானம் (Meditation), நல்ல உறக்கம் (Sleep), மெல்லிய உடற்பயிற்சிகள் (exercise), சமுதாயத்துடனான பிணைப்பு (Socialization), பிணிநீக்கும் சிகிச்சை (physiotherapy), அமைதிப்படுத்தும் மருந்துகள் (tranquilizer) என்று பல்வேறு யுத்திகள் கையாளப்படுகின்றன.

வியப்பூட்டும் வகையில் இவையனைத்தும் ஒன்றிணைந்த தீர்வுகள் ஒரு சாமான்யன் தன் தினசரி வாழ்வில் கடைபிடிக்கும் வகையில் நேர்த்தியாக இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளன.

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள் அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (அல்குர்ஆன் 2:30)

மனித வாழ்வில் பொங்கி எழும் மேற்கூறிய தீய குணங்களை எதிர்த்துப் போராடும் நுட்பத்தையும் மனிதனைப் படைத்தவனே அறிவித்துத் தந்திருக்கிறான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் எத்தனை பேர் இதனை ஆழமாக உணர்கின்றோம்?

நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது (அல்குர்ஆன் 8:66)

எதிரில், பின்னில், இடப்புறத்தில், வலப்புறத்தில் என அனைத்துத் திசைகளிலிருந்தும் மனிதனை இறைச் சிந்தனையிலிருந்து பிறழச் செய்து, வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாகி விடுபவர்களுக்கு, அவன் முதலில் போடும் தூபம்தான் கோபம். ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தி அதனை மருந்துக்குக் கட்டுப்படா நோயாக மாற்றிவிட்டால், பின்பு கோபமுற்றவன் தன்னிச்சையாய் ஏற்படுத்தும் விபரீதங்களால் கிடைப்பதெல்லாம் ஷைத்தானுக்கு லாபம்தான்.

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும்
வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது)
மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.

(அல்குர்ஆன் 10:57)


கோபம் கொள்ளும் ஒரு சிங்கமோ, நாயோ சிந்திப்பதில்லை. சினம் கொள்ளும் ஒரு மனிதன் கோபம் கட்டுக்கடங்காமல் போகையில் அவனுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன.

1. இறைவேதமும் நபிவழியும் போதித்திருக்கும் வழிமுறைகளை மனக் கண்ணில் கொண்டு வந்து, கோபத்தை அடக்கிக் கொள்வது.

2. அனைத்தையும் மறந்து மிருகங்களுடன் வித்தியாசம் இன்றி ஐக்கியமாகிப்போவது

கோபம் உச்சத்தை அடையும்போது "கட்டுக்கடங்காமல் போகிறோம்" என்பதும் உண்மையன்று. நாம் "ஷைத்தானின் கட்டுப்பாட்டிற்குள் முடங்கிப் போகிறோம்" என்பதே உண்மை. கோபம் என்ற குணம் மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல இயற்கைக் குணங்களில் ஒன்றுதான். அதைக் கட்டுப் படுத்துவதில்தான் மனிதனின் வெற்றி அடங்கி இருக்கிறது.

மனிதனும் மிருகமும் வேறுபடுவதே தன்னிச்சை எனும் இந்த மெல்லிய இழையில்தான்.

கோபத்தின் விளைவுகளைப் பட்டியலில் அடக்கவியலாது. சாதாரண கருத்துப் பரிமாற்றம் என்ற ரீதியில் ஆரம்பமாகும் ஒரு சம்பவம், தன்முனைப்பு (ego) எனும் இறுமாப்பின் காரணமாக நொடிப்பொழுதில் மூளையின் செல்களில் பல்கிப் பெருகுகிறது. உயிருக்குயிரான உறவுகளையும் துண்டு துண்டாகச் சிதைக்கிறது.

கோபத்தின் உச்சகட்டத்தில் உள்ள ஒருவர், தான் அநீதியான வழிகளில் முடிவெடுக்கத் தயங்குவதில்லை. மன உளைச்சலின் மிகுதியில் தவறான செய்கைகளை நோக்கி பிரயாணம் செய்யும் ஒருவர், தன் கூற்றுக்கு ஒவ்வாத நபரை இவ்வுலகில் இருந்து தீர்த்துக் கட்டவும் தயங்குவதில்லை.

தோல்வியைத் தாங்கிக் கொள்ளாத மனமே பெரும்பாலும் கோபம் கொள்கின்றது. இயலாமைகளே கோப வடிவில் வெளிவருகின்றன.


"உங்களில் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ளுங்கள் கோபம் மறைந்துவிடும். ஒருவருக்கொருவர் அன்போடு பரிசளித்துக் கொள்ளுங்கள் - அது பகைமையை மறக்கடிக்கச் செய்யும்" என்று மிக யதார்த்தமாக நபி(ஸல்) அவர்கள் இத்தகைய நிலைக்கு மருந்தளிக்கிறார்கள்.

ஒருவர் கோபத்தின் உச்சியில் உள்ளபோது கடும் சொற்களாலேயோ உடல் ரீதியாகவோ மற்றவரைத் தாக்கி விடுகின்றார். மனித குணம் வெளியேறி ஒருவர் மிருகக் குணத்தை அடைவது இத்தகைய கணங்களில்தான். கோபத்தின் உச்சிக்குச் சென்று விடும் சிலர், வெறுப்படைந்து தற்கொலைக்குக் கூட சென்று விடுவதைப் பார்க்கிறோம். அக்கணங்களில் பொறுமையை மேற்கொண்டு இறைவனிடத்தில் முறையீடு செய்துவிட்டால் தகுந்த உதவி கிடைக்கும் என்பதே இறைவாக்கு.

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

உடற்பயிற்சிகளால் கோபத்தைக் குறைத்துவிட முடியாது. கோபத்தை மனிதனுக்குள் கொழுந்து விட்டெரிய வைக்கும் ஹார்மோன்களான hypoglycemia & hyperthyroidism ஆகிய இரண்டையும் கட்டுக்குள் வைப்பதற்கு மனப் பயிற்சிகள் தேவைப்படும். முன்கோபியான ஒருவர் தன் மனதைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளை மேற்கொண்டு அதனை நோக்கிய பயணத்தை முன்னெடுக்காவிட்டால் எத்தகைய நல்ல மாற்றமும் அவரிடம் நிகழாது என்பதே உண்மை.

...எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை... (அல்குர்ஆன் 13:11)

மன உளைச்சல் (Depression) அதிகரிப்பதனால் பாதிக்கப்படுவதாக எண்ணும் ஒருவர் இஸ்லாம் கூறும் இத்தகைய நிலைகளில் சிந்தனை ஓட்டங்களை நிலை நிறுத்துவதன் மூலம் வெற்றியடையலாம். எனவே இத்தகைய மனப் பயிற்சிகளோடு, இறைச் சிந்தனையை இரண்டறக் கலக்கச்செய்வதன் மூலம் கீழ்க்கண்ட இறை வசனங்களையும், நபிமொழிகளையும் தினசரி மனதில் தீர்க்கமாக நிலை நிறுத்தும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நிவாரணம் அடையலாம், இன்ஷா அல்லாஹ்:

சோதனைகள் எதிர் கொள்ளும்போது, "நாங்கள் அல்லாஹ்வுக்காகவே வாழ்வோம்; அவனிடமே மீள்வோம்" என்று கூறுவர். (அல்குர்ஆன் 2:156)

...அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன் 13:28)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன். மாறாக, கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா - புகாரி)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் அணையும். எனவே, உங்களில் ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளுச் செய்து கொள்ளட்டும்" (அத்தியா அஸ் ஸஅதி - அபூதாவூத்)

அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்." (அபூதர் - மிஷ்காத்)


பி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்: "என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?" இறைவன் கூறினான் "எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்." (அபூஹுரைரா - மிஷ்காத்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமை நாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்." (அனஸ் - மிஷ்காத்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "மூன்று விஷயங்கள் இறை நம்பிக்கையாளரின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்: ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகரித்துக் கொள்ளக் கூடாது." (அனஸ் - மிஷ்காத்)

சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அண்ணலார், "கோபம் கொள்ளாதீர் " என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "எனக்கு அறிவுரை கூறுங்கள்! "என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார்.
அண்ணலார் ஒவ்வொரு முறையும் "நீர் கோபம் கொள்ளாதீர்!" என்றே பதில் தந்தார்கள்.

(அபூஹுரைரா, புகாரி)

வாருங்கள்! கோபம் வெல்வோம்..! இம்மை, மறுமை இரண்டிலும் வெற்றி
பெறுவோம்..!

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Monday, September 3, 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 2)

விடிகாலைத் தொழுகை நேரத்திற்கு வெகு முன்பாகவே கண்விழித்து விடுகிறார்கள் இவர்கள்.

ஒரு நாளைக்கு 14 மணி நேரங்கள் என்ற கணக்கில் வாரத்திற்கு ஆறு நாட்கள், வெள்ளிக்கிழமையன்றும் ஓவர்டைம் கிடைக்கும் எனில் நோகும் உடலைக் கிடைக்கவிருக்கும் காசின் ஆசைகாட்டி ஒத்துழைக்க வைத்து கிளம்பிவிடுவதும, உச்சி வெயிலும் தணல் காற்றும் உள்ளும் புறமும் சுட்டெரிக்க தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் ஆபத்துக்கள் சூழ்ந்த புழுதி பறக்கும் சிறைச்சாலை போன்ற தொழிற்சாலைகள், கட்டிடப் பணியிடங்கள், உடலும் உள்ளமும் துவண்டு போய் காய்ந்த வியர்வையே போர்வையாக மாறியிருக்கும் மாலை நேரத்தில் துவண்டு நடக்காமல் ஓடிப்போய் அடித்துப் பிடித்து ஏறினால் தான் அழைத்து போக வரும் பேருந்தில் இடம் கிடைக்கும்.

நான்கு பேர் மட்டுமே தங்கப் போதுமான இடம் என்று சர்வதேசச் சட்டம் ஏட்டில் எழுதி வைத்துள்ள ஒரு அறையில் பதினான்கு பேருடன், ஒரு காலத்தில் சுத்த பத்தமாய் நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்ததை நினைவுகளில் நிறுத்தி, வீட்டு நினைவுகள் அதிர்ஷ்டவசமாக அழுத்தவில்லை என்றால் படுக்கையில் படுத்தவுடன் பத்து எண்ணுவதற்குள் கண்ணைச் சுழற்றும் கணங்களுடன், காலையில் அணிந்து செல்ல அதே அழுக்கு வியர்வைக் கரைசல் மணத்துடன் சுவற்றில் மாட்டியிருக்கும் யூனிஃபார்மும் அதற்குச் சற்றும் சளைக்காத விதத்தில் கல்லில் மாட்டிய ஈரத்துணியாய் ரணமான மனதுடன் தூங்கிப்போகின்றனர்.

வளைகுடா நாடுகள் 1950களின் இறுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பின் மூலம் ஏற்பட்ட பெரும் தொழிற்புரட்சியில் உண்டான மாற்றங்களின் விளைவாகப் பெரும் மனித வளம் இங்கே தேவைப்பட்டது. வளைகுடா நாடுகளில் 90% அளவிற்கு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். வளைகுடாவின் பரந்து விரிந்த தொழிலாளர் பிரச்னைகளை நாடுவாரியாக எடுத்துச் சொன்னால் கட்டுரை நீண்டுவிடும் என்று அஞ்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சாராரை மட்டும் கையில் எடுத்துள்ளோம்.

BMW சொகுசு கார்களில் உலாவரும், கோல்ஃப் விளையாடிவிட்டு ஒரு வாய் டீயை ஒரு மணிநேரம் எடுத்துக் குடிக்க ஏழு நட்சத்திர ஹோட்டல்களைத் தேடி அலையும், வளைகுடாவின் "சூடான" மாதங்களில் அடிக்கடி மேற்கத்திய நாடுகளில் "சன்"பாத் எடுக்கச் செல்லும் நபர்கள் இந்த ஆக்கத்தின் பட்டியலில் சேர்த்தியில்லை. பொறுப்பான உயர்பதவிகளில், தலைசிறந்த நிர்வாகத்தினை நடத்தி வரும் தமிழ் அன்பர்களும் இதிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்.

வறுமைக்கோடு என்பது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கும் உண்டு என்ற புதிய இலக்கணம் படைத்து, சொல்லவொண்ணா துன்பமும் துயரமும் அடைந்து கொண்டிருக்கும் இந்திய - குறிப்பாக - தமிழக முஸ்லிம்கள் நிலை பற்றி இங்குப் பார்ப்போம்.

காரணம், கழுத்து வலிக்கும் உயரத்தில் கண்ணாடிக் கட்டிடங்களும், மார்பிள் பளபளக்கும் 'மால்'களுக்கும் இங்கே பஞ்சமில்லை. ஆனால் வெளியுலகில் பிரதானப் படுத்தப்படும் தரமான, ஆடம்பரமான பார்வைகளின் பின்னணியில் நசிந்து போயிருக்கும் பல நிகழ்வுகள் நம் பார்வைக்கே வருவதில்லை. அவற்றுள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வியர்வைத்துளி 1 - முபாரக்!

தலைக்கு மேல் கொளுத்தும் 49 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் கைகளுக்கு அணிந்திருக்கும் உறைகளை மீறிய சூட்டில் கட்டிடத்தின் நூறாவது மாடியின் மேல் தளத்திற்காக கம்பிகள் மேல் அமர்ந்து கான்க்ரீட் கொட்டும் இந்திய முஸ்லிம்களைப் பார்த்தால் கண்ணீர் வராத உள்ளம் கல்லேயன்றி வேறில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னால் வளைகுடா மண்ணை மிதித்த முபாரக், ஊரில் வளைகுடாவைப் பற்றி கனவு காணும் டிப்பிக்கல் இளைஞர்களில் ஒருவராக தன் இரு வருடச் சம்பாத்தியத்தை முன்பணமாக மும்பை ஏஜண்டிற்கு தாரை வார்த்துவிட்டு வந்தவர். வளைகுடா தொழிலாளர் சட்டம் இது போன்ற ஏஜண்ட் இலஞ்சமாக வாங்கும் பணத்தை சட்ட விரோதமாக கருதினாலும் கூட கண்ணீரையும் வியர்வைத் துளியையும் உணவாக உட்கொண்டு செழிப்பாக இவ்வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. (வாசிக்க: Saudi Arabian Basic Labor Legal Information for Indians.)

வளைகுடாவில் தான் சிந்திய முதல் வியர்வைத் துளியிலேயே அதன் பயங்கரமும் தலைக்கு மேல் குறிவைக்கப்பட்ட ஆபத்தும் முபாரக்கிற்கு புரிந்து விட்டது. அஸ்திவாரம் தோண்டும் முன்பே கட்டிடத்தின் வாடகைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடுவதால் அவசர அவசரமாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கிடையே தரக்கட்டுப்பாட்டினையும், தொழிலாளர்களின் பாதுகாப்பும் பற்றி பேச நிறைய முதலாளிகளுக்கு நேரமிருப்பதில்லை.

விளைவு, போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படாததால், தன் கண் முன்னே கான்க்ரீட் கலவைக்குள் சரிந்து புதைந்து போன தனது நண்பர்களை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் முபாரக். கம்பெனியில் கடந்த ஆறு மாதமாக சம்பளம் சரிவர வராத சூழலில் ஒவ்வொரு நாளும் இரவில் தத்தம் குடும்பத்தினைக் காப்பாற்றவும், நலிவுற்றிருக்கும் தன் சமுதாயத்தின் நிலை பற்றியும் பேசிப் பாதியிலேயே பிரிந்துவிட்ட தனது நண்பர்கள் நினைவு வர துக்கம் தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்திக் கொள்கிறார்.

12x7 சதுர அடி அளவிலுள்ள நான்குபேர் மட்டுமே தங்கக்கூடிய இவரது அறையில் பன்னிரண்டு பேருடன் தங்கியுள்ளார். மேல்மாடி டாய்லெட்டிலிருந்து கான்க்ரீட் கூரை வழியே சொட்டுச் சொட்டாய் கசியும் கழிவுநீருடன் தான் வாசம். ஒருவர் படுக்கையின் மீது அடுக்கடுக்காய் அமைந்துள்ள இன்னொருவர் படுக்கை. மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஒருபக்கம் என்றால், போல்ட் நட்டு சரியில்லாத இரும்புக் கட்டிலில் ஒருவர் திரும்பிப் படுத்தால் அவர் "அப்பார்ட்மெண்ட்"டில் உள்ள அனைவருக்கும் தூக்கம் கலையும். கம்பெனி கொடுக்கும் ஐநூறு திர்ஹத்தைக் கொண்டு இவரும் சாப்பிட்டு(?) உடுத்தி விட்டு எஞ்சியுள்ளதை வைத்து ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வித்தையை இங்கே தான் பார்க்க முடியும். ஓட்டல்களில் சாப்பிட்டு ராஜ போக (!) வாழ்க்கை வாழ சம்பளம் இடம் கொடுக்காததால் கிடைத்த சந்தில் அடுப்பை வைத்து கிடைக்கும் நேர இடைவெளிகளில் சமைத்துக்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை.

லேபர் டிபார்ட்மெண்ட் இதுபோன்ற கம்பெனிகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இவர் போன்றவர்கள் பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை. இரண்டு வருடத்துக்குள்ளாவது ஏஜண்ட் இடம் கொடுத்த கடனை வட்டியோடு அடைத்து விட்டு ஊர் திரும்பினால் கூட போதும் என்ற நிலையிலேயே பலர் தன்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்.

"பர்தாவுடன் மினி ஸ்கர்ட்டுகளையும், பள்ளிவாசல்களோடு சர்ச்சுகளையும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் கையாளும் வளைகுடா நாட்டு அரசாங்கங்களின் மனம் என் போன்றவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவில்லையே?" என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் இவர்.

அல்ஜஸீராவின் டாக்குமெண்டரி!

இந்த கண்ணீர்க்கதைகளை வெட்டிக்கதை பேசிக்கொண்டிராமல் கேமராவை இருட்டான லேபர் கேம்ப்களுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்து உலக அரங்கில் வெளிச்சமிடத் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதற்கு அல்ஜஸீராவிற்கு நன்றிகூற வேண்டும்.

"இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் - வளைகுடா தொழிலாளர்களின் வேதனைகள்!" என்ற பெயரில் டாக்குமெண்டரி அல்ஜஸீரா படம் பிடித்து உலகிற்குக் காட்டியுள்ளது. அல்ஜஸீரா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே உள்ள வீடியோவில் அதைக் காணலாம்.







(முதல் பாகம் மேலே / இரண்டாம் பாகம் கீழே)








வியர்வைத்துளி 2 - இப்ராஹிம்!

"மூன்று வருடங்கள் பதினோரு மாதங்கள்!" ஊர் போய் எத்தனை நாளாகிறது என்று 37 வயதான இப்ராஹிமைப் பார்த்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்தது இதுதான். பத்து வயது மகளுடனும் பன்னிரண்டு வயது மகனுடனும் இரு வாரங்களுக்கொருமுறை இண்டெர்நெட் போனில் உறவைப் புதுப்பிக்கும் இப்ராஹிம் "எங்களப் பாக்க எப்போ வர்றீங்க வாப்பா?" என்ற கேள்வியைப் பிள்ளைகள் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் வெளியேறியதில்லை.

"அல்லா காப்பாத்தணும்...இந்தியாவுக்கும் கல்ஃபுக்கும் இடையில ஏதாச்சிம் பெருசா தகராறு வந்து, எல்லா இந்தியர்களுக்கும் நாங்களே வேலை போட்டுத் தர்றோம். எல்லாத்தையும் திருப்பி அனுப்புன்னு இந்தியாவே கேக்கணும். எங்க நாட்டின் ஏர்போர்ட்டுகள் மூடப்படணும் அப்படியாச்சிம் எங்க குடும்பம் குட்டிகளோட சேர்ந்து நாங்க வாழ முடியுதான்னு பாக்கணும்!" என்றவரின் பேச்சில் தெறித்த இயலாமை முற்றிய வன்மம், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஊரில் சம்பாதிப்பதை விட நான்கு மடங்கு இங்கே கிடைக்கிறது என்பவர்களை விட "இதே நாய்ப்பொழைப்பை கேவலம் பார்க்காம ஊர்ல இருந்துகிட்டு உழைச்சேன்னா இதை விட எட்டு மடங்கு சம்பாதிக்க முடியும்" என்ற முணுமுணுப்புகள் கேட்பது இங்கே சகஜம். சரி! பின்னே அதைச் செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் மெளனம்தான் பதிலாகக் கிடைக்கிறது!

சிவந்த கண்களுடன் பேசியவரை பார்த்து துக்கம் தொண்டையில் பந்துபோல் சுழல, பாதித் தூக்கத்தில் இருந்த அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டேன். அடுத்த நாள் கருக்கலில் எழுந்து தெம்புடன் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் விழுந்தால் தான் முடியும். பல பேருக்கு கனவுலக தாம்பத்யமும், பிள்ளைகளுடன் கற்பனைகளில் கொஞ்சிப்பேசவும் முடிவது அந்த சில மணித்துளிகளில் தான்.

பெரும்பாலானோரின் சம்பாத்தியங்கள் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை நனவாக்குவதிலேயே செலவாகின்றன ஒழிய, தாங்கள் சம்பாதிக்கும் பருவத்திலேயே அதனை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பொருளீட்ட எண்ணுவதில்லை.

ஆர்ப்பாட்டங்கள்/எதிர்க்கும் குரல்கள்

எவ்வளவு தான் பிரச்னைகள் என்றாலும் ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் அசாதாரணம் என்றிருக்கும் துபாயில் கூட கடந்த வருடம் மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ததும், கண்ணில் பட்ட வாகனங்களை துவம்சம் செய்ததும் வளைகுடாத் தொழிலாளர்களின் பிரச்னைகளின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தியது எனலாம்.

உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புர்ஜ்-துபை கட்டிடத்தின் தினசரி பணிகள் தொழிலாளர்களின் புரட்சியில் சென்ற வருடம் ஸ்தம்பித்துப்போனது.

"இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்னைகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதைத் தீர்க்க முயன்று வருகிறோம்" என்று சொல்கிறார், துபையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அலீ பின் அப்துல்லாஹ் அல் காஅபி.

"இவர்களை நாங்கள் கட்டாயப்படுத்திக் கூப்பிடவில்லை" என்கிறார் அலீ அல் காஅபி. "இவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே நான் பார்க்கிறேன்" என்கிறார்.

ஆனால் மனித உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் மத்திய கிழக்கு பிரிவின் இயக்குனரான சாரா லீ விட்ஸன் அலீயின் இக்கூற்றை அடியோடு மறுக்கிறார் - "தனது சுயநலத்திற்காக அடுத்தவர்களின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்வது என்றால் அது இதுதான்!" என்று சாடுகிறார். "மெர்ஸிடிஸ் கார்கள் மூலமாகவோ, விண்ணை முட்டும் கட்டிடங்களாலேயோ மட்டும் வளைகுடா நாடுகளை உலக அரங்கில் மிளிர வைத்துவிட முடியாது. அத்தகைய வெற்றியும் வளர்ச்சியும், வளைகுடாத் தொழிலாளர்களின் நலனை முன்னுறுத்திக் கொண்டு சென்றால் தான் கிட்டும்" என்கிறார்.

வியர்வைத்துளி 3 - சாதிக் பாஷா!

இங்கே சம்பாதிப்பதைப் போன்று என்னால் ஊரில் மீன் பிடித்தே காலம் தள்ள முடியும் என்று அலட்சியமாக் கூறும் சாதிக் பாஷா தமிழகக் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். கடந்த நிமிடத்தில் அப்படிப் பேசியவர், பதினெட்டு வருடங்கள் கடந்தும் தன் எதிர்காலத்தைப் பற்றி தான் எவ்விதப் பிடிப்புமின்றி இருப்பதாகவும் எதிர்மறையாகப் பேசுகிறார். இத்தனை வருட காலங்களில் என்ன சம்பாதித்தீர்கள் என்றால் ஏற்கனவே இருந்த வாப்பாவின் நிலத்தில் தான் சிறிதாக ஒரு வீட்டை கட்டியதாகவும், ஒன்றே கால் லட்ச ரூபாயில் தனது தங்கைக்கு வரதட்சணை கொடுத்து "பெரிய" இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுத்ததாகவும் நாற்பதை நெருங்கும்போது தானும் கல்யாணம் செய்து கொண்டு இரண்டே மாதத்தில் இங்கே வந்து விட்டதாகவும் வேதனையுடன் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கூறும் சகோதரனைப் பாத்து எம்மால் விம்மாமல் இருக்க முடியவில்லை.

பொருளியல் குறிப்புகள்:

இந்தியாவின் வெறும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வளைகுடாவிலிருந்து வந்து சேரும் அந்நியச்செலாவணி ரூ. 126.40 மில்லியன் (ரூ. 12 ஆயிரம் கோடி) என்று அதிர வைக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்திக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தியோரு இலட்சம் இந்தியர்கள் வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் ஒரு அறிக்கையில் 36% பேர் 500 திர்ஹம் (US$ 120) சேமிப்பதாகவும், 37%பேர் 500 முதல் 1000 திர்ஹம் வரை (US$ 120-140)சேமிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரப் நியூஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி கடந்த வருடத்திற்கும் இவ்வருடத்திற்கும் இடையே ஏற்பட்ட பணவீக்கத்தினாலும் அமெரிக்க டாலரின் கிடுகிடு வீழ்ச்சியாலும் 30% சம்பளம் குறைந்திருக்கிறது. (கடந்த வருடம் திர்ஹம் மதிப்பு 12.70 ஆக இருந்தது இன்றைய நிலவரத்தில் 11.00 ஐ விட குறைந்து போயுள்ளது. சவூதியில் இன்னும் மோசம், அது 10.70 ஐயும் விட மோசமாக குறைந்தவண்ணம் உள்ளது.)

ஒருபக்கம் பணவீக்கம் காரணமாக வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் கிடுகிடுவென ஏறும் விலைவாசிகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. வீட்டு வாடகை எட்ட முடியாத உயரத்தில் பன்மடங்கு எகிறுவது ரியாத், ஜெத்தா, அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் என்றால் துபாய் மற்றும் கத்தரில் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சவூதியின் சில பகுதிகளைத் தவிர வளைகுடாவெங்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு தயாரிப்புக்குப் பெயர் போன வளைகுடாவில் 50% விலை உயர்ந்துள்ளது. மருத்துவம், இன்னபிற செலவுகள் பற்றி கேட்கவே வேண்டாம். விமான சேவைகளில் இருப்பவற்றிலேயே மிகமட்டரக சேவைகளுக்குப் பெயர் போன இந்திய வளைகுடா மார்க்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் சந்தடி சாக்கில் ஏற்றிய கொள்ளை லாப விலை உயர்வினாலும் பாதிக்கப்படுவது அடிமட்டத் தொழிலாளர்களே!

Pravasi Bandhu Welfare Trust (PBWT) அமைப்பின் சேர்மன் கே.வி. ஷம்சுத்தீன், இதுபற்றிக் கூறுகையில் இந்தியர்கள் வளைகுடாவில் சம்பாதிப்பதால் பயனொன்றும் இல்லை என்பதை இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த வருடங்களை விட இந்தியர்கள் வளைகுடாவில் சேமிப்பது 40% குறைந்துள்ளது என்பதான் உண்மை. இதில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளக்காரர்களே" என்கிறார்.

தற்போது வேலை செய்து வரும் வளைகுடா தொழிலாளர்கள் 1. செயல்திறனற்றவர் (Unskilled), 2. ஓரளவு கை தேர்ந்தவர் (Semi-skilled) மற்றும் 3. தேர்ச்சி பெற்றவர்(Skilled) என்ற மூன்று நிலைகளில் கட்டுமான, தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுகின்றனர். 500 திர்ஹமுக்குக் கீழே உள்ள சம்பளங்களில் வேலை செய்யும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கின்றனர். டெக்னிஷியன்கள், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், எலக்ட்ரீஷியன்கள், புரஃபஷனல் ரீதியில் பார்த்தால் டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், அக்கவுண்ட்டண்ட்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவெனில் படிப்புத் தகுதி அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புக்களும், வழங்கப்படும் வசதிகளும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமில்லை.

இந்தியாவில் ஒளிரும் வேலை வாய்ப்புக்கள்:

இந்தியாவில் மிளிரும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் இளம் தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் இளம் தலைமுறையினர் இப்போது குறைந்த சம்பளத்தில் நுழைவதில்லை. "கை நிறைய" காசு சம்பாதிக்கனும்னா கல்ஃப்க்கு போவனும்" என்கிற பழைய சித்தாந்தமெல்லாம் மாறியிருக்கிறது. ஆனால் வளைகுடாவில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் வருவதற்கு முன் தான் கண்ட இந்தியாவே இன்னும் கண்ணில் நின்று கொண்டிருப்பதை ஒரு வித துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் 2006-ஆம் வருடத்திற்குப் பிறகு வளைகுடாவில் வசந்தம் வீசும் என்று எல்லாம் எதிர்பார்த்து வேலை தேடி வருபவர்கள் கையில் வெண்ணையை வைத்து நெய்க்கு அலையும் "பாவப்பட்டவர்கள்" என்கிறது இன்னொரு அறிக்கை.

இப்போது இந்தியாவில் IT கம்ப்யூட்டர் இஞ்சினியர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஆச்சரியப் படத்தக்க வகையில் சிவில் இஞ்சினியர்களுத்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வளைகுடா நாடுகளுக்குத் தேவைப்படும் சிவில் இஞ்சினியர்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்து வர மறுத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவுகளும் அதிக சம்பளமும் தயாராக இருக்கிறது.

"உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதை விட அல்லது அதே அளவிற்கு சம்பளம் இந்தியாவிலேயே கிடைப்பதால் கஃல்ப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவில் வந்து பணியைத் தொடர்கிறார்கள்" என்கிறார் கட்டிடக்கலை தொடர்பான பெங்களூரிலிருந்து இயங்கும் Civil Aid Technoclinic Pvt. Limited நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சுனில் சன்னாட்.

வளைகுடாவைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்

வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேண்டி விரும்பிக் கேட்கும் உழைப்பிற்குப் பெயர் போன இந்திய தொழிலாளர்கள், இன்றைய தேதிக்குப் போதுமான அளவிற்கு வளைகுடா செல்லத் தயாரில்லை என்பதே யதார்த்த உண்மை. வளைகுடா நிறுவனங்கள் இந்திய விசா இல்லை என்று கையை விரித்த காலம் போய் விசாக்களை வைத்துக்கொண்டு, இந்திய மேன்-பவர் ஏஜண்ட்டுகளிடம் மல்லுக் கட்டுகின்றன.

Pravasi Bandhu Welfare Trust, ஷம்சுத்தீன் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்த மாத வருமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தன் குடும்பத்தினருக்கு மாத செலவுகளுக்கு உரிய பணம் அனுப்புவதற்காக தன்னுடைய அத்தியாவசியச் செலவையும் சேமிக்கும் கொடுமையைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

படிப்பு, வருமானம், குடும்பத்தை வளைகுடாவில் குடியமர்த்தும் பதவிநிலை, அவர்களை நம்பியிருப்போர், நாட்டிற்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள், சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் வழிமுறைகள், ஓய்வு பெறும் சூழல்கள், முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான வளைகுடா பணியாளர்கள் பத்தாயிரத்து நூறு பேர் பங்குபெற்ற இந்த சர்வேயில் 98 சதவீதம் பதிவான சர்வே விபரங்கள் கீழே:


சம்பாத்தியமும், சேமிப்பும்:
---------------------------------

5% - நிரந்தமாக ஓய்வு பெற்று நாட்டிற்குத் திரும்பிச்சென்றால் ஓரளவு நிம்மதியாக வாழும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளது.

2% - பணத்தை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர்

10% - குடும்பத்துடன் வளைகுடாவில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சேமிப்பில்லை.

15% - நான்காயிரம் திர்ஹமுக்கு மேல் சம்பாதிப்போர். சேமிப்பில்லை.

26% - விபரங்களைக் கொடுக்க மறுத்துள்ளனர்


இந்தியாவிற்கு பணம் அனுப்புவோர் விபரம்:
----------------------------------------------------------

31% ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார்கள்

24% இரு மாதங்களுக்கு ஒருமுறை

11% மூன்று மாதங்களுக்கு

34% பணம் அனுப்பியதில்லை. காரணம் சேமிப்பில்லை

23% சம்பாதிப்பதில் ஓரளவு சேமிப்பு இருக்கிறது


"வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது" என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், "சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்கிறார். "தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்" என்கிறார்.

இவ்வாக்கத்தை நாம் எழுதத் துவங்கியதன் பின்னணி யாதெனில், படிப்பறிவில்லாத தமிழ் இஸ்லாமியச் சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்டுமந்தையைப் போன்று செயல்பட்டு வரும் பழைய சித்தாந்தங்களைச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். பதினைந்து வருடங்கள் வளைகுடாவில் குப்பை கொட்டி பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்ட ஒரு தந்தையே எப்படியும் பாஸ்போர்ட் எடுத்து தன் மகனை வளைகுடாவிற்கு அனுப்பிவிடவே எத்தனிக்கிறார். இது, வளைகுடா தொழிலாளர்கள் படும் அல்லல்களின் பின்ணனியை முற்றிலும் அறியாததாலா? இல்லை குறுகிய காலத்தில் கைநிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்ற அரதப்பழசான சிந்தனை தரும் உந்துதலா?

எது எப்படியோ, தமிழ் இஸ்லாமியச் சமுதாயம் இத்தகைய குறுகிய சிந்தனையிலிருந்து வெளியேறி தீர்க்கமான ஒரு புதுயுகத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆதங்கமும் அவாவும். தெளிவான சிந்தனையிலிருந்து புறப்படும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பொருளீட்ட வளைகுடா நாடி வரும் சமுதாயம், இப்போது சந்திக்கும் இழிநிலையில் இருந்து வெளியேறி புதியதொரு சரித்திரம் படைக்கும்.

கல்வியின் மகத்துவத்தையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் இதன் மூலம் உணரும். இதனை நம்மிலிருந்து துவங்குவோம். இறைவன் நாடட்டும்.

நன்றி!

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)


< பகுதி 1

Saturday, August 18, 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.

ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!

"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.

அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.

அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.

"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."

"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.

சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.

உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.

அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.

ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.

அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.

முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?

வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.

கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.

சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?

இறைவன் நாடினால் தொடரும்....

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Thursday, August 16, 2007

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான விதவைகளும்!

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.

பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.

சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.

நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"

இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன். அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.

நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்

ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.

அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.

அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.

துயரமான வியாபாரம்

விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார். "ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.

வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.

தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:

தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:

"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.

அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?

- அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

மறுபதிப்புகள்: (தட்ஸ்தமிழ்.காம் / PKP Blogs / முதுவை ஹிதாயத் / சங்கப்பலகை / நீதியின்குரல் / முத்துப்பேட் எக்ஸ்பிரஸ் / நிதர்சனம்.நெட் / நெருடல்.காம் / உணர்வுகள்.காம் / ஈராக்கின் நிலமை)


இந்தச் செய்திக்கட்டுரையை நாம் பதிக்கும் வேளையில் நேற்று (15-08-2007) நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 175 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதுகுறித்த அல்ஜஸீரா தொலைக்காட்சியின் Inside IRAQ நிகழ்ச்சியை இந்த வீடியோவில் காணலாம்.

Saturday, August 11, 2007

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 4)

யூத பாரம்பரியத்தினால் உரமிடப்பட்டு, உலக மக்கள் மனதில் பசுமையாக வளர்த்து விடப்பட்ட இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத அச்சத்தை, இன்று அறிவிக்கப்படாத போக்கிரியாக, உலக நாடுகளின் பெரியண்ணனாக எண்ணி வலம் வரும் அமெரிக்க நிர்வாகம் மிகவும் நேர்த்தியுடன் கட்டுக் குலையாமல் கட்டியெழுப்பி சர்வதேச அளவில் மக்கள் மனங்களில் மிக உறுதி வாய்ந்த கட்டிடம் போன்று உயர்ந்து நிற்க வைத்திருக்கின்றது. மதப்பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் யூதர்களும் அமெரிக்கர்களும் எலியும் பூனையும் என்றாலும், இஸ்லாத்தினை எதிர்க்கும் விஷயத்தில் இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

நவீன உலகின் சட்டாம்பிள்ளையாக நிரந்தரமாக வலம் வரவேண்டும் என்ற அதிகார வெறி, தன்னை எதிர்ப்பவர்களையும் எதிர்காலத்தில் தனக்கு மிகப்பெரிய சவாலாக வர நேரிடலாம் என கணிக்கப்படுபவர்களையும் நிர்மூலமாக்குவதில் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வைக்கின்றது. அமெரிக்க நிர்வாகத்தின் இந்த அதிகார வெறியே, பாரம்பரியமாக அவர்களின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் நேர் எதிர் கொள்கையுடைய யூதர்களோடு தற்காலிகமாய் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர்களின் திட்டங்களை முன்னெடுத்து செல்ல வைக்கின்றது.

ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால் அமெரிக்க நிர்வாகம், யூதர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டது என்பதை எவரும் உணரலாம். உலகின் அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அரும்பாடுபட்டுச் சித்தரித்துக் கொண்டிருக்கும் இவ்விரு சக்திகளும் ஒரே உறையில் இருக்க முயலும் இரு கத்திகள் என்பதை உலகம் கண்டு கொண்டு வருகிறது. ஒருவருக்கு இஸ்லாத்தை அழிப்பது தான் நோக்கம் எனில், மற்றவருக்கு உலக அதிகாரத்தை கையில் வைத்திருப்பது மட்டுமே பிரதான நோக்கமாகும். உலக அதிகாரத்தை கையில் வைக்கக் காயை நகர்த்தும் அமெரிக்கா, தன் குறிக்கோளை எட்ட மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை, யூதர்களை உள்ளும் புறமும் நன்றாக ஊட்டி வளர்த்து வைத்திருக்கின்றது.

“ ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு
கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை
ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே
இவை செயல்படுத்தி வருகின்றன. ”

இதற்கு உதாரணமாக மத்தியகிழக்கில் அமெரிக்கா நடத்தும் நாடகத்தை கூறலாம். உலகில் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக உருவகப்படுத்தும் அதேவேளையில், மத்திய கிழக்கை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும்படியாக, ஒரு பக்கம் இஸ்ரேல் எனும் அபகரித்து உருவாக்கப்பட்ட யூத நாட்டிற்கு நவீன ஆயுதங்களை வாரி வழங்கி விட்டு, பலகீனமான இராக்கை உயிர்க் கொல்லி பயங்கர ஆயுதங்களைக் கையில் வைத்திருப்பதாக கூறி கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.

இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஒரு காலத்தில் தன்னால் இரானுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு அமெரிக்காவுக்கு கட்டுப்பட மறுத்த சதாம், அதிரடியாக தனது எண்ணெய்க் கையிருப்பை யூரோவுக்கு மாற்ற முனைந்ததும், மத்திய கிழக்கில் ஓர் இஸ்லாமிய கூட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து அரபு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து அதனை முதன் முதலில் அப்போதைய யூதர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் ஃபலஸ்தீனின் அதிபராக(!) இருந்த யாசர் அரஃபாத் வரவேற்றது தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியே விட்டால் நாளை அமெரிக்காவிற்கு மிகப்பெரும் சவாலாக அரபு நாடுகள் ஒன்றிணைந்து களமமைத்து விடுமோ என்ற அச்சத்திலேயே, அமைதிக்காக உருவாக்கப்பட்டு இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டுவரும் ஐநா சபை உள்பட உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து கடுமையாக எதிர்த்தபோதும், புஷ் இராக்கை நிர்மூலமாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றார்.

ஒரு பக்கம் தானே நேரடியாக முஸ்லிம் நாடுகளை ஒவ்வொன்றாகக் குறி வைத்து தகர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளை, மத்திய கிழக்கின் அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் ஃபலஸ்தீன் ஆக்ரமிப்புப்பூமியான இஸ்ரேலுக்கு அதன் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விட பலமடங்கு அதிகமான அளவில் நவீன ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. புருவத்தைத் தூக்கும் உலக சோம்பேறி நடுநிலைவாத நாடுகளை திருப்திப்படுத்த, (இஸ்ரேலிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள) அரபு நாடுகளுக்கும் ஒரு பெயருக்காக வீசி எறிகிறது. சமீபத்தில் அரபு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கிய ஆயுதங்களின் கணக்கீடு (நன்றி: கல்ஃப் டைம்ஸ் 29/07/2007 பதிப்பு) இதனைத் துல்லியமாக தெரிவிக்கின்றது. இஸ்ரேலுக்கு 30 பில்லியனுக்கும் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் சேர்த்து 20 பில்லியனுக்குமான அடுத்த பத்து வருடங்களுக்கான ஆயுத, ராணுவ வினியோகத்திற்கான ஒப்பந்தப் பட்டியல் இங்கே:

சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத விற்பனை மூலம் கொள்ளை இலாபம் ஒரு பக்கம், எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக எந்த ஒரு நாடும் முளை விட்டுக் கிளம்பி விடாமலிருக்க, அவர்களின் சிந்தனை தன் பக்கம் திரும்பா வண்ணம் உள்நாட்டுப் போரைத் தூண்டும் குழப்பங்களைத் தொடர்ந்து விளைவிப்பது என்று கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியாக ஒருவர் மாற்றி ஒருவர், தங்களின் இலட்சியக் கனவை பிறர் உணர நேர இடைவெளி கொடுக்காமலேயே திறமையாகச் செயலாற்றி வருகின்றனர்.

அதிகாரத்தை அடித்துப்பிடித்து நிலை நிறுத்திக்கொள்ள இவ்விரு கூட்டமும் இன்று எடுத்துக்கொள்ளும் இவ்விதமான ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. அதிகாரத்தில் தற்போது இருக்கும் முன்னோடிகள் தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு தாம் செயல்படும் முறைகளைக் குறித்து ஓர் அறிவிக்கப்படாத செயல்முறை வகுப்பையே நடத்துகின்றனர் எனலாம். இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படையில் அமைந்த இச்செயல்பாடுகள் அதிகாரத்திற்காக அடுத்தடுத்து பதவிக்காக போட்டியிட முன்வருபவர்களுக்கு நல்ல(?) ஓர் முன்மாதிரியாகவும், ஊடாக போஷாக்குடன் வளர்த்து வந்த இஸ்லாமோஃபோபியாவையும் சேர்த்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் உதவுகிறது.

இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் அமெரிக்க அதிகாரத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர், தனது இலக்காக இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை குண்டு போட்டுத் தகர்க்க வேண்டும் என முழங்கி இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஏற்கனவே இதனையே கடந்த 2005ல் கூறியிருக்கிறார் என்பதால் தற்போது அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இவர் ஃபோபியா உச்சத்திற்கு ஏறி வார்த்தைகளாக வெளிவந்ததை, மீண்டும் ஒருமுறை அலடசிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை.

ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், (இத்தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் குறிப்பிட்டது போன்று) முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே இவை செயல்படுத்தி வருகின்றன.

ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களை பிளவுபடுத்த யூதர்கள் கையாண்ட குயுக்தியாக, நபி(ஸல்) அவர்களின் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை வரலாற்றில் நபியவர்கள் செய்யாத, செயல்படுத்த, கூறாத விஷயங்களை அவ்வாறு நடந்ததாகவும், இடைச்செருகலிட்டு இட்டுக்கட்டினார்கள் எனில், தற்காலத்தில் அமெரிக்கா கையாளும் முறை வித்தியாசமான, அதிபயங்கரமான முறையாகும்.

“சுதந்திரத்தை விரும்பும் நம்மையும், நம் நாட்டையும் அழிக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளால் திட்டமிடப்படுகின்றது" - அமெரிக்காவில் எந்தவொரு மூலையில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் மைக்கை பிடித்து ஜார்ஜ் புஷ் முழங்கும் வழமையான இந்த வீர வசனத்தின் பின்னணி என்ன என்பது தற்போது விளங்கியிருக்கும்.

சமீபத்தில் பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அநியாயமான முறையில் சிவப்பு மசூதி மீது நடத்திய தாக்குதலின் இறுதியில் “இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அதிபர் முஷாரப்பின் செயல்பாடு பாராட்டத்தக்கது. முஷாரப் என் உற்ற தோழன்” என உச்சி முகர்ந்திருந்த புஷ், இன்று பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க நேரும் என அந்தர் பல்டி அடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிவப்பு மசூதி இமாம் தனது இறுதி தருணத்தில் கூறிச் சென்றது போன்று, இன்று பாகிஸ்தான் பொதுமக்களாலேயே அங்கு ஓர் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் வந்ததாலேயே புஷ் அந்தர்பல்டி அடிக்கத்துவங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

விபச்சாரம், போதைப்பொருட்கள் மூலம் இளைய சமுதாயத்தை சீரழிக்க முனைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்ததை, மேற்கத்திய சீரழிந்த நாகரீகத்தில் அதிநாட்டம் கொண்ட முஷரப் கண்டுகொள்ளாத காரணத்தாலேயே சிவப்பு மசூதியின் மாணவ-மாணவிகள், தாமாகத் தெருவில் இறங்கி பியூட்டி பார்லர்கள் என்ற பெயரில் நடந்த விபச்சார விடுதிகளை திடீர்சோதனை நடத்தி சில விபச்சார பெண்களை சிறைபடுத்தினர் என்பது அனைவரும் அறிந்த காரியமாகும்.

“ இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள்
எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்?... என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. ”
“இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம்" என்று ஒருபுறம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகம், மறுபக்கம் “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” என்று எதிர்மறையாகப் பேசுவதை கவனிக்கும் எவருமே, “இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள் எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்? அவ்வாறு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அமைதியான இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வருவார்களா? அல்லது அமைதியை போதிக்கும் இஸ்லாத்தை தெளிவாக கற்றுக் கொண்ட எவராவது பொது அமைதிக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களா?” என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. இது தான் புஷின் தந்திரத்திற்கும், அதீத முயற்சியுடனான திரும்பத் திரும்ப புழக்கத்தில் அவ்வார்த்தைகளை விட எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஒருபக்கம் “இஸ்லாமிய தீவிரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து” என புஷ் நிர்வாகம் முழங்கும் அதேநேரம் மறுபுறம் மறைக்கப்படும் உண்மைகளையும், பிரபல செய்தி ஊடகங்களுக்குப் பொய்களை மெய் போல் சித்தரித்துத் தயாரித்து அளிக்கும் நயவஞ்சத்தினையும் செவ்வனே செய்தது. நீண்ட காலத் திட்டத்தின்கீழ் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சாதுரியமான திட்டமிடுதல் நல்ல பலனையும் தந்தது. அடிப்படை கொள்கைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்ற பார்வையுடனேயே பொதுமக்கள் பார்க்கும் விதத்தில், மக்களின் சிந்தனையை மூளைச்சலவை செய்யும் இக் குறிக்கோள் வெற்றி பெற்றது. எதிர்மறையாய் நிகழும் அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது இஸ்லாமும் அதன் கோட்பாடுகளுமே என்ற துர்சிந்தனை தொடர்ச்சியாக மக்கள் மனங்களில் பயிர் செய்யப்பட்டது. இதன் மூலம் முஸ்லிம்களின் பின்னணி, அவர்களின் உடமைகள் ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஐய முத்திரை குத்தப்பட்டது. மேல் மட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை ஒவ்வொருவரும் கேள்விக்குட்படுத்தப்பட்டனர். ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் ஒவ்வொரு அசைவும் ஆவணமாக்கப்பட்டது.

"தேசியவாதத்தை முன்வைத்த எந்த ஒரு சித்தாந்தத்தையும் தரையில் வீழ்த்தி தவிடு பொடியாக்கும் மிகத்தெளிவான மற்றும் வலிமை வாய்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றுவதால் அவர்களிடம் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்" - மீடியா உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் ரூபர்ட் மர்டோ ஆஸ்திரேலியாவின் ஸிட்னியில் ஜூன் 26, 2006 ல் நடந்த ஒரு கூட்டத்தில் உதிர்த்த சொற்கள் இவை.

அமெரிக்க, பிரிட்டனின் ஊடகங்கள் எத்தகைய செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும், எவற்றை மறைத்து ஓரங்கட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய ஒரு பெருந்தலையின் அடிமனதில் இருக்கும் இத்தகைய துவேஷ எண்ண ஓட்டத்தை வைத்து அதன் பிரதிபலிப்பு ஊடகங்களில் எவ்வகையில் வெளிப்படுத்தப்பட்டு அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்து இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் பரஸ்பர அன்பையும் எடுத்தியம்பும் விதமாக பிரிட்டனில் இலட்சக்கணக்கானோர் நடத்திய பேரணியையும் அவர்கள் கையில் பிடித்துச் சென்ற பேனர்களையும் படம் பிடித்து பிரசுரிப்பதை ஏனோ தவிர்த்துக் கொண்ட ஊடகங்கள், கூட்டத்தினூடே ஒருவர் குறும்பு செய்யும் எண்ணத்தில் கையில் கொண்டு வந்த பேனர் ஒன்றை மட்டும் முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து தங்கள் குறிக்கோளை நன்றாக நிறைவேற்றின.

என்னதான் தலைகீழாக நின்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குறை சொல்ல முற்படுவதன் மூலம், தாம் எண்ணியதைச் செயல்படுத்தி விடமுடியாது என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொண்டு, இஸ்லாமிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கியமானவை, இஸ்லாத்தின் கோட்பாடுகளை இசைந்து, முறையாகப் பின்பற்றுவோரை சமூகப் பிணைப்பில் இருந்து வேறுபடுத்துவதாகும். அதற்கு ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் தீவிரவாதிகள் எனும் அடைமொழி.

இஸ்லாமியர்களிடமிருந்து மேற்கத்திய உலகைப் பிரித்தாளும் சூழ்ச்சியாக அடிப்படைவாத வலதுசாரி யூதகுருமார்கள் பயன்படுத்திய இவ்வார்த்தையை அமெரிக்காவோடு சேர்ந்து பிரிட்டனும் முன்னோர்கள் காட்டித் தந்த வழியிலேயே கன கச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

மேற்கத்திய ஊடகங்கள், அமெரிக்காவையும் பிரிட்டனையும் அச்சுறுத்தும் பயங்கரவாதச் செயல்களின் அதிகரிப்பை, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் பழி சுமத்துவதற்கான ஒரு நேர்த்தியான போர்க்கலைத் தந்திரமாகவே கையாண்டு வருகின்றன. இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை உணராத சாதாரண மக்களின் அறியாமையை முதலீடாக வைத்தோ அல்லது முஸ்லிம்களின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதன் மூலமோ இதை எளிதில் சாதிக்க திட்டமிட்டன. குழுக்களாகவும் அமைப்புகளாவும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டு இஸ்லாமிய சமூகத்தை முழு அளவில் பாதிப்படைய வைக்கும் விதத்திலான தாக்குதல்களைத் தொடுத்தன. இவை அனைத்திற்கும் அடிப்படை மூலகாரணமாக அமைந்தது இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் அன்றி வேறில்லை.

அறியாமையினாலோ சார்பு மனப்பான்மையினாலோ மேற்குலகில் அவ்வப்போது எழும் கூக்குரல்கள் முக்கியமாக, செயல்முறைக் கொள்கைகளை வகுக்கும் சமூகம், இஸ்லாத்தின் மீது பழியைச் சுமத்த உறுதியுடன் முடிவு செய்தது. மெல்லும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்?

இஸ்லாத்தின் மீதான துவேஷத்திற்கானத் தீனியாகக் கடந்த 9/11 பயங்கர நிகழ்வுகளின் மூலம் எழுந்த அச்சம் கலந்த ஐயப்பாடுகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான இயங்குவிசையை மீண்டும் தூண்டிவிட்டது. War on Islam என்பதைச் சூசகமாக War on Terrorism என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாத்தைத் தனிமைப்படுத்த முயற்சிகள் செய்தன. இன்று வரை உலக அரங்கில் நிரூபிக்கப்படாத 9/11 குற்றத்தைப் புரிந்தவராக கருதப்படும் (Prime Suspect) ஒஸாமா பின் லேடன் "இஸ்லாமியத் தீவிரவாதி" என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார். எவரும் “அமைதி மார்க்கமான இஸ்லாத்துடன் தீவிரவாதம் எவ்வாறு சேரும்” என்ற கேள்வி எழுப்பும் மனநிலையிலேயே இல்லை. மேற்கத்திய ஊடகங்களோ உணர்ச்சிவசப்பட்டு ஒருபடி மேலே போய் "அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தைத் தகர்த்த ஒஸாமா" என்று கோயபல்ஸ்தனத்தையும் திறமையாகக் கையாண்டு வருகின்றன.

அதன்படி, இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் இவர்களால் வகுக்கப்பட்டன.

அந்தத் திட்டங்கள் என்ன?

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Wednesday, August 8, 2007

பெஸ்ட் பேக்கரி வழக்கில் தீர்ப்பு!



செய்தியைத் தெளிவாக படிக்க, படத்தின் மீது கிளிக்கவும்.
நன்றி: தினத்தந்தி (25-02-2006)

காலியாகிறதா முஸ்லிம் ஓட்டு வங்கி?

கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன் நகர்கிறது தமிழக சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல். புதிதாக அரசியல் பட்டிருக்கும் முஸ்லிம் வாக்கு வங்கியின் விழிப்புணர்வாக இதை நாம் புரிந்து கொள்ளலாம். வர இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் அமைப்புகள் தங்கள் கூட்டணி சீட்டு பேரத்திற்கு இந்த கோரிக்கையை துருப்புச்சீட்டாக பயன்படுத்த போகின்றன.

"கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கும்" என்று தமிழக முதலமைச்சர் கூறிய உடனேயே அதற்கு எதிரான கருத்துக்களை பத்திரிகைகள் கவனமாய் முக்கியத்துவப்படுத்துகின்றன. ராமகோபாலன், ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் வெளியிடுகின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றது இடஒதுக்கீட்டின் வழியாக மேலெழுந்து வந்த சமூகத்தின் பத்திரிகையான 'தினத்தந்தி'. 'கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டோர் என்று ஒரு பட்டியலை வழங்க சம்மதிப்பார்களா? (இரா.சோமசுந்தரம் தினமணி அக்.23. 2005) என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு எதிரான தனது குரலை பதிவு செய்கிறது தினமணியின் அரசியல் அரங்கம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற வட்டங்களைத் தாண்டி அதிகார அமைப்பில் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டோர்கள் பங்கேற்பதற்கான சமூக நீதி நடவடிக்கையே இடஒதுக்கீடு.

பொதுவாக இந்துத்துவ மயமான அரசியல், அறிவுத்தளங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும் இடஒதுக்கீடு குறித்து ஏதாவது ஒரு முடிவை அறிவித்தாக வேண்டிய நெருக்கடியில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் இருக்கின்றன.

சமீபத்தில் குமுதம் வார ஏடு தமிழக அரசியல் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பின்படி. தி.மு.க. தலைமையிலான ஏழு கட்சி கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருக்கின்ற வாக்கு வித்தியாசம் ஏழு சதவீதம் என்று பதிவாகி இருந்தது. இந்த சதவீத இடைவெளியை இட்டு நிரப்ப அ.தி.மு.க. தலைமை எல்லா தளங்களிலும் தன் வலையை விரித்துப் போட்டிருக்கிறது. சலுகைகள், நலத்திட்டங்கள், மாநாடுகள், கருணைத் தொகைகள் என்று அரசாங்கத்தின் அறிவிப்புப் பலகை புதிய புதிய செய்திகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் பவனி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவான சில அசைவுகளை இது பரவலாக உருவாக்கினாலும் மொத்தமாக ஒரு வாக்கு வங்கியை அ.தி.மு.க. குறிவைக்கிறது. அதற்கு ஏற்றதுபோல் முஸ்லிம் வாக்கு வங்கி இருக்கிறது. தமிழக அரசியல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை ஜெயலலிதா பரிசீலிப்பதாக தெரிவித்திருப்பது தனக்குத் தேவையான ஆதரவு வாக்குகளை மொத்தமாக பெறுவதற்குரிய அவரின் அரசியல் நடவடிக்கையே இது எனத் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக தி.மு.க.வுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்த போதும் தி.மு.க.விலிருந்து முஸ்லிம் வாக்கு வங்கி பெரும்பாலும் அப்படியே இருந்தது. முஸ்லிம்களின் அரசியல் எதிரியான பாரதீய ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போது அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குவங்கி அ.தி.மு.க.விற்கு ஆதராவாக திசை மாறியதே தவிர பெரிய அளவில் இதுவரையில் அ.தி.மு.க. முஸ்லிம் வாக்கு வங்கியை பெற்றிருக்கவில்லை.ஆனால் இந்த முறை இடஒதுக்கீட்டை முன்வைத்து நடத்தப்படும் சிறுபான்மை அரசியல் தி.மு.க.வுக்கு சில பின்னடைவுகளை முஸ்லிம் வாக்கு வங்கியில் உருவாக்குமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. 'முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' இதுதான் எங்கள் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்குத் தான் எங்கள் ஓட்டு (புதிய பார்வை செப்.16-30) என்று கூறுகிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் போ.ஜவாஹிருல்லா.

"முன்பு ஒருமுறை கமுதி பஷீர் (தேசியலீக்) நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கலைஞர் கமுதி பஷீரின் கோரிக்கையான இடஒதுக்கீடு குறித்து தனது அரசாங்கம் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து நிச்சயம் ஆவனச் செய்யும் என்று உறுதி அளித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினார்கள். ஆனால் அவர் (கருணாநிதி) தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை" (சமநிலைச் சமுதாயம்-அக்.2005) என்று நேரடியாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் வர்த்தக பிரமுகர்களில் ஒருவருமான ஏ.வி.எம். ஜாபர்தீன். இந்த வெளிப்பாடுகள் எல்லாம் தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உரசல்களின் வெளிப்பாடுகள்.

'தி.மு.க.வின் முஸ்லிம் வாக்கு வங்கி பலகீனப்பட ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன' என்கிறார் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் தமீம் அன்சாரி. 1991-ல் பா.ம.க.வுடன் பழனிபாபா கூட்டணி உருவாக்கிய காலம் தொட்டுத் தொடங்கியது இந்த சரிவு. கோவைப் படுகொலையில் அன்றைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு நடந்து கொண்டது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்ற தி.மு.க.வின் அசைவுகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.விடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கின்றன என்றார் அவர்.

ஆனால் 'கலைஞரை நம்பலாம். கலைஞரிடமிருந்து முஸ்லிம்கள் அன்னியப் படவில்லை' என்கிறார் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் டாக்டர் சையது சத்தார்.

"புதிதாக வாக்களிக்கத் துவங்கியிருக்கும் முஸ்லிம் இளைய தலைமுறையும், இந்தத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்க இருக்கின்ற புதிய முஸ்லிம் இளைஞர்களும் தி.மு.க. மீதான நம்பிக்கை எதையும் வைத்திருக்கவில்லை. வேறு மாற்று எதுவும் இல்லாத சூழலில் இந்த புதிய தலைமுறை முஸ்லிம் வாக்காளர்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும்" என்கிறார் வஞ்சிக்கப்பட்டோர் அமைப்பின் பொறுப்பாளர் கே.எம்.ஷரீப்.

ஆயிரம் ஆண்டுகாலம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, வாழ்வியல், பொருளாதார ஓட்டங்களுடன் தங்களை ஒன்றிணைத்து வாழ்ந்த தமிழக முஸ்லிம்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் மயப்பட்டார்கள். தமிழ்ச் சூழலில் பார்ப்பனியத்திற்கு எதிரான, இந்துத்துவத்திற்கு எதிரான போரை பெரியார் தொடங்கிய போது அவரோடு முஸ்லிம் சமூகம் அரசியல் களத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. பெரியார் முன்னெடுத்துச் சென்ற சமூக நீதிப் போராட்டத்தில் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற இஸ்லாத்தை முன்வைத்தார். இனஇழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற கோசம் முன் வைக்கப்பட்டது. இஸ்லாம் குறித்த சில சின்னச் சின்ன விமர்சனங்களுக்கு அப்பால், இஸ்லாமிய சமூகத்தோடு பெரியார் கொண்டிருந்து உறவு வலுவானதாகவும் கொள்கை ரீதியானதாகவும் இருந்தது.

பார்ப்பன எதிர்பபு, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலையின் சில அம்சங்கள் உள்ளிட்ட பல புள்ளிகள் பெரியாரும் முஸ்லிம்களும் சந்திக்கும் முக்கிய சந்திகளாக இருந்தன. இறுதிவரை இந்தக் கொள்கை ரீதியான உறவு பெரியாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வலுவாகவே இருந்தது. பெரியாரிடமிருந்து விலகி தி.மு.க. உருவாகி அதன் முதல் பத்து ஆட்சி ஆண்டுகள் இந்த உறவை தி.மு.க. வைத்திருந்தது. ஆனால் 1980களுக்குப் பின்னால் தி.மு.க.வின் செயல்பாடுகள் தி.மு.க.வின் மேட்டுக்குடி வாக்குகள், கருணாநிதியின் குடும்பம் என்ற சூழலுக்குள் சிக்கிக் கொண்டன.

தலித் மக்கள், சில இடைநிலைச் சாதிகள், முஸ்லிம்கள் என காலம் காலமாக தி.மு.க.விற்கு வாக்களித்து வந்த வாக்கு வங்கிகள் குறித்த அக்கறையோ அவர்கள் முன்னேற்றத்திற்கான எவ்வித செயற்திட்டங்களோ தி.மு.க.வினால் உருவாக்கப் படவில்லை. 70களில் உருவான மதுரை வஃக்பு வாரிய கல்லூரியை தவிர வேறு எந்த சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கைகளையும் முஸ்லிம்களுக்காக தி.மு.க. மேற்கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தலைமைகளும் தி.மு.க.வின் மீது நிர்பந்தம் எதையும் தங்கள் சமூகத்திற்காக கொடுக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. இதே காலகட்டத்தில் இடை நிலை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகம், மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகம் இரண்டும் கல்வி, தொழில் இதர பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் சமூக நலன்கள் சார்ந்து செயல்பட்டு ஓரளவு வெற்றியும் பெற்றன என்பதும் உண்மையே. ஆனால் முஸ்லிம் சமூகத் தலைமை இத்தகைய சமூகம் சார்ந்த அக்கரையுடன் செயல்படவில்லை என்பதும், இப்பொழுதும் கூட இந்த இடஒதுக்கீட்டுக்கான குரலில் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் பேரம் கேட்கக் கூடிய தொனி வெளிப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அதிகாரத்திற்கான எல்லா சமரசங்களுக்கும் கருணாநிதி தயாராகிய காலகட்டம் அது. ஆண்டு தோறும் காயிதேமில்லத் நினைவிடத்தில் மரியாதை செய்வது, நோன்பு காலத்தில் முஸ்லிம் கனவாண்களுடன் அமர்ந்து கஞ்சி குடிப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது என் பிணத்தின் மீதுதான் நடந்தேறும் என வசனம் பேசுவது என்ற எல்லையுடன் கருணாநிதியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் நின்று போயின. முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. மதிப்பிட்டதின் வெளிப்பாடு இது. திராவிட இயக்கத்தின் கடைசி கண்ணியமாக இருக்கக்கூடிய கருணாநிதி பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதியின் செயலை இராமகோபலான் விமர்சித்த போது, 'வேண்டுமானால் இராமகோபாலன் கூப்பிடட்டும் விநாயகர் சதுர்த்திக்குப் போய் கொளுக்கட்டை சாப்பிடுறேன்' என்று கருணாநிதியால் தயக்கமின்றி கூறமுடிந்தது.

இப்தார் நோன்பு திறப்பு, விநாயகர் சதுர்த்தி இரண்டும் பண்பாட்டு தளங்களில் அரசியல் படுத்தப் பட்டவைகள். பார்ப்பன எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி என்ற பொது கருத்தியலில் பார்ப்பனரல்லாதவரும் சிறுபான்மையினரும் ஒன்றிணைகிற அரசியல் பண்பாட்டு இணைப்பின் குறியீடாக இப்தார் இருக்கிறது. பார்ப்பன அதிகாரத்தை மீண்டும் நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த இரண்டையும் ஒரே தரத்தில் அணுகுவது என்ற கருணாநிதியின் பார்வை அவரது கொள்கைரீதியான பலவீனத்தையே காட்டுகிறது. இந்த சிக்கல்களுடனேயே இடஒதுக்கீடு குறித்த அரசியலில் முஸ்லிம்களின் அணிசேர்க்கை தி.மு.க.வுக்கு எதிராக மாறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தரும் பட்சத்தில் முஸ்லிம் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு போவது உறுதி என்கிறார் தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது. ஆனால் 'கலைஞரை நம்பலாம் ஜெயலலிதாவை நம்பமுடியாது. கலைஞர் என்பது ஏழுகட்சி கூட்டணி. எனவே அவர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய முழுமைக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வரமுடியும். ஜெயலலிதா ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார். அதில் ஒரு அவதாரம் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அவரது கருத்தும்' என்கிறார் முஸ்லிம் லீக்கின் சையது சத்தார்.

இடஒதுக்கீடு கோரிக்கை விசயத்தில் முஸ்லிம் லீக்கைத் தவிர பிற முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரே அணியில் நிற்கின்றன என்று தெரிகிறது. தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா, இந்திய தேசியலீக், த.மு.மு.க., தவ்கீத் ஜமாஅத் என பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் குரல்கள் சேர்ந்தே ஒலிக்கின்றன. 'நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜே.எம். ஹாரூன் தலைமையில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்ட போது கலைஞர் (அப்போது அவர் முதல்வர்) அதைத் தரமுடியாது என்று மறுத்தார். இப்பொழுது தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம் என்கிறார்' என்று பழைய சம்பவத்துடன் நினைவு படுத்திக் கூறுகிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. ஆனாலும் ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை நம்பலாம் என்கிறார் கொடிக்கால். ஜெயலலிதா பரிசீலிக்கலாம் என்றுதான் கூறிஇருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதன் பிறகு பரிசீலித்தல் என்ற வார்த்தையே காலம் தாழ்த்தும் முயற்சி தான் என்பது அவர் மதிப்பீடு.

இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு கலைஞர்தான் காரணம் என்று கூறுகிறார் த.மு.மு.க.வின் தமீம் அன்சாரி. காலம் காலமாக வாக்களித்த முஸ்லிம்களுக்கு கலைஞர் எதுவும் செய்யவில்லை. எனவே தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குகள் ஜெயலலிதா இடஒதுக்கீடு வழங்கும் போது அ.தி.மு.க.வுக்கு திரும்புவது தவிர்க்க முடியாதது என்கிறார் அவர்.

இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து இருக்க அப்படி கொடுத்தாலும் இதனால் பெரிய பலன்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்ற கருத்தும் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் வேலைக்கு ஆள் எடுப்பதையே பல ஆண்டுகளாக நிறுத்திவிட்ட சூழலில் இப்பொழுது இடஒதுக்கீடு பெறுவது என்பது பெரிய பலன் எதையும் தந்துவிடாது என்கிறார் கே.எம். ஷரீப். இது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால் பலன் இருந்திருக்கும் என்பது அவரது பார்வை. "இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை விடவும் முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வைப்பதே இன்றைக்குத் தேவையானது" என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. முஸ்லிம்கள் எந்தத் துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதை முன்னேற்றுவதற்கோ, அந்தத்துறை சார்ந்த நலன்களை பாதுகாப்பதற்கோ, அந்த துறைக்கான நிதிகளை அரசிடம் இருந்து பெறுவதற்குரிய உத்தர வாதங்களைப் பெற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொல்லி முஸ்லிம் அமைப்புகள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா.

இடஒதுக்கீடை மையப்டுத்தி முஸ்லிம் அமைப்புகளிடமும், புதிதாக வாக்காளர்களாக உருவாகி இருக்கும் முஸ்லிம் வாக்காளர்களிடமும் ஏற்பட்டிருக்கும் அசைவுகளைப் புரிந்து கொண்டு அதனை தனக்கு சாதகமான சக்தியாக மாற்றுவதில் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா முந்திவிட்டார் என்றே தெரிகிறது. 69% இடஒதுக்கீடு வழக்கு தீர்வுக்கு வந்த பிறகு தான் முழுமையான இடஒதுக்கிடு குறித்து பரிசீலிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் கருத்தோடு, அதுவரையிலும் தற்காலிகமாக எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள்)க்குரிய இடஒதுக்கீட்டிலிருந்து சில சதவீதங்களைத் முஸ்லிம்களுக்கு வழங்கலாம் என்று தெரிகிறது.

அப்படி வழங்கும் பட்சத்தில் ஒரு அறிவுப்பு வந்தால் முஸ்லிம் வாக்கு வங்கி அ.தி.மு.க.வின் பக்கம் நகர்வதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாரதீய ஜனதா என்ற எதிரியை வீழ்த்தவே காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க. தலைமை இவற்றை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாற்று உண்மை. வெறும் மதச்சார்பின்மை மட்டும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்ற அனுபவ அரசியலின் அடுத்த நகர்வுதான் இடஒதுக்கீடு கோரிக்கை. இந்த நகர்வுகள் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு என பல தளங்களில் விரிவடைய வேண்டிய காலத் தேவை இருக்கிறது. அப்படி விரிவடையும் போதுதான் அரசியல் அரங்கில் அவர்கள் குரல் இன்னும் கவனமாக பரிசீலிக்கப்படும். ஏற்கனவே தலித் மக்கள், இடைநிலை சமூகங்கள் குறிப்பாக வன்னியர்கள், தேவர்கள், நாடார்கள் என்று தனது வாக்குவங்கிகள் ஒவ்வொன்றாக தி.மு.க. இழந்துவரும் சூழலில் முஸ்லிம் வாக்குவங்கியும் கைநழுவிப்போவது கருணாநிதிக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல.

நன்றி: புதியகாற்று - மாதஇதழ் (நவம்பர் 2005)