Wednesday, September 17, 2008

கத்தரில் உருவாகும் உலகின் முதல் குர்ஆன் தோட்டம்!

உலகத்தின் முதல் குர் ஆனிய தோட்டம் (Qur'anic Botanical Garden) வளைகுடா நாடுகளில் ஒன்றான (தோஹா) கத்தரில் உருவாகிறது.

எதிர்காலத்தினை நிர்ணயிக்கும் சக்திகளான மாணவர் சமுதாயத்தினை மேம்படுத்தும் வகையில் கத்தரில் எஜுகேஷன் ஸிட்டியில் இத்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நகரத்தில் இந்த இஸ்லாமியத் தோட்டம் அமைவதன் மூலம் உலகக் கல்வி மையங்களுக்கும், ஆராய்ச்சி நிபுணத்துவ மையங்களுக்கும் இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அடிக்கல் நாட்டு விழா சென்ற வாரம் நடைபெற்றது. இதனை கத்தர் நாட்டு அரசரின் மனைவியான ஷேக்கா மோஜா நாஸர் அல் மிஸ்னாத் துவங்கி வைத்துள்ளார்.

150 க்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் இடம் பெற்றுள்ள மற்றும் ஏராளமான ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ள அனைத்து வகையான தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெறும். குறிப்பாக சுவர்க்கத் தோட்டம் (ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்) என்று வர்ணிக்கப்படும் தாவர வகைகள் அனைத்தும் இத் தோட்டத்தில் முதன்மையாக இடம்பெறும்.

உலகில் ஆங்காங்கே அமைக்கப் படும் சாதாரண Botanical Garden போன்றல்லாமல் இந்தக் குர் ஆனிய தோட்டம் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப் படுகிறது.

கல்வி, மார்க்க நன்னெறி, அறிவியல் ஆராய்ச்சி, தாவரவியலில் பதப்படுத்துதல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் மற்றும் பல்வேறு நுண்ணாராய்ச்சி விரிவாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது" என்கிறார் கத்தர் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் துணைத் தலைவரான டாக்டர் சைஃப் அல் ஹாஜாரி அவர்கள்.

குர் ஆனில் கூறப்பட்டுள்ள தாவரவியலில் சாராம்சத்தினை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் பயன்கள், மருத்துவ முக்கியத்துவம் மற்றும் நவீன அறிவியல் துறையில் இவற்றிற்கான பங்கு ஆகியவற்றினை பகுப்பாய்வு செய்யும் முறைகளில் இந்த தோட்டம் அமையும்.

யுனெஸ்க்கோ அமைப்பு (United Nations Educational, Scientific and Cultural Organisation's) சில வருடங்களுக்கு முன்பு சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய தோட்டம் ஒன்றினை அமைக்கத் யோசனை தெரிவித்தபோது, ஏற்கனவே இவ்வம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த இஸ்லாமியத் தோட்டம் அமைக்கும் திட்டம் உருவெடுத்தது.

குர் ஆனிய தோட்டம் மூன்று பகுதிகளாக அமைக்கப் பட உள்ளது. அதன் முதல் படியாக 24 ஹெக்டேர் நிலப்பரப்பில் திருக்குர்ஆனில் குறிப்பிடப் பட்டுள்ள 51 வகையான தாவரங்கள் இதில் பயிரிடப்படும். இவை முறையே கடுகு முதல் குங்குமப்பூ வரையிலும், பரங்கிக் காய் முதல் கற்றாழை வரையிலும், மருதாணி முதல் மாதுளம் பழம் வரை இறைமறை மற்றும் நபிமொழிகளில் இடம் பெறும் அத்துணை வகைகளும் இதில் இடம் பெறும். இது தவிர 350 க்கும் மேற்பட்ட மலர்களின் வகைகளும் இதில் இடம் பெறும்.

விரைவில் இந்தத் தோட்டம் மற்றும் அதில் இடம் பெறும் தாவர வகைகள் ஆகியவை பற்றிய புத்தங்கள், பிரசுரங்கள் மற்றும் இணைய தளம் ஆகியவை மக்களிடையே அறிமுகப் படுத்தப் படும். இதன் மூலம் பண்டைய கால மக்கள் பயன்படுத்தி வந்த மரபு சார் தாவர வகைகளின் பயன்பாட்டிற்கும் இக்கால நவீன அறிவியலுக்கும் ஒரு இணைப்புப் பாலம் ஏற்படுத்தப்படும். இது ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் உதவிகரமாக இருக்கும்

இந்த குர் ஆனிய தோட்டம் மூலம் இஸ்லாம் எவ்வாறு உலக அறிவியல் நிபுணத்துவம் மற்றும் மருத்துவத்துறை முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியது என்ற முழு விபரமும் சர்வதேச அளவில் மக்களுக்குச் சென்றடையும். இது நாள் வரை பிற மதத்தினர் இஸ்லாம் மீது கொண்டுள்ள தவறான பல தகவல்களை இந்தக் குர் ஆனிய தோட்டம் முழுமையாக மாற்றியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் டாக்டர் அல் ஹாஜாரி. கத்தார் நாட்டினைத் தொடர்ந்து இவ்வகைத் தோட்டம் அடுத்தடுத்த அரபு நாடுகளில் அமைக்கப்பட உள்ளது.

உலகின் முதன் முதலில் அமையும் இந்த குர் ஆனியத் தோட்டத்தினை முழு உலகிற்கும் பறைசாற்றும் வகையில் இது சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக சேர்க்கப் படவும் உள்ளது என்பது கூடுதல் செய்தி.

Monday, June 23, 2008

ஆ! அல்-ஜஸீரா!!

ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்ற வல்லவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை.

அரசியலமைப்பின் நான்காவது தூண் என்று ஊடகங்களின் ஒன்றான பத்திரிகைகள் பேசப் படுகின்றன. தொலைக் காட்சி என்பது சக்தி வாய்ந்த ஊடகமாக நம் சமகாலத்தில் உருவெடுத்துள்ளது. இக்கட்டுரை, மேற்குலக ஊடகங்களையும் அரபுலக ஊடகங்களையும் ஒப்பு நோக்கும் ஓர் ஆய்வாகும்.
ஜான் பிராட்லெ மேற்கத்திய ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளராவார். ஆக்ஸ்ஃபோர்ட் / லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி முடித்தவர். சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர். கெய்ரோவின் அல்-அஹ்ரம் பத்திரிகையின் மூத்த பதிப்பாசிரியராகவும் சவூதி அராபியா - ஜித்தாவிலிருந்து இயங்கும் அரப் நியூஸ்இல் நிர்வாகப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். Saudi Arabia Exposed: Inside a Kingdom in Crisis (Palgrave-Macmillan Publication, June 2005), The Lonely Planet Guide to the Middle East (4th ed; 2003) போன்ற சர்சைக்குரிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். நியாயமான விஷயங்களை உறுதியான வாதங்களாக முன்வைப்பவரும் நடுநிலையாளர் என்று சர்வதேச பத்திரிகையாளர்களால் பெயர் பெற்றவருமான இவரின் கருத்துகள் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு இங்குப் பதிக்கப் படுகின்றன.

சர்வதேச ஊடகங்கள் பற்றி தனது ஆய்வுக்கட்டுரைகளை மேற்கொண்டதோடு மேற்கத்திய செய்தி ஊடகங்களின் இரட்டை நிலைபாட்டை முழுமையாக அறிந்த ஜான் பிராட்லெ, அவற்றோடு அரபுலகப் பத்திரிகை ஊடகங்களைப் பற்றிய தனது ஒப்பீட்டினை ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

அரபுலக ஊடகங்கள் பல வருடங்களாகக் கேட்டு வந்த கேள்விகளான "இஸ்ரேலுக்கு என்ன தான் வேண்டும்?", "ஏன் இத்தனை அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்?" போன்ற விடை வராதக் கேள்விகளை மிக மிகத் தாமதமாக மேற்கத்திய ஊடகங்களும் இப்போது பின்பற்றிக் கேட்க ஆரம்பித்திருப்பதற்கு அரபுலக ஊடகங்களின் ஆதிக்கம் மேற்கத்திய மக்களைத் தொட்டுப் பரவ ஆரம்பித்து இருப்பதுதான் இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும் என்று உடைக்கிறார் ஜான் பிராட்லெ.

மேற்கத்திய ஊடகங்களோ தேய்ந்து போன ரெக்கார்டாக சுன்னி-ஷியா பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைப் பற்றி "ஆடுகள் நனைவதற்காக அழும் ஓநாய்களைப் போல்" திரும்பத் திரும்ப நீலிக் கண்ணீர் விட்டு நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், அதி நவீன ஆயுதங்கள் கொண்ட படையினராக சித்தரிக்கப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தைப் புறமுதுகிட்டு ஓட வைத்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரின் நடவடிக்கைகள் அரபுலக ஊடகங்களில் அலசப்படுகின்றன என்கிறார்.

அரபுலக மீடியாவிற்கும் மேற்கத்திய ஊடகங்களுக்குமிடையான பெரும் வித்தியாசங்களாக இவர் பட்டியலிட்டிருப்பது:


  • நேரலை ஒளிபரப்பில் சம்பவ இடத்திலிருந்தே துல்லியமாகப் படம் பிடித்து உலகிற்குக் காண்பிக்கும் விரைவுச் சேவை.

  • நேரலை நிகழ்ச்சிகளை நேரலையிலேயே மொழிபெயர்ப்புச் செய்து ஒலி-ஒளி பரப்பும் பிரமிக்க வைக்கும் ஆற்றல்

  • ஐநா அலுவலராகட்டும், இஸ்ரேலிய ராணுவ பிரதிநிதியாகட்டும் நடப்பைத் துணிச்சலாகக் கூறும் நேர்மையான அணுகுமுறை

  • ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஷேக் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்களைத் தேடி அமெரிக்க / இஸ்ரேலிய படைகள் அலைந்து கொண்டிருக்கும் அதேவேளை, அவருடன் ஆற அமர அமர்ந்து நேரலை ஒளிபரப்புச் செய்வது போன்ற புருவத்தை உயர்த்தும் துணிச்சல்

போன்ற விஷயங்களில் மேற்கத்திய ஊடகங்களுக்குப் பாடம் நடத்துகின்றன அரபுல ஊடகங்கள். அதில் குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்துக் கொண்டே வரும் அல்ஜஸீராவின் ஊடகத்திறனை ஆய்வு செய்து வியந்திருக்கும் இவரது கட்டுரை Will Al-Jazeera bend? அல்ஜஸீராவின் துணிச்சலையும் நேர்மையான ஊடகத் திறனையும் பாராட்டுவதோடு அல்ஜஸீரா சந்திக்கும் அரசியல் சமூக நெருக்கடிகளைப் பற்றிக் கேள்விகளை அடுக்குகிறது.

அல்ஜஸீரா பற்றிக் கூறுகையில் இவர் "அனைத்து அரபுலகத்தையும் ஓரணியில் திரளச் செய்யும் அரசியல் சார்ந்த முயற்சியான Pan-Arabism என்பதே அல்ஜஸீராவின் உண்மையான குறிக்கோளாகும். இதன் காரணமாகவே மேற்கத்திய அரசியல் விமர்சகர்களின் உச்சகட்ட கண்டனத்திற்கு அல்ஜஸீரா உள்ளாகியுள்ளது. அதேவேளை, பல நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள அல்ஜஸீராவின் கோட்பாடுகள் அரபுலகத்தினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டு வருகிறது.

அரபுலகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரணிகள், அரபுலக அரசுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏற்படும் நெருக்கடிகள், முட்டுக்கட்டைகள் அனைத்தையும் அலசி ஆய்ந்து வெளிக்கொண்டு வரும் அதன் செய்திகள் அரபுலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை ப்ராட்லே சுட்டிக்காட்டுகிறார். அரபுக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டுக்குள் (Arab League Summit) அரங்கேறும் உட்பூசல்களையும் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து காட்டுவது அல் ஜஸீராவின் மீது அரபுலகின் சந்தேகக் கண் விழுவதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.

இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜஸீரா?

அல்ஜஸீரா இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற கூற்றையும் ப்ராட்லெ மறுக்கிறார். இஸ்ரேல் லெபனான் போரின் போது இஸ்ரேலிய வீரர்களின் பார்வையில் லெபனான் பற்றி முழுச் செய்தித் தொகுப்பாக அல்ஜஸீரா வெளியிட்டதையும், முழு நீள இஸ்ரேலிய ராணுவ பிரதிநிதியின் பேச்சுகளையும் வெளியிட்டதையும் அத்துடன் இஸ்ரேலிய மக்களின் வாழ்க்கைத் தரம் ஹிஸ்புல்லாஹ் படையினரின் குண்டுமழையினால் எவ்வாறு சீரழிந்துள்ளது என்பதையும் விளக்கமாக விவரித்தது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

ஊடகங்களில் அமெரிக்க-இஸ்ரேலிய உறவு

அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலைத் தாங்கிப்பிடிப்பவை (There is no doubt the American media is deeply pro-Israeli). இஸ்ரேல் நாட்டினுள் உள்ள ஊடகங்கள் இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பதை விட அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரானவற்றைப் பேசுவது மிகமிகக் குறைவு. CNN மற்றும் BBC போன்ற ஊடகங்கள் அளிக்கும் செய்திகளையும் ஆய்வுகளையும் சில நிமிடங்கள் நடுநிலைப் பார்வையோடு கவனித்தோமானால் அதில் உள்ள இஸ்ரேலிய ஆதரவுத் தன்மை விளங்கும்.

அமெரிக்க ஊடகங்களில் அரபுலக (ஃபலஸ்தீன)ச் சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான 'சிறப்புப் பார்வை' நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். கஸ்ஸா / மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் "Occupied" அல்லது "Occupation" போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு "Contested / Disputed" போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் ஃபலஸ்தீனின் அப்பகுதிகளையே "இஸ்ரேல்" என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.

இஸ்ரேல், லெபனான் மீது தொடுத்த போரின் உண்மைக் காரணிகளை அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? இரு இஸ்ரேலியப் படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் பிடித்துச் சென்றது மட்டும் காண்பிக்கப்பட்ட ஊடகத்தில் அந்த இரு வீரர்கள் லெபனான் எல்லைக்குள் என்ன செய்து கொண்டிருந்தபோது பிடிபட்டனர் என்பது பூசி மெழுகி மறக்கப்பட்டு விட்டது. இரு வீரர்கள் பிணைக்கைதிகளானது போர்க்காரணம் என்றால் பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பெண்களும் அடங்கிய 9000 பேர் இஸ்ரேலியச் சிறையில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் படும் வேதனைகளை யார் வெளியே சொல்வது? அவர்களை யார் விடுவிப்பது?

இவை வெறும் கேள்விகள் மட்டுமா?

ஆக்கம்: அபூ ஸாலிஹா

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=936&Itemid=278

Tuesday, May 20, 2008

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 5)

இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை:-

1. இஸ்லாம் - சகிப்புத்தன்மையற்ற, வன்முறையைத் தூண்டக்கூடிய, மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிரான அணுகுமுறை கொண்ட மதம். எனவே அமெரிக்க அரசியலமைப்பிற்குள் எக்காரணம் கொண்டும் அதனை அனுமதிக்கப்படக்கூடாது. அதேவேளை உலகில் எந்த ஒரு நாட்டின் அரசியலமைப்பிற்குள்ளும் எவ்வகையிலும் அதிகாரம் செலுத்துவதையும் அனுமதித்து விடக்கூடாது.

2. பொதுவான முஸ்லிம்களைவிட இஸ்லாத்தை உறுதியாகப் பின்பற்றும் "அடிப்படைவாத" முஸ்லிம்களே முதன்முதலில் "கவனிக்கத்"தக்கவர்களும் கண்டிக்கத்தக்கவர்களும் ஆவர்.


இவ்விரு திட்டங்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களில் ஏகாதிபத்திய சக்திகள் செய்த காரியங்கள் பலவாகும். அமெரிக்க நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள்வதிலிருந்து, இன்று முஸ்லிம் நாடுகள் என அறியப்படும் நாடுகளின் மீது அழுத்தம் கொடுத்து அங்கு நிலுவையில் இருக்கும் இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக எடுத்து மாற்றுவதற்குத் தங்களின் கைக்கூலிகளை வைத்து காய்கள் நகர்த்தியது வரை பல காரியங்களை செய்து முடித்துள்ளனர்.


செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் அதனை காரணமாக வைத்து இஸ்லாத்தையும் இஸ்லாமிய அடிப்படையில் வாழமுயலும் நாடுகளையும் அழித்தொழிக்கத் திட்டங்கள் தீட்டி நடைமுறைப் படுத்தப்பட்டது உலகம் அறியும். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ரம்ஸ்ஃபெல்டு இவ்விரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா உடனடியாக யுத்தம் செய்து அழிக்க வேண்டிய நாடுகளாக பட்டியல் இட்டு பரிந்துரைத்த நாடுகள் இவை:


ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, இரான், சூடான்.

100 விழுக்காடு சியோனிஸ ஆதரவு நிலைபாடு கொண்ட ரம்ஸ்ஃபெல்டின் பரிந்துரையில் உள்ள இரு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அழிக்கப்பட்டதும் அடுத்து இரானையும் சிரியாவையும் தற்பொழுது அமெரிக்கா குறிவைத்துள்ளதையும் இணைத்துப் பார்த்தால் மேற்கண்ட இரு திட்டங்களை நடைமுறைப்படுத்த அமெரிக்கா முயல்வதன் தீவிரம் புரியும்.


சில முஸ்லிம் நாடுகளில், அரசு அவைகளின் வேலை துவக்கத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதலான "பிஸ்மில்லாஹ்" இறைவனின் திருநாமத்தில் துவங்குகின்றோம் என்பதைக் கூறித் துவங்குவது நடைமுறையாகும். இந்த நடைமுறையை கத்தர் நாடாளுமன்ற நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்து எடுத்து மாற்ற வேண்டும் என அமெரிக்கா ஓரிரு வருடங்களுக்கு முன்பு நேரடியாகவே அறிக்கை வெளியிட்டதும் இதனோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதே.


இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுபவர்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துவதும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் விதத்தில் தங்களின் உறுதியான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தும் இமாம்கள் போன்றோரை சிறைகளில் அடைப்பதும் இத்திட்டங்களின் உட்பட்டதே.

இவற்றிற்கு மிகப்பலமான உதாரணமாக, அமெரிக்காவில் தனது தீவிர இஸ்லாமியப் பிரச்சாரத்தின் மூலம் தூய இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவிற்கு உயர்த்தும் இரு கண்களும் இழந்த இமாம் யூசுஃப் அப்துல் ரஹ்மான் அவர்களை முறையான எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியாமல் விசாரணை ஏதுமின்றி பல வருடங்களாகச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்று கூடி 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராகத் தேர்ந்தெடுத்த சிறப்பிற்குரிய இமாம் யூசுஃப் அல் கர்ளாவி அவர்களை அமெரிக்காவில் நுழைய விடாமல் அனைத்து அனுமதிகளையும் ரத்து செய்து வைத்திருப்பதையும் கூறலாம்.


இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்திற்கு தாங்கள் உட்பட்டது மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரையும் அந்த வரையறைக்குள் கொண்டு வர இத்திட்டங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை ஏகாதிபத்திய சக்திகள் எடுத்து வருகின்றன. இத்தகைய இஸ்லாத்தின் மீதான அச்சத்தை மக்களிடையே பரப்புவதற்காகவும் தேர்ந்த ஊடக குழுக்களையும் இவர்கள் உருவாக்கி விட்டுள்ளனர்.

சாயம் வெளுக்கும் முழுநேர இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள்

முழு நேர இஸ்லாமிய எதிர்ப்பு ஆக்கங்களை எழுதுபவரான எழுத்தாளர் பால் பெர்ரி, தனது நூலில் (Infiltration: How Muslim Spies and Subversives have Penetrated Washington), குர் ஆனை முழுமையாக வாசித்து இஸ்லாத்தின் அடிப்படைகளை நன்கு புரிந்து கொள்ளவும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை வாசித்து அறிந்து கொள்ளவும் பெண்டகனின் நுண்ணறிவு செயலாண்மை நிர்வாகம், அதாவது Counterintelligence Field Activity (CIFA) வகுத்த செயல்முறைத் திட்டத்தையும் பற்றிப் பேசுகிறார்.

"இப்படியே விட்டால் இஸ்லாம் உலகை ஆளும் என்ற மிரட்டலையும், ஜக்காத் பணம் என்பது போருக்கான தயாரிப்புகளுக்கு பயன்படும் தர்மம்" (zakat, an asymmetrical war-fighting funding mechanism) என்று மேற்குலகைத் திசை திருப்பும் விதமாக பால் பெர்ரி குறிப்பிட்டிருப்பது அவரின் வெளிப்படையான துவேஷப் பார்வைக்கு ஓர் உதாரணம் எனலாம். இவரைப் போன்றே தர்க்க ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் எழுதக்கூடியவர்கள் என்று பெயர் பெற்ற பல இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர்கள், அடிப்படையை விளங்கவியலா உளவியல் தன்மையில் சிக்கியிருப்பதைக் காணமுடிகின்றது.

ஆன்லைன் புத்தக விற்பனையில் முதலிடம் வகிக்கும் அமேசான்.காம் தளத்தின் அதிகம் விற்கும் பிரதிகளில் இஸ்லாம் பற்றிய புத்தகங்களே முதல் 30 இடங்களைப் பிடித்துள்ளன. இஸ்லாத்தைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் குர்ஆனை வாங்கிப்படிக்க பலர் வருமிடத்தில் நடுநிலையாளர்களின் இஸ்லாம் பற்றிய ஆய்வு நூல்களுடன் காழ்ப்புணர்வை
குரோதத்துடன் தெளிக்கும் ராபர்ட் ஸ்பென்ஸர், டேவிட் ஹாரோவிட்ஜ், டோனி ப்ளாங்க்லே, ஸ்டீவன் எமர்ஸன் போன்றோரின் நூல்களும் காணப்படும். அவற்றில் தூவப் பட்டிருக்கும் துவேஷ வித்துகளை, நடுநிலை நோக்குடன் அணுகும் எவரும் அவை அமெரிக்கத் தலைமையைக் குளிர்விக்க இவர்கள் செய்த (விஷப்)பனித்தூவிய விவசாயம் என மிக எளிதில் கண்டுகொள்ள
இயலும்.

இஸ்லாமின் மேலுள்ள ஆழமான வெறுப்பின் மூலம் எழுத முன்வரும் இத்தகைய நியமிக்கப்பட்ட எழுத்தாளர்கள், பல நேரங்களில் இஸ்லாமிய அடிப்படைகளைக்கூட அறிந்து வைத்திருக்கவில்லை என்பதைப் பல்வேறு இடங்களில் கண்கூடாக காண முடியும். பண்பற்ற முறையில் மனிதத்தன்மையை இழந்து மனிதர்களிடையே வெறுப்பை வளர்த்து பகைமையை ஊட்ட எந்த அளவு சேவை செய்ய இயலுமோ அந்தளவு இஸ்லாமைப் பற்றித் தவறாகத் திரித்துக்கூறுவதை உள்நோக்கமாகக் கொண்டிருக்கும் இத்தகைய பெருச்சாளிகளின் சாயங்கள் பலமுறை வெளுத்திருந்தாலும் அவ்வப்போது புதிய நிறங்களைப் பூசிக் கொண்டு இவர்கள் உலா வருவதைத் தடுக்க இயலவில்லை என்பதுதான் யதார்த்தம்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களுக்கும் விமர்சனங்களுக்குத் தக்க விளக்கங்கள் கொடுக்கப்படும்போது பதிலளிக்கத் திராணியின்றி அடுத்த விமர்சனத்திற்குத் தாவி விடும் சாமார்த்தியம் இவர்களுக்குக் கைவந்த கலையாகும்.

இந்தியாவில் இஸ்லாமோஃபோபியா!

அப்படியே இந்தியாவிற்கு வந்தால் பிரபல தினசரிகளில் கட்டுரைகள் என்ற பெயரில் பொய்கள், அவதூறுகள், திரித்தல்கள், உளறல்களின் மூலம் தன் மனதினுள் உறைந்து விட்ட இஸ்லாத்தின் மீதான அதீத அச்சத்தைக் கொட்டித்தீர்க்கும் அருண்ஷோரியிலிருந்து தென்னகத்தில் தங்கி விட்ட பார்ப்பன சோ வரை பட்டியல் மிக நீண்டு கொண்டு செல்லும்.

தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை முன்வைக்கும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் சொந்தச் சரக்கில் எழுதுவதில்லை. பெரும்பாலான இவர்களது ஆக்கங்கள் மேற்கத்திய எழுத்தாளர்களின் படைப்புக்களின் மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேற்கத்திய உலகிற்குக் கடும் சவால் விடுவதாகவும் இஸ்லாம் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறும் இலக்கியத்தரத்தில் எழுதுவதில் வல்லவரான ராபர்ட் ஸ்பென்ஸர் கூட, போரையும் அமைதியையும் பற்றிப் பேசும் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களில் தம் வாதங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் தேர்வு செய்து திரிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

குர்ஆனிலுள்ள வாசகங்களையும் (texual) வரலாற்றுப் பின்னணி(context) களையும் மாற்றிப்போட்டு விளையாடுவது இவருக்குக் கை வந்த கலை. அவதூறுகள் மற்றும் துன்புறுத்தல் மூலமாக வலிந்து போரைத் துவக்கும் எதிரிகளைச் சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லாமல் போகும் போது வேறு வழியின்றி எடுக்கப்படும் இறுதியான முடிவாக ஐயப்பாடுகளுக்கு இடமின்றி குர்ஆனில் கூறப்படும் போர் பற்றிய (9.1) வசனங்களை முஸ்லிம் அல்லாதவர்களைக் கண்டால் முஸ்லிம்கள் செய்யவேண்டிய கடமை போன்று திரித்து சித்தரிப்பதும் இவர் கையாளும் யுக்தியாகும்.

மதினா நகரத்தில் இஸ்லாம் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினைத் தாங்க முடியாத மதநம்பிக்கையற்றவர்கள், முஸ்லிம்களுக்கெதிராகச் செய்த சதித்திட்டங்களையும் அவர்கள் கொடுத்த துன்பங்களையும் வஞ்சகத்தோடு செய்த துரோகங்களையும் அவர்கள் முஸ்லிம்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறித்த காரணத்தினாலும் துவங்கப்பட்ட அந்தப் போரைப்பற்றி குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதனை இஸ்லாமிய நிகழ்வுகள் பற்றிய சிறு அளவிற்கு அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ள இயலும்.(9.13) போரிடச் சொல்வதற்கு முன்னும் பின்னுமுள்ள (2.190-193) வசனங்களை நயவஞ்சக எண்ணத்துடன் மறைக்கும் வித்தையை
அருண் ஷோரியைப் பின்பற்றி தமிழக எழுத்தாளருக்கு கற்றுக்கொடுத்ததும் ராபர்ட் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்கள்தாம் எனலாம்.

பயங்கரவாதச் செயல்கள் எங்கு நடந்தாலும் அதில் இடம் பெற்ற குற்றவாளிகள்
முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அல்லது சந்தேகத்தின் பெயரில் ஏதாவது முஸ்லிம் பெயர் கொண்டவர் அகப்பட்டு விட்டால் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளைப் பரப்புவதிலும், நடைபெறும் தீவிரவாதச் செயல்களை முஸ்லிம் அமைப்பு மற்றும் இயக்கங்களுடன் தொடர்பு படுத்தி இஸ்லாம் பற்றிய பயத்தினை அமெரிக்க மற்றும் பிரிட்டன் மக்களின் மனதில் விதைக்க பெரும் முயற்சிகள் நடைபெற்றன. முஸ்லிம் பெயர் கொண்டு ஒருவர் பயங்கரவாத
செயல்களில் ஈடுபட்டால் தலைப்புச் செய்தியாக்குவதும் பின்பு அவர் நிரபராதி என்று அறிய வரும்போது அதை வெட்கப்பட்டு ஐந்தாம் பக்கத்து கடைசி பத்தியில் சுருக்கி வெளியிடும் தமிழகச் செய்தி ஊடகங்களுக்கு முன்னோடிகள் மேற்கத்திய ஊடங்கள்தாம். இஸ்லாமிய அறிவைப் போதிக்கும் மதரஸாக்கள், பள்ளிவாசல்கள்தாம் முஸ்லிம்களின் சிந்தனாசக்தியைத் தூண்டுமிடம் என்பதை தாமதமாக அறிந்து எந்த ஒரு பயங்கரவாத செயலுக்கும் முடிச்சுப்போடும் வழக்கத்தை மக்கள் நம்பும் ஊடகங்களை வைத்து நீட்டி முழக்கி வெளிக்கொணர்ந்தனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆக்கம்: அபூ ஸாலிஹா

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=911&Itemid=53

Thursday, April 24, 2008

அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!

'அமைதியை நிலை நாட்ட ஒரு போர்' என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.

ஆம்! ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு உணர்வதிர்ச்சி (post-traumatic
stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND Corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டுக் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:

- கொடூர சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)

- தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்

- குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல், விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல்


இது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:

— அடிக்கடி வரும் தலைவலி
— குழப்பமான மனநிலை
— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்
— விசித்திர மனநிலை
— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது
— குமட்டல் வாந்தி

— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது" என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார். பெண்டகனிடம் இத்தகவல்கள் பற்றிய ஆய்வறிக்கை ஏதும் இல்லாததே இது பற்றின ஆய்வில் RAND இறங்கத் தூண்டியது என்று கூறினார்.

தாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும். அதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. (இந்நோயின் மூலம் ஏற்படும் அறிகுறிகள் இடப்புற பெட்டிச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Veterans Affairs அறிக்கை

- 19 % அல்லது 320,000 அமெரிக்கப்படைவீரர்கள் PTSD நோயினால்
அவதியுறுகின்றனர்


- 7 % வீரர்கள் மன அழுத்தம் முற்றியதால் மூளையில் சேதம்
ஏற்பட்டுள்ளது


- 43 % தலையில் ஏற்பட்டுள்ள வேதனை காரணமாக மருத்துவர்களால் பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்

- 53 % PTSD மற்றும் மன அழுத்தம் காரணமாக அவதியுறுபவர்கள் (கடந்த வருடம் மட்டும்)

RAND அளித்துள்ள அறிக்கையின் முடிவில் படைவீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக பெண்டகன் செய்ய முன்வர வேண்டுமென்றும் அவர்களது உடல்நலம் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை தாமதம் ஆகும் பட்சத்தில் படைவீரர்களிடையே தற்கொலைகள் செய்து கொள்வது அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மன நோயினால் ஆர்வம் குன்றி பணிபுரியும் அமெரிக்கப் படைவீரர்களின் தரம் குறைந்த பங்களிப்பினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.

டிம் நோ என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள Veterans Affairs ஒப்புக்கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில புள்ளிவிபரங்கள் அருகில் உள்ள பெட்டிச்செய்தியில் காண்க.

RAND அறிக்கை பற்றிய சிறு குறிப்பு: கலிஃபோர்னியா சமூக நல அறக்கொடை சார்பில் RAND உடல்நலத்துறை மற்றும் RAND தேசிய பாதுகாப்பு ஆய்வுத்துறை இணைந்து மேற்கொண்ட இந்த அறிக்கைக்கு கண்ணுக்குப் புலப்படா போர்க்காயங்கள்: உளவியல் மற்றும் புலன் உணர்வு, அதன் விளைவுகள், மற்றும் மீட்புப்பணிக்கான சேவைகள் ("Invisible Wounds of War: Psychological and Cognitive Injuries, Their Consequences, and Services to Assist Recovery.") என்று பெயர். கடுமையான உழைப்பில் 25 ஆய்வாளர்கள் குழுவின் மூலம் கடந்த ஜனவரி மாதம் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையே மேலே நாம் குறிப்பிட்டுள்ள RAND அறிக்கை ஆகும்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள் இன்று அமைதியிழந்து அவதிக்குள்ளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய "அமைதியை நிலை நாட்டும்(?) போர்" அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.

இவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் கட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.

- அபூ ஸாலிஹா

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=896&Itemid=278