Saturday, August 18, 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.

ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!

"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.

அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.

அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.

"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."

"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.

சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.

உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.

அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.

ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.

அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.

முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?

வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.

கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.

சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?

இறைவன் நாடினால் தொடரும்....

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Thursday, August 16, 2007

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான விதவைகளும்!

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.

பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.

சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.

நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"

இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன். அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.

நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்

ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.

அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.

அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.

துயரமான வியாபாரம்

விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார். "ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.

வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.

தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:

தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:

"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.

அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?

- அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

மறுபதிப்புகள்: (தட்ஸ்தமிழ்.காம் / PKP Blogs / முதுவை ஹிதாயத் / சங்கப்பலகை / நீதியின்குரல் / முத்துப்பேட் எக்ஸ்பிரஸ் / நிதர்சனம்.நெட் / நெருடல்.காம் / உணர்வுகள்.காம் / ஈராக்கின் நிலமை)


இந்தச் செய்திக்கட்டுரையை நாம் பதிக்கும் வேளையில் நேற்று (15-08-2007) நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 175 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதுகுறித்த அல்ஜஸீரா தொலைக்காட்சியின் Inside IRAQ நிகழ்ச்சியை இந்த வீடியோவில் காணலாம்.

Saturday, August 11, 2007

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 4)

யூத பாரம்பரியத்தினால் உரமிடப்பட்டு, உலக மக்கள் மனதில் பசுமையாக வளர்த்து விடப்பட்ட இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத அச்சத்தை, இன்று அறிவிக்கப்படாத போக்கிரியாக, உலக நாடுகளின் பெரியண்ணனாக எண்ணி வலம் வரும் அமெரிக்க நிர்வாகம் மிகவும் நேர்த்தியுடன் கட்டுக் குலையாமல் கட்டியெழுப்பி சர்வதேச அளவில் மக்கள் மனங்களில் மிக உறுதி வாய்ந்த கட்டிடம் போன்று உயர்ந்து நிற்க வைத்திருக்கின்றது. மதப்பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் யூதர்களும் அமெரிக்கர்களும் எலியும் பூனையும் என்றாலும், இஸ்லாத்தினை எதிர்க்கும் விஷயத்தில் இவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

நவீன உலகின் சட்டாம்பிள்ளையாக நிரந்தரமாக வலம் வரவேண்டும் என்ற அதிகார வெறி, தன்னை எதிர்ப்பவர்களையும் எதிர்காலத்தில் தனக்கு மிகப்பெரிய சவாலாக வர நேரிடலாம் என கணிக்கப்படுபவர்களையும் நிர்மூலமாக்குவதில் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வைக்கின்றது. அமெரிக்க நிர்வாகத்தின் இந்த அதிகார வெறியே, பாரம்பரியமாக அவர்களின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் நேர் எதிர் கொள்கையுடைய யூதர்களோடு தற்காலிகமாய் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர்களின் திட்டங்களை முன்னெடுத்து செல்ல வைக்கின்றது.

ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால் அமெரிக்க நிர்வாகம், யூதர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டது என்பதை எவரும் உணரலாம். உலகின் அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அரும்பாடுபட்டுச் சித்தரித்துக் கொண்டிருக்கும் இவ்விரு சக்திகளும் ஒரே உறையில் இருக்க முயலும் இரு கத்திகள் என்பதை உலகம் கண்டு கொண்டு வருகிறது. ஒருவருக்கு இஸ்லாத்தை அழிப்பது தான் நோக்கம் எனில், மற்றவருக்கு உலக அதிகாரத்தை கையில் வைத்திருப்பது மட்டுமே பிரதான நோக்கமாகும். உலக அதிகாரத்தை கையில் வைக்கக் காயை நகர்த்தும் அமெரிக்கா, தன் குறிக்கோளை எட்ட மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை, யூதர்களை உள்ளும் புறமும் நன்றாக ஊட்டி வளர்த்து வைத்திருக்கின்றது.

“ ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு
கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை
ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே
இவை செயல்படுத்தி வருகின்றன. ”

இதற்கு உதாரணமாக மத்தியகிழக்கில் அமெரிக்கா நடத்தும் நாடகத்தை கூறலாம். உலகில் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக உருவகப்படுத்தும் அதேவேளையில், மத்திய கிழக்கை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும்படியாக, ஒரு பக்கம் இஸ்ரேல் எனும் அபகரித்து உருவாக்கப்பட்ட யூத நாட்டிற்கு நவீன ஆயுதங்களை வாரி வழங்கி விட்டு, பலகீனமான இராக்கை உயிர்க் கொல்லி பயங்கர ஆயுதங்களைக் கையில் வைத்திருப்பதாக கூறி கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.

இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

ஒரு காலத்தில் தன்னால் இரானுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு அமெரிக்காவுக்கு கட்டுப்பட மறுத்த சதாம், அதிரடியாக தனது எண்ணெய்க் கையிருப்பை யூரோவுக்கு மாற்ற முனைந்ததும், மத்திய கிழக்கில் ஓர் இஸ்லாமிய கூட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து அரபு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து அதனை முதன் முதலில் அப்போதைய யூதர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் ஃபலஸ்தீனின் அதிபராக(!) இருந்த யாசர் அரஃபாத் வரவேற்றது தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியே விட்டால் நாளை அமெரிக்காவிற்கு மிகப்பெரும் சவாலாக அரபு நாடுகள் ஒன்றிணைந்து களமமைத்து விடுமோ என்ற அச்சத்திலேயே, அமைதிக்காக உருவாக்கப்பட்டு இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டுவரும் ஐநா சபை உள்பட உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து கடுமையாக எதிர்த்தபோதும், புஷ் இராக்கை நிர்மூலமாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றார்.

ஒரு பக்கம் தானே நேரடியாக முஸ்லிம் நாடுகளை ஒவ்வொன்றாகக் குறி வைத்து தகர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளை, மத்திய கிழக்கின் அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் ஃபலஸ்தீன் ஆக்ரமிப்புப்பூமியான இஸ்ரேலுக்கு அதன் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விட பலமடங்கு அதிகமான அளவில் நவீன ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. புருவத்தைத் தூக்கும் உலக சோம்பேறி நடுநிலைவாத நாடுகளை திருப்திப்படுத்த, (இஸ்ரேலிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள) அரபு நாடுகளுக்கும் ஒரு பெயருக்காக வீசி எறிகிறது. சமீபத்தில் அரபு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கிய ஆயுதங்களின் கணக்கீடு (நன்றி: கல்ஃப் டைம்ஸ் 29/07/2007 பதிப்பு) இதனைத் துல்லியமாக தெரிவிக்கின்றது. இஸ்ரேலுக்கு 30 பில்லியனுக்கும் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் சேர்த்து 20 பில்லியனுக்குமான அடுத்த பத்து வருடங்களுக்கான ஆயுத, ராணுவ வினியோகத்திற்கான ஒப்பந்தப் பட்டியல் இங்கே:

சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத விற்பனை மூலம் கொள்ளை இலாபம் ஒரு பக்கம், எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக எந்த ஒரு நாடும் முளை விட்டுக் கிளம்பி விடாமலிருக்க, அவர்களின் சிந்தனை தன் பக்கம் திரும்பா வண்ணம் உள்நாட்டுப் போரைத் தூண்டும் குழப்பங்களைத் தொடர்ந்து விளைவிப்பது என்று கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியாக ஒருவர் மாற்றி ஒருவர், தங்களின் இலட்சியக் கனவை பிறர் உணர நேர இடைவெளி கொடுக்காமலேயே திறமையாகச் செயலாற்றி வருகின்றனர்.

அதிகாரத்தை அடித்துப்பிடித்து நிலை நிறுத்திக்கொள்ள இவ்விரு கூட்டமும் இன்று எடுத்துக்கொள்ளும் இவ்விதமான ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. அதிகாரத்தில் தற்போது இருக்கும் முன்னோடிகள் தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு தாம் செயல்படும் முறைகளைக் குறித்து ஓர் அறிவிக்கப்படாத செயல்முறை வகுப்பையே நடத்துகின்றனர் எனலாம். இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படையில் அமைந்த இச்செயல்பாடுகள் அதிகாரத்திற்காக அடுத்தடுத்து பதவிக்காக போட்டியிட முன்வருபவர்களுக்கு நல்ல(?) ஓர் முன்மாதிரியாகவும், ஊடாக போஷாக்குடன் வளர்த்து வந்த இஸ்லாமோஃபோபியாவையும் சேர்த்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் உதவுகிறது.

இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் அமெரிக்க அதிகாரத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர், தனது இலக்காக இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை குண்டு போட்டுத் தகர்க்க வேண்டும் என முழங்கி இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஏற்கனவே இதனையே கடந்த 2005ல் கூறியிருக்கிறார் என்பதால் தற்போது அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இவர் ஃபோபியா உச்சத்திற்கு ஏறி வார்த்தைகளாக வெளிவந்ததை, மீண்டும் ஒருமுறை அலடசிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை.

ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், (இத்தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் குறிப்பிட்டது போன்று) முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே இவை செயல்படுத்தி வருகின்றன.

ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களை பிளவுபடுத்த யூதர்கள் கையாண்ட குயுக்தியாக, நபி(ஸல்) அவர்களின் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை வரலாற்றில் நபியவர்கள் செய்யாத, செயல்படுத்த, கூறாத விஷயங்களை அவ்வாறு நடந்ததாகவும், இடைச்செருகலிட்டு இட்டுக்கட்டினார்கள் எனில், தற்காலத்தில் அமெரிக்கா கையாளும் முறை வித்தியாசமான, அதிபயங்கரமான முறையாகும்.

“சுதந்திரத்தை விரும்பும் நம்மையும், நம் நாட்டையும் அழிக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளால் திட்டமிடப்படுகின்றது" - அமெரிக்காவில் எந்தவொரு மூலையில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் மைக்கை பிடித்து ஜார்ஜ் புஷ் முழங்கும் வழமையான இந்த வீர வசனத்தின் பின்னணி என்ன என்பது தற்போது விளங்கியிருக்கும்.

சமீபத்தில் பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அநியாயமான முறையில் சிவப்பு மசூதி மீது நடத்திய தாக்குதலின் இறுதியில் “இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அதிபர் முஷாரப்பின் செயல்பாடு பாராட்டத்தக்கது. முஷாரப் என் உற்ற தோழன்” என உச்சி முகர்ந்திருந்த புஷ், இன்று பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க நேரும் என அந்தர் பல்டி அடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிவப்பு மசூதி இமாம் தனது இறுதி தருணத்தில் கூறிச் சென்றது போன்று, இன்று பாகிஸ்தான் பொதுமக்களாலேயே அங்கு ஓர் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் வந்ததாலேயே புஷ் அந்தர்பல்டி அடிக்கத்துவங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

விபச்சாரம், போதைப்பொருட்கள் மூலம் இளைய சமுதாயத்தை சீரழிக்க முனைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்ததை, மேற்கத்திய சீரழிந்த நாகரீகத்தில் அதிநாட்டம் கொண்ட முஷரப் கண்டுகொள்ளாத காரணத்தாலேயே சிவப்பு மசூதியின் மாணவ-மாணவிகள், தாமாகத் தெருவில் இறங்கி பியூட்டி பார்லர்கள் என்ற பெயரில் நடந்த விபச்சார விடுதிகளை திடீர்சோதனை நடத்தி சில விபச்சார பெண்களை சிறைபடுத்தினர் என்பது அனைவரும் அறிந்த காரியமாகும்.

“ இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள்
எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்?... என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. ”
“இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம்" என்று ஒருபுறம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகம், மறுபக்கம் “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” என்று எதிர்மறையாகப் பேசுவதை கவனிக்கும் எவருமே, “இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள் எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்? அவ்வாறு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அமைதியான இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வருவார்களா? அல்லது அமைதியை போதிக்கும் இஸ்லாத்தை தெளிவாக கற்றுக் கொண்ட எவராவது பொது அமைதிக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களா?” என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. இது தான் புஷின் தந்திரத்திற்கும், அதீத முயற்சியுடனான திரும்பத் திரும்ப புழக்கத்தில் அவ்வார்த்தைகளை விட எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஒருபக்கம் “இஸ்லாமிய தீவிரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து” என புஷ் நிர்வாகம் முழங்கும் அதேநேரம் மறுபுறம் மறைக்கப்படும் உண்மைகளையும், பிரபல செய்தி ஊடகங்களுக்குப் பொய்களை மெய் போல் சித்தரித்துத் தயாரித்து அளிக்கும் நயவஞ்சத்தினையும் செவ்வனே செய்தது. நீண்ட காலத் திட்டத்தின்கீழ் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சாதுரியமான திட்டமிடுதல் நல்ல பலனையும் தந்தது. அடிப்படை கொள்கைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்ற பார்வையுடனேயே பொதுமக்கள் பார்க்கும் விதத்தில், மக்களின் சிந்தனையை மூளைச்சலவை செய்யும் இக் குறிக்கோள் வெற்றி பெற்றது. எதிர்மறையாய் நிகழும் அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது இஸ்லாமும் அதன் கோட்பாடுகளுமே என்ற துர்சிந்தனை தொடர்ச்சியாக மக்கள் மனங்களில் பயிர் செய்யப்பட்டது. இதன் மூலம் முஸ்லிம்களின் பின்னணி, அவர்களின் உடமைகள் ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஐய முத்திரை குத்தப்பட்டது. மேல் மட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை ஒவ்வொருவரும் கேள்விக்குட்படுத்தப்பட்டனர். ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் ஒவ்வொரு அசைவும் ஆவணமாக்கப்பட்டது.

"தேசியவாதத்தை முன்வைத்த எந்த ஒரு சித்தாந்தத்தையும் தரையில் வீழ்த்தி தவிடு பொடியாக்கும் மிகத்தெளிவான மற்றும் வலிமை வாய்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றுவதால் அவர்களிடம் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்" - மீடியா உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் ரூபர்ட் மர்டோ ஆஸ்திரேலியாவின் ஸிட்னியில் ஜூன் 26, 2006 ல் நடந்த ஒரு கூட்டத்தில் உதிர்த்த சொற்கள் இவை.

அமெரிக்க, பிரிட்டனின் ஊடகங்கள் எத்தகைய செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும், எவற்றை மறைத்து ஓரங்கட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய ஒரு பெருந்தலையின் அடிமனதில் இருக்கும் இத்தகைய துவேஷ எண்ண ஓட்டத்தை வைத்து அதன் பிரதிபலிப்பு ஊடகங்களில் எவ்வகையில் வெளிப்படுத்தப்பட்டு அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்து இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் பரஸ்பர அன்பையும் எடுத்தியம்பும் விதமாக பிரிட்டனில் இலட்சக்கணக்கானோர் நடத்திய பேரணியையும் அவர்கள் கையில் பிடித்துச் சென்ற பேனர்களையும் படம் பிடித்து பிரசுரிப்பதை ஏனோ தவிர்த்துக் கொண்ட ஊடகங்கள், கூட்டத்தினூடே ஒருவர் குறும்பு செய்யும் எண்ணத்தில் கையில் கொண்டு வந்த பேனர் ஒன்றை மட்டும் முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து தங்கள் குறிக்கோளை நன்றாக நிறைவேற்றின.

என்னதான் தலைகீழாக நின்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குறை சொல்ல முற்படுவதன் மூலம், தாம் எண்ணியதைச் செயல்படுத்தி விடமுடியாது என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொண்டு, இஸ்லாமிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கியமானவை, இஸ்லாத்தின் கோட்பாடுகளை இசைந்து, முறையாகப் பின்பற்றுவோரை சமூகப் பிணைப்பில் இருந்து வேறுபடுத்துவதாகும். அதற்கு ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் தீவிரவாதிகள் எனும் அடைமொழி.

இஸ்லாமியர்களிடமிருந்து மேற்கத்திய உலகைப் பிரித்தாளும் சூழ்ச்சியாக அடிப்படைவாத வலதுசாரி யூதகுருமார்கள் பயன்படுத்திய இவ்வார்த்தையை அமெரிக்காவோடு சேர்ந்து பிரிட்டனும் முன்னோர்கள் காட்டித் தந்த வழியிலேயே கன கச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

மேற்கத்திய ஊடகங்கள், அமெரிக்காவையும் பிரிட்டனையும் அச்சுறுத்தும் பயங்கரவாதச் செயல்களின் அதிகரிப்பை, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் பழி சுமத்துவதற்கான ஒரு நேர்த்தியான போர்க்கலைத் தந்திரமாகவே கையாண்டு வருகின்றன. இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை உணராத சாதாரண மக்களின் அறியாமையை முதலீடாக வைத்தோ அல்லது முஸ்லிம்களின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதன் மூலமோ இதை எளிதில் சாதிக்க திட்டமிட்டன. குழுக்களாகவும் அமைப்புகளாவும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டு இஸ்லாமிய சமூகத்தை முழு அளவில் பாதிப்படைய வைக்கும் விதத்திலான தாக்குதல்களைத் தொடுத்தன. இவை அனைத்திற்கும் அடிப்படை மூலகாரணமாக அமைந்தது இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் அன்றி வேறில்லை.

அறியாமையினாலோ சார்பு மனப்பான்மையினாலோ மேற்குலகில் அவ்வப்போது எழும் கூக்குரல்கள் முக்கியமாக, செயல்முறைக் கொள்கைகளை வகுக்கும் சமூகம், இஸ்லாத்தின் மீது பழியைச் சுமத்த உறுதியுடன் முடிவு செய்தது. மெல்லும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்?

இஸ்லாத்தின் மீதான துவேஷத்திற்கானத் தீனியாகக் கடந்த 9/11 பயங்கர நிகழ்வுகளின் மூலம் எழுந்த அச்சம் கலந்த ஐயப்பாடுகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான இயங்குவிசையை மீண்டும் தூண்டிவிட்டது. War on Islam என்பதைச் சூசகமாக War on Terrorism என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாத்தைத் தனிமைப்படுத்த முயற்சிகள் செய்தன. இன்று வரை உலக அரங்கில் நிரூபிக்கப்படாத 9/11 குற்றத்தைப் புரிந்தவராக கருதப்படும் (Prime Suspect) ஒஸாமா பின் லேடன் "இஸ்லாமியத் தீவிரவாதி" என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார். எவரும் “அமைதி மார்க்கமான இஸ்லாத்துடன் தீவிரவாதம் எவ்வாறு சேரும்” என்ற கேள்வி எழுப்பும் மனநிலையிலேயே இல்லை. மேற்கத்திய ஊடகங்களோ உணர்ச்சிவசப்பட்டு ஒருபடி மேலே போய் "அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தைத் தகர்த்த ஒஸாமா" என்று கோயபல்ஸ்தனத்தையும் திறமையாகக் கையாண்டு வருகின்றன.

அதன்படி, இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் இவர்களால் வகுக்கப்பட்டன.

அந்தத் திட்டங்கள் என்ன?

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Wednesday, August 8, 2007

பெஸ்ட் பேக்கரி வழக்கில் தீர்ப்பு!



செய்தியைத் தெளிவாக படிக்க, படத்தின் மீது கிளிக்கவும்.
நன்றி: தினத்தந்தி (25-02-2006)

காலியாகிறதா முஸ்லிம் ஓட்டு வங்கி?

கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன் நகர்கிறது தமிழக சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல். புதிதாக அரசியல் பட்டிருக்கும் முஸ்லிம் வாக்கு வங்கியின் விழிப்புணர்வாக இதை நாம் புரிந்து கொள்ளலாம். வர இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் அமைப்புகள் தங்கள் கூட்டணி சீட்டு பேரத்திற்கு இந்த கோரிக்கையை துருப்புச்சீட்டாக பயன்படுத்த போகின்றன.

"கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கும்" என்று தமிழக முதலமைச்சர் கூறிய உடனேயே அதற்கு எதிரான கருத்துக்களை பத்திரிகைகள் கவனமாய் முக்கியத்துவப்படுத்துகின்றன. ராமகோபாலன், ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் வெளியிடுகின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றது இடஒதுக்கீட்டின் வழியாக மேலெழுந்து வந்த சமூகத்தின் பத்திரிகையான 'தினத்தந்தி'. 'கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டோர் என்று ஒரு பட்டியலை வழங்க சம்மதிப்பார்களா? (இரா.சோமசுந்தரம் தினமணி அக்.23. 2005) என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு எதிரான தனது குரலை பதிவு செய்கிறது தினமணியின் அரசியல் அரங்கம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற வட்டங்களைத் தாண்டி அதிகார அமைப்பில் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டோர்கள் பங்கேற்பதற்கான சமூக நீதி நடவடிக்கையே இடஒதுக்கீடு.

பொதுவாக இந்துத்துவ மயமான அரசியல், அறிவுத்தளங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும் இடஒதுக்கீடு குறித்து ஏதாவது ஒரு முடிவை அறிவித்தாக வேண்டிய நெருக்கடியில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் இருக்கின்றன.

சமீபத்தில் குமுதம் வார ஏடு தமிழக அரசியல் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பின்படி. தி.மு.க. தலைமையிலான ஏழு கட்சி கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருக்கின்ற வாக்கு வித்தியாசம் ஏழு சதவீதம் என்று பதிவாகி இருந்தது. இந்த சதவீத இடைவெளியை இட்டு நிரப்ப அ.தி.மு.க. தலைமை எல்லா தளங்களிலும் தன் வலையை விரித்துப் போட்டிருக்கிறது. சலுகைகள், நலத்திட்டங்கள், மாநாடுகள், கருணைத் தொகைகள் என்று அரசாங்கத்தின் அறிவிப்புப் பலகை புதிய புதிய செய்திகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் பவனி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவான சில அசைவுகளை இது பரவலாக உருவாக்கினாலும் மொத்தமாக ஒரு வாக்கு வங்கியை அ.தி.மு.க. குறிவைக்கிறது. அதற்கு ஏற்றதுபோல் முஸ்லிம் வாக்கு வங்கி இருக்கிறது. தமிழக அரசியல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை ஜெயலலிதா பரிசீலிப்பதாக தெரிவித்திருப்பது தனக்குத் தேவையான ஆதரவு வாக்குகளை மொத்தமாக பெறுவதற்குரிய அவரின் அரசியல் நடவடிக்கையே இது எனத் தெரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக தி.மு.க.வுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்த போதும் தி.மு.க.விலிருந்து முஸ்லிம் வாக்கு வங்கி பெரும்பாலும் அப்படியே இருந்தது. முஸ்லிம்களின் அரசியல் எதிரியான பாரதீய ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போது அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குவங்கி அ.தி.மு.க.விற்கு ஆதராவாக திசை மாறியதே தவிர பெரிய அளவில் இதுவரையில் அ.தி.மு.க. முஸ்லிம் வாக்கு வங்கியை பெற்றிருக்கவில்லை.ஆனால் இந்த முறை இடஒதுக்கீட்டை முன்வைத்து நடத்தப்படும் சிறுபான்மை அரசியல் தி.மு.க.வுக்கு சில பின்னடைவுகளை முஸ்லிம் வாக்கு வங்கியில் உருவாக்குமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. 'முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' இதுதான் எங்கள் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்குத் தான் எங்கள் ஓட்டு (புதிய பார்வை செப்.16-30) என்று கூறுகிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் போ.ஜவாஹிருல்லா.

"முன்பு ஒருமுறை கமுதி பஷீர் (தேசியலீக்) நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கலைஞர் கமுதி பஷீரின் கோரிக்கையான இடஒதுக்கீடு குறித்து தனது அரசாங்கம் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து நிச்சயம் ஆவனச் செய்யும் என்று உறுதி அளித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினார்கள். ஆனால் அவர் (கருணாநிதி) தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை" (சமநிலைச் சமுதாயம்-அக்.2005) என்று நேரடியாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் வர்த்தக பிரமுகர்களில் ஒருவருமான ஏ.வி.எம். ஜாபர்தீன். இந்த வெளிப்பாடுகள் எல்லாம் தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உரசல்களின் வெளிப்பாடுகள்.

'தி.மு.க.வின் முஸ்லிம் வாக்கு வங்கி பலகீனப்பட ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன' என்கிறார் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் தமீம் அன்சாரி. 1991-ல் பா.ம.க.வுடன் பழனிபாபா கூட்டணி உருவாக்கிய காலம் தொட்டுத் தொடங்கியது இந்த சரிவு. கோவைப் படுகொலையில் அன்றைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு நடந்து கொண்டது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்ற தி.மு.க.வின் அசைவுகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.விடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கின்றன என்றார் அவர்.

ஆனால் 'கலைஞரை நம்பலாம். கலைஞரிடமிருந்து முஸ்லிம்கள் அன்னியப் படவில்லை' என்கிறார் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் டாக்டர் சையது சத்தார்.

"புதிதாக வாக்களிக்கத் துவங்கியிருக்கும் முஸ்லிம் இளைய தலைமுறையும், இந்தத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்க இருக்கின்ற புதிய முஸ்லிம் இளைஞர்களும் தி.மு.க. மீதான நம்பிக்கை எதையும் வைத்திருக்கவில்லை. வேறு மாற்று எதுவும் இல்லாத சூழலில் இந்த புதிய தலைமுறை முஸ்லிம் வாக்காளர்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும்" என்கிறார் வஞ்சிக்கப்பட்டோர் அமைப்பின் பொறுப்பாளர் கே.எம்.ஷரீப்.

ஆயிரம் ஆண்டுகாலம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, வாழ்வியல், பொருளாதார ஓட்டங்களுடன் தங்களை ஒன்றிணைத்து வாழ்ந்த தமிழக முஸ்லிம்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் மயப்பட்டார்கள். தமிழ்ச் சூழலில் பார்ப்பனியத்திற்கு எதிரான, இந்துத்துவத்திற்கு எதிரான போரை பெரியார் தொடங்கிய போது அவரோடு முஸ்லிம் சமூகம் அரசியல் களத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. பெரியார் முன்னெடுத்துச் சென்ற சமூக நீதிப் போராட்டத்தில் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற இஸ்லாத்தை முன்வைத்தார். இனஇழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற கோசம் முன் வைக்கப்பட்டது. இஸ்லாம் குறித்த சில சின்னச் சின்ன விமர்சனங்களுக்கு அப்பால், இஸ்லாமிய சமூகத்தோடு பெரியார் கொண்டிருந்து உறவு வலுவானதாகவும் கொள்கை ரீதியானதாகவும் இருந்தது.

பார்ப்பன எதிர்பபு, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலையின் சில அம்சங்கள் உள்ளிட்ட பல புள்ளிகள் பெரியாரும் முஸ்லிம்களும் சந்திக்கும் முக்கிய சந்திகளாக இருந்தன. இறுதிவரை இந்தக் கொள்கை ரீதியான உறவு பெரியாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வலுவாகவே இருந்தது. பெரியாரிடமிருந்து விலகி தி.மு.க. உருவாகி அதன் முதல் பத்து ஆட்சி ஆண்டுகள் இந்த உறவை தி.மு.க. வைத்திருந்தது. ஆனால் 1980களுக்குப் பின்னால் தி.மு.க.வின் செயல்பாடுகள் தி.மு.க.வின் மேட்டுக்குடி வாக்குகள், கருணாநிதியின் குடும்பம் என்ற சூழலுக்குள் சிக்கிக் கொண்டன.

தலித் மக்கள், சில இடைநிலைச் சாதிகள், முஸ்லிம்கள் என காலம் காலமாக தி.மு.க.விற்கு வாக்களித்து வந்த வாக்கு வங்கிகள் குறித்த அக்கறையோ அவர்கள் முன்னேற்றத்திற்கான எவ்வித செயற்திட்டங்களோ தி.மு.க.வினால் உருவாக்கப் படவில்லை. 70களில் உருவான மதுரை வஃக்பு வாரிய கல்லூரியை தவிர வேறு எந்த சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கைகளையும் முஸ்லிம்களுக்காக தி.மு.க. மேற்கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தலைமைகளும் தி.மு.க.வின் மீது நிர்பந்தம் எதையும் தங்கள் சமூகத்திற்காக கொடுக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. இதே காலகட்டத்தில் இடை நிலை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகம், மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகம் இரண்டும் கல்வி, தொழில் இதர பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் சமூக நலன்கள் சார்ந்து செயல்பட்டு ஓரளவு வெற்றியும் பெற்றன என்பதும் உண்மையே. ஆனால் முஸ்லிம் சமூகத் தலைமை இத்தகைய சமூகம் சார்ந்த அக்கரையுடன் செயல்படவில்லை என்பதும், இப்பொழுதும் கூட இந்த இடஒதுக்கீட்டுக்கான குரலில் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் பேரம் கேட்கக் கூடிய தொனி வெளிப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அதிகாரத்திற்கான எல்லா சமரசங்களுக்கும் கருணாநிதி தயாராகிய காலகட்டம் அது. ஆண்டு தோறும் காயிதேமில்லத் நினைவிடத்தில் மரியாதை செய்வது, நோன்பு காலத்தில் முஸ்லிம் கனவாண்களுடன் அமர்ந்து கஞ்சி குடிப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது என் பிணத்தின் மீதுதான் நடந்தேறும் என வசனம் பேசுவது என்ற எல்லையுடன் கருணாநிதியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் நின்று போயின. முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. மதிப்பிட்டதின் வெளிப்பாடு இது. திராவிட இயக்கத்தின் கடைசி கண்ணியமாக இருக்கக்கூடிய கருணாநிதி பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதியின் செயலை இராமகோபலான் விமர்சித்த போது, 'வேண்டுமானால் இராமகோபாலன் கூப்பிடட்டும் விநாயகர் சதுர்த்திக்குப் போய் கொளுக்கட்டை சாப்பிடுறேன்' என்று கருணாநிதியால் தயக்கமின்றி கூறமுடிந்தது.

இப்தார் நோன்பு திறப்பு, விநாயகர் சதுர்த்தி இரண்டும் பண்பாட்டு தளங்களில் அரசியல் படுத்தப் பட்டவைகள். பார்ப்பன எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி என்ற பொது கருத்தியலில் பார்ப்பனரல்லாதவரும் சிறுபான்மையினரும் ஒன்றிணைகிற அரசியல் பண்பாட்டு இணைப்பின் குறியீடாக இப்தார் இருக்கிறது. பார்ப்பன அதிகாரத்தை மீண்டும் நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த இரண்டையும் ஒரே தரத்தில் அணுகுவது என்ற கருணாநிதியின் பார்வை அவரது கொள்கைரீதியான பலவீனத்தையே காட்டுகிறது. இந்த சிக்கல்களுடனேயே இடஒதுக்கீடு குறித்த அரசியலில் முஸ்லிம்களின் அணிசேர்க்கை தி.மு.க.வுக்கு எதிராக மாறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தரும் பட்சத்தில் முஸ்லிம் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு போவது உறுதி என்கிறார் தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது. ஆனால் 'கலைஞரை நம்பலாம் ஜெயலலிதாவை நம்பமுடியாது. கலைஞர் என்பது ஏழுகட்சி கூட்டணி. எனவே அவர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய முழுமைக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வரமுடியும். ஜெயலலிதா ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார். அதில் ஒரு அவதாரம் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அவரது கருத்தும்' என்கிறார் முஸ்லிம் லீக்கின் சையது சத்தார்.

இடஒதுக்கீடு கோரிக்கை விசயத்தில் முஸ்லிம் லீக்கைத் தவிர பிற முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரே அணியில் நிற்கின்றன என்று தெரிகிறது. தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா, இந்திய தேசியலீக், த.மு.மு.க., தவ்கீத் ஜமாஅத் என பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் குரல்கள் சேர்ந்தே ஒலிக்கின்றன. 'நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜே.எம். ஹாரூன் தலைமையில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்ட போது கலைஞர் (அப்போது அவர் முதல்வர்) அதைத் தரமுடியாது என்று மறுத்தார். இப்பொழுது தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம் என்கிறார்' என்று பழைய சம்பவத்துடன் நினைவு படுத்திக் கூறுகிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. ஆனாலும் ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை நம்பலாம் என்கிறார் கொடிக்கால். ஜெயலலிதா பரிசீலிக்கலாம் என்றுதான் கூறிஇருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதன் பிறகு பரிசீலித்தல் என்ற வார்த்தையே காலம் தாழ்த்தும் முயற்சி தான் என்பது அவர் மதிப்பீடு.

இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு கலைஞர்தான் காரணம் என்று கூறுகிறார் த.மு.மு.க.வின் தமீம் அன்சாரி. காலம் காலமாக வாக்களித்த முஸ்லிம்களுக்கு கலைஞர் எதுவும் செய்யவில்லை. எனவே தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குகள் ஜெயலலிதா இடஒதுக்கீடு வழங்கும் போது அ.தி.மு.க.வுக்கு திரும்புவது தவிர்க்க முடியாதது என்கிறார் அவர்.

இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து இருக்க அப்படி கொடுத்தாலும் இதனால் பெரிய பலன்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்ற கருத்தும் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் வேலைக்கு ஆள் எடுப்பதையே பல ஆண்டுகளாக நிறுத்திவிட்ட சூழலில் இப்பொழுது இடஒதுக்கீடு பெறுவது என்பது பெரிய பலன் எதையும் தந்துவிடாது என்கிறார் கே.எம். ஷரீப். இது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால் பலன் இருந்திருக்கும் என்பது அவரது பார்வை. "இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை விடவும் முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வைப்பதே இன்றைக்குத் தேவையானது" என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. முஸ்லிம்கள் எந்தத் துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதை முன்னேற்றுவதற்கோ, அந்தத்துறை சார்ந்த நலன்களை பாதுகாப்பதற்கோ, அந்த துறைக்கான நிதிகளை அரசிடம் இருந்து பெறுவதற்குரிய உத்தர வாதங்களைப் பெற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொல்லி முஸ்லிம் அமைப்புகள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா.

இடஒதுக்கீடை மையப்டுத்தி முஸ்லிம் அமைப்புகளிடமும், புதிதாக வாக்காளர்களாக உருவாகி இருக்கும் முஸ்லிம் வாக்காளர்களிடமும் ஏற்பட்டிருக்கும் அசைவுகளைப் புரிந்து கொண்டு அதனை தனக்கு சாதகமான சக்தியாக மாற்றுவதில் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா முந்திவிட்டார் என்றே தெரிகிறது. 69% இடஒதுக்கீடு வழக்கு தீர்வுக்கு வந்த பிறகு தான் முழுமையான இடஒதுக்கிடு குறித்து பரிசீலிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் கருத்தோடு, அதுவரையிலும் தற்காலிகமாக எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள்)க்குரிய இடஒதுக்கீட்டிலிருந்து சில சதவீதங்களைத் முஸ்லிம்களுக்கு வழங்கலாம் என்று தெரிகிறது.

அப்படி வழங்கும் பட்சத்தில் ஒரு அறிவுப்பு வந்தால் முஸ்லிம் வாக்கு வங்கி அ.தி.மு.க.வின் பக்கம் நகர்வதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாரதீய ஜனதா என்ற எதிரியை வீழ்த்தவே காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க. தலைமை இவற்றை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாற்று உண்மை. வெறும் மதச்சார்பின்மை மட்டும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்ற அனுபவ அரசியலின் அடுத்த நகர்வுதான் இடஒதுக்கீடு கோரிக்கை. இந்த நகர்வுகள் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு என பல தளங்களில் விரிவடைய வேண்டிய காலத் தேவை இருக்கிறது. அப்படி விரிவடையும் போதுதான் அரசியல் அரங்கில் அவர்கள் குரல் இன்னும் கவனமாக பரிசீலிக்கப்படும். ஏற்கனவே தலித் மக்கள், இடைநிலை சமூகங்கள் குறிப்பாக வன்னியர்கள், தேவர்கள், நாடார்கள் என்று தனது வாக்குவங்கிகள் ஒவ்வொன்றாக தி.மு.க. இழந்துவரும் சூழலில் முஸ்லிம் வாக்குவங்கியும் கைநழுவிப்போவது கருணாநிதிக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல.

நன்றி: புதியகாற்று - மாதஇதழ் (நவம்பர் 2005)

Thursday, August 2, 2007

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை! (பகுதி 3)

சுமார் 800 ஆண்டுகாலம் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த அந்தலூசியா என்றறியப்பட்ட ஸ்பெயினில், சிலுவைப் போர்களைத் தொடர்ந்து கிறிஸ்தவ தீவிரவாதம் தலைவிரித்தாடிய கால கட்டத்தில், ஒரு சதவீத முஸ்லிம்கள் கூட மீதம் இல்லாதவாறு நாடு முழுவதும் சல்லடை போட்டு முழுவதுமாக முஸ்லிம்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர். ஆனால் இன்றோ, மீண்டும் அங்கு இஸ்லாம் துளிர் விட்டு புத்துணர்வுடன் எழுச்சி பெற ஆரம்பித்து விட்டது. இது தான் இஸ்லாத்தின் சிறப்பியல்பாகும்.

இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களால் இஸ்லாம் மீண்டும் கட்டமைக்கப்பட்ட காலத்தில் முதல் இஸ்லாமிய அரசாங்கம் மதீனாவில் அமைக்கப்பட்டது. சுமார் 13 வருடங்கள் மக்கா நகரில் இஸ்லாமிய பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதியில் மக்காவிலிருந்து அம்மக்களால் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள் குடியேறிய மதீனா நகரில், அவர்கள் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவும் வகையில், மதீனா நகர மக்கள் தங்களின் முழு ஆதரவை முஹம்மது(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், முன்பு மக்கா நகரில் வாழ்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் குறிப்பிட்ட எந்த மதத்தையும் சாராமல் கடவுள் எனத் தாம் கருதிய அனைத்தையும் ஏற்று வணங்கிக் கொண்டிருந்தவர்களாவர். இவர்களிடையே 13 வருடங்கள் நபி(ஸல்) அவர்கள் நேரடியாக பிரச்சாரம் செய்த பொழுதும் கிடைக்காத வரவேற்பு, பெரும்பாலான மக்கள் முஹம்மது(ஸல்) அவர்களை நேரடியாகப் பார்த்திராத மதீனா நகரத்தில் அவர்களுக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் மதீனாவில் வாழ்ந்த மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் பல்வேறு கோத்திரங்களில் இருந்த மாறுபட்ட நம்பிக்கைகள் கொண்ட மக்களே ஆவர். இவர்களிடையே யூத, கிறிஸ்தவர்களும் பெருவாரியாக வாழ்ந்து வந்தனர்.

மிகக் குறுகிய காலத்திலேயே மதீனா நகர மக்கள் இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றதுடன், அந்த மார்க்கத்தைத் தமக்கு அறிமுகப்படுத்திய முஹம்மது(ஸல்) அவர்களையும், அவர்களின் கொள்கைகளையும் மனதார ஏற்றுக் கொண்டனர். அதாவது யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களில் நம்பிக்கை வைத்திருந்த அம்மக்களே திருக்குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களையும் ஏற்று முஸ்லிம்களானவர்கள் ஆவர். அதற்குப் பின் வந்த 10 வருடங்களில் மக்கா நகர் உட்பட ஏனைய அரபு நாடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய அரவணைப்பின் கீழ் வரும் வகையில் அந்தந்த நாட்டு மக்கள் மிக எளிதில் மனதார இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

நபி(ஸல்) அவர்களின் இறுதிகாலம் வரை, தங்களிடமிருந்து கைவிட்டுப் போன மத மற்றும் அதிகார தலைமைப் பீடங்களை திரும்பவும் மீட்க முடியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்த யூத குருமார்களும், ரப்பிகளும் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் பல்வேறு வழிகளில் மீண்டும் தங்களிடமிருந்து விட்டுப்போன அதிகாரங்களை மீட்டெடுக்க மிகுந்த சிரத்தைகளை மேற்கொண்டனர். எனினும் மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலம் வரை அதனை அவர்களால் சாதிக்க இயலாமல் இருந்தது.

“தங்களிடமிருந்து கைவிட்டுப் போன அதிகாரங்களை மீட்டெடுக்க யூதர்கள் எடுத்த பல்வேறு
முயற்சிகளின், அடிச்சுவடுகளின் மறுவடிவமே இன்றைய இஸ்லாமோஃபோபியாவாகும்.”

இஸ்லாமோஃபோபியாவின் ஊற்றுக்கண் இங்கே தான் ஆரம்பம் ஆகின்றது. அதாவது இஸ்லாமிய எழுச்சியின் ஆரம்பகாலம் வரை மத மற்றும் ஆட்சி அதிகாரத் தலைமைப் பீடங்களை தங்கள் விருப்பத்திற்கு வளைத்து போட்டு அராஜகங்களிலும், அக்கிரமங்களிலும் தான்தோன்றித்தனமாக திளைத்துக் கொண்டிருந்த யூத குருமார்களும் ரப்பிகளும் தான் இஸ்லாமோஃபோபியாவின் அன்றைய பிறப்பிடங்களாவர். தங்களிடமிருந்து கைவிட்டுப் போன அதிகாரங்களை மீட்டெடுக்க அவர்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளின், அடிச்சுவடுகளின் மறுவடிவமே இன்றைய இஸ்லாமோஃபோபியாவாகும்.

இஸ்லாத்தை வீழ்த்தினாலே தாங்கள் இழந்த தங்களின் அதிகாரங்கள் திரும்பக் கிடைக்கும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட யூதர்கள்,(இந்தியாவின் தற்காலச் சூழலுக்கு இது மெத்தப் பொருந்தும். ஆரம்பகால மனு அடிப்படையிலான பிராமணீயத்தின் ஆட்சியை தகர்த்த இஸ்லாத்தின் வருகையும் அதனை மீட்டெடுக்க இன்று நடக்கும் கடும் முயற்சிகளும் அப்படியே பொருத்திப் பார்க்கத்தக்கனவையே. இஸ்லாத்தின் வருகையால் தங்களின் ஆதிக்கம் நிச்சயம் ஆட்டம் கண்டுவிடும் என்பதை அக்கால மதீனாவின் யூதர்களின் நிலையிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட ஆதிக்க சக்திகளே எல்லா உருவிலும் இஸ்லாத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றன என்பது நினைவுகூரத்தக்கது.) ஆரம்ப காலத்தில் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க இஸ்லாமிய ஆட்சியின் அதிகார வரம்பிற்குள் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருந்து கொண்டே சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாமிய அரசின் எதிரி நாடுகள் மற்றும் குழுக்களுடன் இரகசிய ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு நயவஞ்சகமாக நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் அரசியல் ரீதியிலான முயற்சிகள் அனைத்தும் இஸ்லாம் வார்த்தெடுத்த இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நிர்மூலமாக்கப்பட்டதோடு, வீரியத்துடன் அண்டைநாடுகளுக்கும் இஸ்லாம் எடுத்துச் செல்லப்பட்டது.

உடல்பலத்தின் மூலம் இஸ்லாத்தை தகர்ப்பது இயலாத காரியம் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட யூதர்களுக்கு, அவர்களின் தந்திரமான மதியூகத்திற்குப் பிரதிபலன் மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கிடைத்தது. நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழரும் அவர்களின் மருமகனுமான உஸ்மான்(ரலி) அவர்களைக் கொலை செய்ததன் மூலம், இஸ்லாத்தைத் தகர்க்கும் காரியத்திற்கு யூதர்கள் துவக்கம் குறிக்க ஆரம்பித்தனர்.

இதன் பின்னர் அவர்களின் செயல் திட்டம் அனைத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளிலும், சட்டதிட்டங்களிலும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களிலும் இடைச்செருகல்களைப் புகுத்துவதிலும், இஸ்லாமியர்களிடையே பிரிவுகளையும், பகைமைகளையும் உருவாக்குவதிலும் திரும்பியது. இதற்காக அவர்கள் தங்களை முஸ்லிம்களாக அறிவித்துக் கொண்டு இஸ்லாத்தை மிகத்தெளிவாக படிப்பதில் தங்களின் ஆரம்பகாலத்தை செலவழித்தனர். நபி(ஸல்) அவர்களின் காலத்திலேயே, தன்னை முஸ்லிமாக காட்டிக் கொண்டு, முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிட வலம் வந்த அப்துல்லாஹ் பின் உபை என்பவரின் செயல்பாடுகள் இவற்றிற்கு சாட்சியம் பகரும். அப்துல்லாஹ் பின் உபையின் வழித்தோன்றல்கள், இன்றைய காலகட்டத்தின் சல்மான் ருஷ்டி வரை இஸ்லாத்தினுள் முஸ்லிம் போர்வையில் இருந்து கொண்டு இஸ்லாத்தைத் தகர்க்க முயலும் வேலையைச் செவ்வனே உலக இலாபத்திற்காக செய்பவர்களின் பட்டியல் இஸ்லாமிய வரலாற்றில் நீண்டு பரந்து காணப்படுகின்றது.

தங்களிடமிருந்து கைவிட்டுப் போன மத, அரசியல் அதிகாரங்களை திரும்பவும் கைப்பற்ற யூதர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைத் தோல்வியுறச் செய்த இஸ்லாத்தின் அதீத வளர்ச்சி, யூத மத குருமார்களுக்கும், ரப்பிகளுக்கும் இஸ்லாத்தின் மீதான அதீத பயத்தை பிற்காலத்தில் தோற்றுவித்தது. எனவே அதனை எதிர் கொள்வதற்கான செயல்திட்டங்களை மும்முரமாக வகுக்க ஆரம்பித்தனர்.

“ முஸ்லிம்கள் மனதிலிருந்து இஸ்லாத்தை அகற்ற வேண்டுமெனில் அவர்கள் நம்பிக்கையின்
அடித்தளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மீதான சந்தேகத்தை தோற்றுவிப்பதே தலையாய பணியாக
இருக்க வேண்டும் என்ற வகையில் யூதர்கள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தனர். ”

இஸ்லாத்தை நன்கு விளங்கி, முஸ்லிம் பெயர்களில் வலம்வந்த யூதர்கள், இஸ்லாத்தின் அடித்தளமான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களும் தான் இஸ்லாமிய எழுச்சியின் அடித்தளங்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, முஸ்லிம்கள் மனதிலிருந்து இஸ்லாத்தை அகற்ற வேண்டுமெனில் அவர்கள் நம்பிக்கையின் அடித்தளமான குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் மீதான சந்தேகத்தை தோற்றுவிப்பதே தலையாய பணியாக இருக்க வேண்டும் என்ற வகையில் தங்கள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தனர். (இந்த ஆதிகாலத்து உத்தியைத் தான் இன்றைய நவீன இஸ்லாமோஃபோபிக்குகள் செய்வதை தமிழிணையத்தை வலம் வருபவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம்)

இறைவனால் பாதுகாக்கப்பட்ட அருள்மறையாம் திருக்குர்ஆனின் வசனங்களில் எவ்விதமான ஒரு மாற்றத்தையும் கொண்டு வர இயலாது என்பதைப் புரிந்து கொண்டு, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் இடைச்செருகல்களைத் திணிக்க ஆரம்பித்தனர். இது தொடர்பாக யூதர்கள் பறித்த முதல் வெற்றிக் கனிதான் நாம் முன்னர் குறிப்பிட்ட மூன்றாம் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களின் படுகொலைச் சம்பவம். எனினும், இந்தக் கையாடல்களை வெகு வேகத்தில் உணர்ந்தெழுந்து கொண்ட இஸ்லாமியச் சமூகம், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை மிகத் தெளிவாக தரம் பிரித்துத் தொகுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. இந்த முயற்சியில் எண்ணிலடங்கா அறிவிப்பாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் தெளிவாக அலசப்பட்டு நம்பகத் தன்மை புடம்போடப்பட்டுவிட்டது.

1428 வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களின் இந்த சுருக்கம், இன்றைய இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடான "இஸ்லாமியத் தீவிரவாதம், பயங்கரவாதங்களின்" மறுபக்கத்தைத் தெளிவாக தோலுரிக்கின்றன. கடந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் பல்வேறு பிரச்சனைகளில் தலை கொடுத்து சிதறிப்போன யூத சமூகம், ஒரு கால கட்டத்தில் இருப்பதற்கு இடமின்றி உலகின் நாலா பக்கங்களிலும் கிறிஸ்தவ சிலுவைப்படையினராலும், ஹிட்லர் போன்ற யூத எதிர்ப்பு ஆட்சியாளர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டனர். தாமதமாக அதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட யூதர்கள் மிகத் தெளிவாக திட்டம் வகுத்து இன்று உலகின் அனைத்து அதிகார பீடங்களிலும் முடிவுகளை நிர்ணயிக்கும் அதிகாரம் படைத்தவர்களாக மாறி இருக்கின்றனர்.

இன்றைய கணக்கின்படி அமெரிக்க செனட்டில் அமெரிக்காவிற்கு மிக அதிக அளவு நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் யூதப் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அமெரிக்காவின் அதிகார உயர் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்திபடைத்தவர்களாக (lobbyist) இவர்கள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் எவ்வாறு இஸ்லாத்தை அழித்தொழிக்க பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்பட்டனரோ, அதே ரீதியில் இன்றும் இவர்களே செயல்படுகின்றனர் என்பதை மீண்டும் தனியாகக் கூற வேண்டியதில்லை. இதற்கும் இன்றைய இஸ்லாத்தின் அதீத வளர்ச்சியே இவர்களின் அடிமன பயத்திற்கு காரணம் எனபதில் சந்தேகமில்லை. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி,

கடந்த 50 வருடங்களில் மட்டும் 235% க்கும் மேலாக (1.6 பில்லியனுக்கும் மேல்) இஸ்லாமியர்கள் பெருகியுள்ளனர். பரவி வரும் கிறித்துவத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் கிறித்துவம் 47% மட்டுமே அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய சமயமாக இஸ்லாம் முன்னணி வகிக்கிறது. “அமெரிக்காவின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமயமாக இஸ்லாம் உள்ளதென” அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் நான்கு பேர்களில் ஒருவர் இஸ்லாமியராய் இருக்கிறார்.

** 1989-1998 வருடத்திய புள்ளி விபரங்கள்: (இஸ்லாம் பரவும் எண்ணிக்கை சதவீதத்தில்)

வட அமெரிக்கா:
25%

ஆப்ரிக்கா:
2.15%

ஆசியா:
12.57%

ஐரோப்பா:
142.35%

லத்தீன் அமெரிக்கா:
4.73%

ஆஸ்திரேலியா:
257.01%

இந்த அதிவேக வளர்ச்சியினால் எழுந்த பயம் மற்றும் பித்தலாட்டங்கள் பலனளிக்காததன் மூலம் எழுந்த இயலாமை ஒரு கட்டத்தில் முற்றிப்போய் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை மோசமாகச் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்டு தங்கள் மனவெறுப்பை வெளிப்படுத்தும் நிலைக்கு இவர்களை கொண்டு சென்று விட்டது.

இஸ்லாமிய வளர்ச்சியை சீர்குலைக்க, ஆரம்ப காலத்திலிருந்து பல்வேறு திட்டங்களை வகுத்து அதில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறிப் பெற்று வந்த யூதர்களுக்கு, இந்நூற்றாண்டு பொற்காலம் என்றால் அது மிகையாகாது.

அன்று விதைத்திருந்த எல்லாவிதமான திட்டங்களுக்கும் உரிய அறுவடையை இன்று பெற்றுக் கொள்கின்றார்கள் என்றே கூறலாம். இன்று உலகம் முழுக்க இஸ்லாத்தின் மீதான ஒருவித பயம் முழுமையாக ஓர் பனித்திரை போன்று நிலவி வருகின்றது. இதன் ஒரு பகுதியே நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான கார்ட்டூன், இஸ்லாமிய தீவிரவாதம்/பயங்கரவாதம் என்ற சொல்லாடல்கள், பேணுதலாய் காட்சியளிக்கும் தாடி, தொப்பி, ஹிஜாப் போன்ற இஸ்லாமிய அடையாளங்களுடன் காண்பவர்களையெல்லாம் பயத்துடனே எதிர் கொள்ளல் போன்றவை.

திட்டமிட்டுப் பரப்பப்படும் இஸ்லாமோஃபோபியா நோயில் சிக்குபவர்களில் பெரும்பாலானோர், உண்மையில் இஸ்லாத்தின் அடிப்படைகளை சிறிதும் அறியாதவர்களாகவே உள்ளனர். ஆனால் அதே நேரம் அவ்வாறு கண்மூடித்தனமாக இஸ்லாமிய கோட்பாடுகளை எதிர்ப்பவர்களே சில நேரம் இஸ்லாத்தின் முகத்தினைக் குறித்து தெளிவான கோணத்தில் அறிய நேரும்பொழுது இருள் விலகி இஸ்லாத்தினுள் நுழையும் எதிர்மறை சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுவதை காணமுடிகின்றது. அமெரிக்க 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின் இஸ்லாத்தின் மீது திருப்பி விடப்பட்ட எதிர்மறை பிரச்சாரத்தின் விளைவுகளில் இதுவும் நடந்தது நினைவு கூரத்தக்கது.

எது எப்படி இருந்தாலும், இஸ்லாத்தின் மீதான தாக்குதல் இன்று வீறு கொண்டு எழுப்பப்படுவதும் அதில் இஸ்லாத்தின் கொள்கைகள், வாழ்க்கை முறைகள் தவறாக வியாக்கியானிக்கப்படுவதும் பரவலாக நடைபெற்றே வருகின்றன.

மேற்கத்திய ஆதிக்கவாதிகளின் இத்தகு செயல்பாடுகள் அனைத்தும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றவைகளே என்பவற்றிற்கு ஆதாரமாக, இஸ்லாமோஃபோபியா-வின் உட்கூறுகளை ஆராய்ந்து கடந்த நவம்பர் 1997 இல் Runnymede Trust வெளியிட்டுள்ள அறிக்கையான Islamophobia: A Challenge For Us All யில் காணப்படும் இஸ்லாமோஃபோபியாவை பிரதிபலிக்கும் எட்டு விஷயங்களை குறிப்பிடலாம். இவை மேற்குறிப்பிட்ட இஸ்லாத்தின் மீதான தாக்குதல்களுக்காக வகுத்துக் கொண்ட 5 அடிப்படை விஷயங்களை அப்படியே பிரதிபலிப்பதை காணலாம். இதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக, சாமான்ய மனிதர்களுக்குக் காதில் பூவையும், கண்களில் இலவசமாக ஒரு மஞ்சள் கண்ணாடியும் வலுக்கட்டாயமாக அணிவிக்கப்பட்டு தொடர்ந்து இஸ்லாத்தைக் குறித்த பயப்பாடம் நடத்தப்படுவதை புரிந்து கொள்ளலாம்.

Runnymede Trust- ன் அறிக்கையின்படி, 'இஸ்லாம்' என்பது, இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் கொண்ட இஸ்லாமோஃபோபியாக்களின் பார்வையில் இவ்வாறுதான் பார்க்கப்படுகின்றது.

அதாவது இஸ்லாம் - என்றால்...

1. வளைந்து கொடுக்காத தன்மையுடையது; காலத்திற்கேற்ற மாறுதல்களை ஏற்றுக் கொள்ளாதது.

2. பிற மதக்கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதுடன், அதன் மூலம் எத்தகைய சாதக பாதகத்தையும் எதிர்பார்க்காமல் இருக்கக்கூடியது.

3. மேற்கத்தியவர்களை இழிவாகக் கருதக்கூடியது; காட்டுமிராண்டித்தனமானது; அறிவுக்குப் பொருந்தாதது; புராதான காலத்தியது; காமுகர்களைக் கொண்டது.

4. மூர்க்கமான, வலியத்தாக்கும் தன்மையுள்ள, அச்சுறுத்தக்கூடிய, பயங்கரவாதத்திற்குத் துணைபோகக்கூடியது; மனித சமுதாயத்திற்குள் சச்சரவுகளை ஏற்படுத்தக்கூடியது.

5. நுண்புலத்துடன் அரசியல் மற்றும் ராணுவ அனுகூலங்களுக்காகவும் பயன்படுத்தப்படக்கூடியது.

6. மேற்கத்திய நாடுகளால் கண்டறியப்படும் அதிலுள்ள குறைகளை நிராகரித்து விடக்கூடியது.

7. பொதுவாக ஒரு நாட்டிலுள்ள சமுதாயம் செல்லும் கலாச்சாரப்போக்கின் கீழ் கலக்காமல் தனித்து நிற்கக்கூடியது.

8. முஸ்லிம்களுக்கெதிரான பகைமையை வெகு இயல்பான கண்ணோட்டத்திலேயே பார்க்கக் கூடியது.

உருண்டாலும் பிரண்டாலும் இஸ்லாத்தின் மீது அவதூறைப் பூச மேற்கூறப்பட்ட இவற்றைத் தவிர வேறு காரணங்களை இத்தகைய ஃபோபியாக்களால் கையாள இயலாது. சமீப கால கட்டங்களில் இஸ்லாமிய வளர்ச்சியை தடுக்கும் பிரச்சார முறைகளில், மேலே பட்டியலிடப்பட்ட எட்டு தன்மைகளும் அடங்குவதை கவனிக்க வேண்டும். இன்று மக்களின் மனதில் இஸ்லாத்தை குறித்த பயத்தை வலிந்து உருவாக்க வகுக்கப்பட்டுள்ள திட்டங்களின் அடிப்படை வரைவிலக்கணமாகவே இவற்றைக் கொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

ஆக்கம்: அபூ ஸாலிஹா