நவீன உலகின் சட்டாம்பிள்ளையாக நிரந்தரமாக வலம் வரவேண்டும் என்ற அதிகார வெறி, தன்னை எதிர்ப்பவர்களையும் எதிர்காலத்தில் தனக்கு மிகப்பெரிய சவாலாக வர நேரிடலாம் என கணிக்கப்படுபவர்களையும் நிர்மூலமாக்குவதில் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டு செயல்பட வைக்கின்றது. அமெரிக்க நிர்வாகத்தின் இந்த அதிகார வெறியே, பாரம்பரியமாக அவர்களின் நம்பிக்கைக்கும், கொள்கைக்கும் நேர் எதிர் கொள்கையுடைய யூதர்களோடு தற்காலிகமாய் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர்களின் திட்டங்களை முன்னெடுத்து செல்ல வைக்கின்றது.
ஆனால் சற்றே கூர்ந்து கவனித்தால் அமெரிக்க நிர்வாகம், யூதர்களின் சூழ்ச்சிக்குப் பலியாகி விட்டது என்பதை எவரும் உணரலாம். உலகின் அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அரும்பாடுபட்டுச் சித்தரித்துக் கொண்டிருக்கும் இவ்விரு சக்திகளும் ஒரே உறையில் இருக்க முயலும் இரு கத்திகள் என்பதை உலகம் கண்டு கொண்டு வருகிறது. ஒருவருக்கு இஸ்லாத்தை அழிப்பது தான் நோக்கம் எனில், மற்றவருக்கு உலக அதிகாரத்தை கையில் வைத்திருப்பது மட்டுமே பிரதான நோக்கமாகும். உலக அதிகாரத்தை கையில் வைக்கக் காயை நகர்த்தும் அமெரிக்கா, தன் குறிக்கோளை எட்ட மிகவும் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை, யூதர்களை உள்ளும் புறமும் நன்றாக ஊட்டி வளர்த்து வைத்திருக்கின்றது.
“ ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு
கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை
ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே
இவை செயல்படுத்தி வருகின்றன. ”
இதற்கு உதாரணமாக மத்தியகிழக்கில் அமெரிக்கா நடத்தும் நாடகத்தை கூறலாம். உலகில் சமாதானத்தை ஏற்படுத்தப் போவதாக உருவகப்படுத்தும் அதேவேளையில், மத்திய கிழக்கை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும்படியாக, ஒரு பக்கம் இஸ்ரேல் எனும் அபகரித்து உருவாக்கப்பட்ட யூத நாட்டிற்கு நவீன ஆயுதங்களை வாரி வழங்கி விட்டு, பலகீனமான இராக்கை உயிர்க் கொல்லி பயங்கர ஆயுதங்களைக் கையில் வைத்திருப்பதாக கூறி கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது.
இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
ஒரு காலத்தில் தன்னால் இரானுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டு அமெரிக்காவுக்கு கட்டுப்பட மறுத்த சதாம், அதிரடியாக தனது எண்ணெய்க் கையிருப்பை யூரோவுக்கு மாற்ற முனைந்ததும், மத்திய கிழக்கில் ஓர் இஸ்லாமிய கூட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்து அரபு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்து அதனை முதன் முதலில் அப்போதைய யூதர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் ஃபலஸ்தீனின் அதிபராக(!) இருந்த யாசர் அரஃபாத் வரவேற்றது தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படியே விட்டால் நாளை அமெரிக்காவிற்கு மிகப்பெரும் சவாலாக அரபு நாடுகள் ஒன்றிணைந்து களமமைத்து விடுமோ என்ற அச்சத்திலேயே, அமைதிக்காக உருவாக்கப்பட்டு இன்று அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டுவரும் ஐநா சபை உள்பட உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து கடுமையாக எதிர்த்தபோதும், புஷ் இராக்கை நிர்மூலமாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றார்.
ஒரு பக்கம் தானே நேரடியாக முஸ்லிம் நாடுகளை ஒவ்வொன்றாகக் குறி வைத்து தகர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளை, மத்திய கிழக்கின் அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் ஃபலஸ்தீன் ஆக்ரமிப்புப்பூமியான இஸ்ரேலுக்கு அதன் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விட பலமடங்கு அதிகமான அளவில் நவீன ஆயுதங்களை வாரி வழங்கி வருகிறது. புருவத்தைத் தூக்கும் உலக சோம்பேறி நடுநிலைவாத நாடுகளை திருப்திப்படுத்த, (இஸ்ரேலிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள) அரபு நாடுகளுக்கும் ஒரு பெயருக்காக வீசி எறிகிறது. சமீபத்தில் அரபு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கிய ஆயுதங்களின் கணக்கீடு (நன்றி: கல்ஃப் டைம்ஸ் 29/07/2007 பதிப்பு) இதனைத் துல்லியமாக தெரிவிக்கின்றது. இஸ்ரேலுக்கு 30 பில்லியனுக்கும் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் சேர்த்து 20 பில்லியனுக்குமான அடுத்த பத்து வருடங்களுக்கான ஆயுத, ராணுவ வினியோகத்திற்கான ஒப்பந்தப் பட்டியல் இங்கே:
சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, பெரும் அழிவை ஏற்படுத்தும் ஆயுத விற்பனை மூலம் கொள்ளை இலாபம் ஒரு பக்கம், எதிர்காலத்தில் தனக்குப் போட்டியாக எந்த ஒரு நாடும் முளை விட்டுக் கிளம்பி விடாமலிருக்க, அவர்களின் சிந்தனை தன் பக்கம் திரும்பா வண்ணம் உள்நாட்டுப் போரைத் தூண்டும் குழப்பங்களைத் தொடர்ந்து விளைவிப்பது என்று கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியாக ஒருவர் மாற்றி ஒருவர், தங்களின் இலட்சியக் கனவை பிறர் உணர நேர இடைவெளி கொடுக்காமலேயே திறமையாகச் செயலாற்றி வருகின்றனர்.
அதிகாரத்தை அடித்துப்பிடித்து நிலை நிறுத்திக்கொள்ள இவ்விரு கூட்டமும் இன்று எடுத்துக்கொள்ளும் இவ்விதமான ஒவ்வொரு முயற்சியும் இஸ்லாமோஃபோபியாவின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. அதிகாரத்தில் தற்போது இருக்கும் முன்னோடிகள் தனக்குப் பின்னால் வருபவர்களுக்கு தாம் செயல்படும் முறைகளைக் குறித்து ஓர் அறிவிக்கப்படாத செயல்முறை வகுப்பையே நடத்துகின்றனர் எனலாம். இஸ்லாமோஃபோபியாவின் அடிப்படையில் அமைந்த இச்செயல்பாடுகள் அதிகாரத்திற்காக அடுத்தடுத்து பதவிக்காக போட்டியிட முன்வருபவர்களுக்கு நல்ல(?) ஓர் முன்மாதிரியாகவும், ஊடாக போஷாக்குடன் வளர்த்து வந்த இஸ்லாமோஃபோபியாவையும் சேர்த்து அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் உதவுகிறது.
இதன் உச்சகட்டமாக, சமீபத்தில் அமெரிக்க அதிகாரத்திற்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர், தனது இலக்காக இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை குண்டு போட்டுத் தகர்க்க வேண்டும் என முழங்கி இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஏற்கனவே இதனையே கடந்த 2005ல் கூறியிருக்கிறார் என்பதால் தற்போது அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இவர் ஃபோபியா உச்சத்திற்கு ஏறி வார்த்தைகளாக வெளிவந்ததை, மீண்டும் ஒருமுறை அலடசிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியவில்லை.
ஒரு பக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி முஸ்லிம்களை அழித்தொழிக்க இவ்விரு கூட்டமும் காய்களை நகர்த்தும் அதேவேளையில், (இத்தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் குறிப்பிட்டது போன்று) முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி, தம்மைத் தாமே அடித்துக்கொண்டு சாவதற்கான எல்லா முயற்சிகளையும் செவ்வனே இவை செயல்படுத்தி வருகின்றன.
ஆரம்பகாலத்தில் முஸ்லிம்களை பிளவுபடுத்த யூதர்கள் கையாண்ட குயுக்தியாக, நபி(ஸல்) அவர்களின் பதிவு செய்யப்பட்ட வாழ்க்கை வரலாற்றில் நபியவர்கள் செய்யாத, செயல்படுத்த, கூறாத விஷயங்களை அவ்வாறு நடந்ததாகவும், இடைச்செருகலிட்டு இட்டுக்கட்டினார்கள் எனில், தற்காலத்தில் அமெரிக்கா கையாளும் முறை வித்தியாசமான, அதிபயங்கரமான முறையாகும்.
“சுதந்திரத்தை விரும்பும் நம்மையும், நம் நாட்டையும் அழிக்க இஸ்லாமியத் தீவிரவாதிகளால் திட்டமிடப்படுகின்றது" - அமெரிக்காவில் எந்தவொரு மூலையில் ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் மைக்கை பிடித்து ஜார்ஜ் புஷ் முழங்கும் வழமையான இந்த வீர வசனத்தின் பின்னணி என்ன என்பது தற்போது விளங்கியிருக்கும்.
சமீபத்தில் பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அநியாயமான முறையில் சிவப்பு மசூதி மீது நடத்திய தாக்குதலின் இறுதியில் “இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான அதிபர் முஷாரப்பின் செயல்பாடு பாராட்டத்தக்கது. முஷாரப் என் உற்ற தோழன்” என உச்சி முகர்ந்திருந்த புஷ், இன்று பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க நேரும் என அந்தர் பல்டி அடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிவப்பு மசூதி இமாம் தனது இறுதி தருணத்தில் கூறிச் சென்றது போன்று, இன்று பாகிஸ்தான் பொதுமக்களாலேயே அங்கு ஓர் இஸ்லாமிய அரசு அமைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் வந்ததாலேயே புஷ் அந்தர்பல்டி அடிக்கத்துவங்கி விட்டார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
விபச்சாரம், போதைப்பொருட்கள் மூலம் இளைய சமுதாயத்தை சீரழிக்க முனைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்ததை, மேற்கத்திய சீரழிந்த நாகரீகத்தில் அதிநாட்டம் கொண்ட முஷரப் கண்டுகொள்ளாத காரணத்தாலேயே சிவப்பு மசூதியின் மாணவ-மாணவிகள், தாமாகத் தெருவில் இறங்கி பியூட்டி பார்லர்கள் என்ற பெயரில் நடந்த விபச்சார விடுதிகளை திடீர்சோதனை நடத்தி சில விபச்சார பெண்களை சிறைபடுத்தினர் என்பது அனைவரும் அறிந்த காரியமாகும்.
“ இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள்“இஸ்லாம் அமைதியை போதிக்கும் மார்க்கம்" என்று ஒருபுறம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகம், மறுபக்கம் “இஸ்லாமியத் தீவிரவாதிகள்” என்று எதிர்மறையாகப் பேசுவதை கவனிக்கும் எவருமே, “இஸ்லாம் அமைதி மார்க்கமெனில், சமூகத்திற்கும், அமைதிக்கும் எதிரான தீவிரவாதிகள் எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்? அவ்வாறு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அமைதியான இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வருவார்களா? அல்லது அமைதியை போதிக்கும் இஸ்லாத்தை தெளிவாக கற்றுக் கொண்ட எவராவது பொது அமைதிக்கு எதிராக தீவிரவாதத்தில் ஈடுபடுவார்களா?” என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. இது தான் புஷின் தந்திரத்திற்கும், அதீத முயற்சியுடனான திரும்பத் திரும்ப புழக்கத்தில் அவ்வார்த்தைகளை விட எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
எப்படி இஸ்லாமியர்கள் ஆவார்கள்?... என்ற கேள்வியை எழுப்புவதே கிடையாது. ”
ஒருபக்கம் “இஸ்லாமிய தீவிரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து” என புஷ் நிர்வாகம் முழங்கும் அதேநேரம் மறுபுறம் மறைக்கப்படும் உண்மைகளையும், பிரபல செய்தி ஊடகங்களுக்குப் பொய்களை மெய் போல் சித்தரித்துத் தயாரித்து அளிக்கும் நயவஞ்சத்தினையும் செவ்வனே செய்தது. நீண்ட காலத் திட்டத்தின்கீழ் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட இச்சாதுரியமான திட்டமிடுதல் நல்ல பலனையும் தந்தது. அடிப்படை கொள்கைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் என்ற பார்வையுடனேயே பொதுமக்கள் பார்க்கும் விதத்தில், மக்களின் சிந்தனையை மூளைச்சலவை செய்யும் இக் குறிக்கோள் வெற்றி பெற்றது. எதிர்மறையாய் நிகழும் அனைத்திற்கும் மூல காரணமாய் இருப்பது இஸ்லாமும் அதன் கோட்பாடுகளுமே என்ற துர்சிந்தனை தொடர்ச்சியாக மக்கள் மனங்களில் பயிர் செய்யப்பட்டது. இதன் மூலம் முஸ்லிம்களின் பின்னணி, அவர்களின் உடமைகள் ஆகிய அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஐய முத்திரை குத்தப்பட்டது. மேல் மட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை ஒவ்வொருவரும் கேள்விக்குட்படுத்தப்பட்டனர். ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் ஒவ்வொரு அசைவும் ஆவணமாக்கப்பட்டது.
"தேசியவாதத்தை முன்வைத்த எந்த ஒரு சித்தாந்தத்தையும் தரையில் வீழ்த்தி தவிடு பொடியாக்கும் மிகத்தெளிவான மற்றும் வலிமை வாய்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை முஸ்லிம்கள் பின்பற்றுவதால் அவர்களிடம் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும்" - மீடியா உலகின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் ரூபர்ட் மர்டோ ஆஸ்திரேலியாவின் ஸிட்னியில் ஜூன் 26, 2006 ல் நடந்த ஒரு கூட்டத்தில் உதிர்த்த சொற்கள் இவை.
அமெரிக்க, பிரிட்டனின் ஊடகங்கள் எத்தகைய செய்திகளைப் பிரசுரிக்க வேண்டும், எவற்றை மறைத்து ஓரங்கட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய ஒரு பெருந்தலையின் அடிமனதில் இருக்கும் இத்தகைய துவேஷ எண்ண ஓட்டத்தை வைத்து அதன் பிரதிபலிப்பு ஊடகங்களில் எவ்வகையில் வெளிப்படுத்தப்பட்டு அவை சமூகத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்து இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் பரஸ்பர அன்பையும் எடுத்தியம்பும் விதமாக பிரிட்டனில் இலட்சக்கணக்கானோர் நடத்திய பேரணியையும் அவர்கள் கையில் பிடித்துச் சென்ற பேனர்களையும் படம் பிடித்து பிரசுரிப்பதை ஏனோ தவிர்த்துக் கொண்ட ஊடகங்கள், கூட்டத்தினூடே ஒருவர் குறும்பு செய்யும் எண்ணத்தில் கையில் கொண்டு வந்த பேனர் ஒன்றை மட்டும் முகப்புப் பக்கத்தில் பிரசுரித்து தங்கள் குறிக்கோளை நன்றாக நிறைவேற்றின.
என்னதான் தலைகீழாக நின்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குறை சொல்ல முற்படுவதன் மூலம், தாம் எண்ணியதைச் செயல்படுத்தி விடமுடியாது என்பதை மிகத் தாமதமாக புரிந்து கொண்டு, இஸ்லாமிய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளில் முக்கியமானவை, இஸ்லாத்தின் கோட்பாடுகளை இசைந்து, முறையாகப் பின்பற்றுவோரை சமூகப் பிணைப்பில் இருந்து வேறுபடுத்துவதாகும். அதற்கு ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம்தான் தீவிரவாதிகள் எனும் அடைமொழி.
இஸ்லாமியர்களிடமிருந்து மேற்கத்திய உலகைப் பிரித்தாளும் சூழ்ச்சியாக அடிப்படைவாத வலதுசாரி யூதகுருமார்கள் பயன்படுத்திய இவ்வார்த்தையை அமெரிக்காவோடு சேர்ந்து பிரிட்டனும் முன்னோர்கள் காட்டித் தந்த வழியிலேயே கன கச்சிதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
மேற்கத்திய ஊடகங்கள், அமெரிக்காவையும் பிரிட்டனையும் அச்சுறுத்தும் பயங்கரவாதச் செயல்களின் அதிகரிப்பை, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் பழி சுமத்துவதற்கான ஒரு நேர்த்தியான போர்க்கலைத் தந்திரமாகவே கையாண்டு வருகின்றன. இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை உணராத சாதாரண மக்களின் அறியாமையை முதலீடாக வைத்தோ அல்லது முஸ்லிம்களின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சியைத் தூண்டுவதன் மூலமோ இதை எளிதில் சாதிக்க திட்டமிட்டன. குழுக்களாகவும் அமைப்புகளாவும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டு இஸ்லாமிய சமூகத்தை முழு அளவில் பாதிப்படைய வைக்கும் விதத்திலான தாக்குதல்களைத் தொடுத்தன. இவை அனைத்திற்கும் அடிப்படை மூலகாரணமாக அமைந்தது இஸ்லாமோஃபோபியா எனப்படும் அதீத அச்சம் அன்றி வேறில்லை.
அறியாமையினாலோ சார்பு மனப்பான்மையினாலோ மேற்குலகில் அவ்வப்போது எழும் கூக்குரல்கள் முக்கியமாக, செயல்முறைக் கொள்கைகளை வகுக்கும் சமூகம், இஸ்லாத்தின் மீது பழியைச் சுமத்த உறுதியுடன் முடிவு செய்தது. மெல்லும் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்?
இஸ்லாத்தின் மீதான துவேஷத்திற்கானத் தீனியாகக் கடந்த 9/11 பயங்கர நிகழ்வுகளின் மூலம் எழுந்த அச்சம் கலந்த ஐயப்பாடுகளை இஸ்லாமியர்களுக்கு எதிரான இயங்குவிசையை மீண்டும் தூண்டிவிட்டது. War on Islam என்பதைச் சூசகமாக War on Terrorism என்ற வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டு இஸ்லாத்தைத் தனிமைப்படுத்த முயற்சிகள் செய்தன. இன்று வரை உலக அரங்கில் நிரூபிக்கப்படாத 9/11 குற்றத்தைப் புரிந்தவராக கருதப்படும் (Prime Suspect) ஒஸாமா பின் லேடன் "இஸ்லாமியத் தீவிரவாதி" என்றே செல்லமாக அழைக்கப்படுகிறார். எவரும் “அமைதி மார்க்கமான இஸ்லாத்துடன் தீவிரவாதம் எவ்வாறு சேரும்” என்ற கேள்வி எழுப்பும் மனநிலையிலேயே இல்லை. மேற்கத்திய ஊடகங்களோ உணர்ச்சிவசப்பட்டு ஒருபடி மேலே போய் "அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தைத் தகர்த்த ஒஸாமா" என்று கோயபல்ஸ்தனத்தையும் திறமையாகக் கையாண்டு வருகின்றன.
அதன்படி, இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் தீய சக்தியாக உருவகப்படுத்த இரு செயல் திட்டங்கள் இவர்களால் வகுக்கப்பட்டன.
அந்தத் திட்டங்கள் என்ன?
ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)
No comments:
Post a Comment