Friday, December 8, 2006

சன் டீவிக்கு நன்றி!

சன் டீவி செய்திகள்

ராணுவ பின்புலமற்ற லெபனானுக்குள் எல்லைக் கோட்டைத் தாண்டி அத்துமீறி நுழைந்த சில இஸ்ரேலின் படை வீரர்களை, ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்த நாள் முதற்கொண்டு, அமெரிக்காவின் ஆசியுடன் இஸ்ரேல் அநியாயமாக போர் தொடுத்து லெபனானைச் சுடுகாடாக மாற்றி வருவதும், அதனை எதிர்த்து இஸ்ரேலிய படையினரிடமிருந்து தனது சொந்த மண்ணைக் காக்க ஹிஸ்புல்லாஹ் போராளிகள் தீவிரமாகப் போராடி வருவதும் யாவரும் அறிந்ததே!

பாலஸ்தீனப் போராளிகளாகட்டும், அல்லது ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினராகட்டும், இவர்களைத் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்றே சன் டிவி செய்திகளில் வழக்கமாகக் கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன மக்களின் காதுகளுக்கு சமீப நாட்களாக சன் செய்திகளில் தனது "தீவிர"த்தை நீக்கி "ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தினர்" என்றே குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சன் டிவியின் பாரபட்சமற்ற இந்தச் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. தமிழ் முஸ்லிம் கூட்டுவலைப்பதிவின் மூலம் சன் டிவி நிர்வாகத்தினருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(நன்றி தெரிவித்தல் என்பது அழகிய இஸ்லாமிய நற்பண்பாக இருப்பதனால், சன் டீவி நிர்வாகத்தினருக்கு நன்றி கூற விரும்பும் சக சகோதரர்கள் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்)

- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

Tuesday, August 15, 2006

அநியாயக்கொலைகள் பற்றி இஸ்லாம்!

பரபரப்பான உலகின் இன்றைய சூழலில் தினசரி பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய தளங்களின் செய்திகளில் போர் மற்றும் வன்முறைக்கலவரங்களில் பலியாகும் உயிர்களின் பட்டியலே முதன்மை வகிக்கின்றது. இன்று மனிதம் என்பது மதிப்பற்ற செல்லாக் காசாக்கப்பட்டு வன்முறை தாக்குதல்காளின் மூலமாக மனித உயிர்கள் அனுதினமும் அழிக்கப்படுகிறது. அதிலும் வன்முறைத் தாக்குதலில் பலியாகுபவர்கள் இத்தகைய சம்பவங்களுக்குச் கொஞ்சமும் சம்பந்தப்படாத சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் போன்றவர்களே!.

மனித நேயமற்று அநியாயமாக இப்படிக் கொலை செய்யப்படும் உயிர்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?

போரில் கலந்து கொள்ளும் பெண்களையும் சிறுவர்களையும் கூட கொலை செய்யப்படுவதைத் தடுத்த நபி(ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருப்பார்கள்? என்ற கேள்விகள் ஆங்காங்கே எழாமலில்லை.

(மறுமையில்) மனிதர்களிடயே தீர்ப்புக் கூறப்படுபவற்றில் முதன்மையானது(கொலை செய்த) இரத்தம் பற்றித்தான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆதார நூல்கள் : புகாரி-6533, முஸ்லிம்-3178, திர்மிதி-1316, நஸயீ-3926, இப்னுமாஜா-2605, அஹ்மத்-3492.

மறுமை நாளில் மனிதர்களிடையே நீதிபதியான அல்லாஹ் விசாரணையைத் துவங்கும் போது தனக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் "தொழுகை" பற்றியே முதலில் கேட்பான்.

மனிதன் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் "கொலை" பற்றியே முதலில் விசாரிப்பான்.

இவ்விசாரணை பற்றி அபூஹூரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் "கொலை செய்யப்பட்டு இவ்வுலகில் இறந்தவன், தன் தலையைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டு, இறைவா! இன்ன மனிதன் என்னை அநியாயமாகக் கொலை செய்து விட்டான். அவனிடம் காரணம் கேள் என்று கூறுவான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இவ்வுலகில் யாராவது அநியாயமாக ஒருவரைக் கொலைச் செய்தால் அது இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களையும் கொன்றதற்கு சமமாகும்" என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று அநியாயமாக உயிர்களைக் கொலை செய்யும் ஒவ்வொருவருக்கும் அளிக்கும் தாக்கீதாகும்.

இவ்வுலக நீதிமன்றத்தில் பொய் சாட்சியங்களை உண்மை சாட்சியங்களாக்கி ஒருவன் தன்னைக் குற்றமற்றவன் என்று உலக அரங்கிற்கு முன் கூறித் தப்பித்துவிடலாம். அல்லது உலக ஊடகங்கள் கண்களில் மண்ணைத் தூவி மறைத்து தாங்கள் புரியும் அநியாயக் கொலைகள் உலகறியா வண்ணம் மறைத்து விடலாம். ஆனால் மறுமையிலோ இதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் பாவங்களைச் செய்த உடல் உறுப்புக்களே முன் வந்து சாட்சி கூறி தவறை ஒப்புக்கொள்ளும்.

பிற உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளாதவர் மீது இறைவன் இரக்கம் கொள்ளமாட்டான் என்ற நபி மொழிக்கேற்ப, மனித உயிர்களைப் பறிக்கும் அளவு கொலையுணர்வு கொண்டவர்களாக எவரும் இருக்கக்கூடாது என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையாகும்.

-அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Tuesday, August 1, 2006

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

ஐதராபாத், ஜன.8-
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை வழங்கப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

3 நாள் மாநாடு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் 4-வது மாநாடு, ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திட்டமும் இந்த மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. பலத்த கைதட்டல்களுக்கு இடையே, 2 பிரமுகர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கி, பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

ஓட்டுரிமை
"வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை 3 வகையாக பிரிக்கலாம்.அவர்களில் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள், தனி ரகம்.அவர்கள் ஒருபோதும் அந்தநாடுகளின் பிரஜையாக முடியாது.எனவே, அவர்கள், நமது நாட்டில் ஓட்டுரிமை வேண்டும் என்று கோருவது, நியாயமானது.இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.விரைவில் அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு இந்தியர்களுக்காக இன்சூரன்சு திட்டம் ஒன்றும் விரைவில் செயல்படுத்தப்படும். வெளிநாட்டு குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும்.தங்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக பணம் அனுப்ப வசதியாக யு.டி.ஐ. வங்கியுடன் இணைந்து புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனி பல்கலைக்கழகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மற்றொரு நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வசதிக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.வெளிநாட்டு இந்தியர்கள் இடையே கல்வி-கலாசார பரிமாற்றத்துக்காக தனி அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்.
வெளிநாட்டு இந்தியர்கள் மூலம் கடந்த 2001-ம் ஆண்டில் 1,300 கோடி டாலர் அளவுக்கு நமது நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு இது, 2 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து உள்ளது."

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்துகொண்டு பேசுகிறார்.


- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

நன்றி: தினத்தந்தி (8-01-2006)

Monday, July 31, 2006

மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே!

ஒருவருக்கொருவர் கூடி வாழும் ஒற்றுமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாக இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக மனித உடலை உதாரணம் காட்டுகிறார்கள்.

தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே அன்பு செலுத்துவதிலும் தங்களிடையே இரக்கம் கொள்வதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஒரு உடல் போல் நீர் காண்பீர். உடலில் ஓர் உறுப்புக்குச் சுகவீனம் ஏற்பட்டுவிட்டால் அவ்வுடலின் மற்ற உறுப்புகள் உறங்காமலும் காய்ச்சல் ஏற்பட்டும் நோய்வாய்ப்படுகின்றன என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: நுஃமான் இப்னுபஷீர் (ரலி). ஆதாரம்: புகாரி-6011, முஸ்லிம்-4685, அஹ்மத்-17632)

உடலின் ஒரு பாகத்தில் பூச்சி ஒன்று கடித்துவிட்டால் ஐம்புலன்களும் யோசனை செய்ய நேரம் எடுத்துக்கொண்டிராமல் நொடிப்பொழுதில் சுதாரித்து எழுகிறது. கடித்த அப்பூச்சியை உடனடியாக அடித்துக் கொல்லவோ, விரட்டி அடிக்கவோ உடலின் மற்ற பாகங்கள் விரைகின்றன. கடிபட்ட இடம் உடலின் ஒரு நுனிதானே என்றெல்லாம் எண்ணி பிற பாகங்கள் சும்மா இருப்பதில்லை. கடித்த பூச்சியை அடித்துக்கொன்று விடுவதோடு, காயம் ஏற்பட்ட இடத்தின் வலியைப் போக்க தடவியும் கொடுக்கிறது. அப்படியும் கடியின் ரணம் குறையவில்லையெனில் அடுத்த கட்டமாக வலியைப் போக்கும் நிவாரண முறைகளுக்குத் தாவுகிறது. வலியின் பாதிப்பு அதிகமாக இருக்குமானால் அதனால் ஏற்படும் வேதனையின் கடுமையினால் உடல் முழுவதும் காய்ச்சல் ஏற்பட்டுவிடுகிறது.

உலகில் ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ அநியாயமான முறையில் பாதிக்கப்பட்டால் அதனை தொலைவில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிற சமூகத்தினர், பாதிக்கப்பட்டவன் எப்படிப் போனால் எனக்கென்ன? அந்த பாதிப்பு தனக்கு ஏற்படாத வரையில் கவலையில்லை என்று மனிதாபிமானமற்ற நிலையில் கண்களை மூடிக் கவனத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்டவனது அல்லது அச்சமூகத்தினரது பாதிப்புக்களைக் குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவதே என்ற நபிகளாரின் பொன்மொழிக்கேற்றபடி சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்

அத்துடன், சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கௌரவத்துடனும் இச்சமூகம் நிலை பெறுவதென்பது அநியாயக்காரனுக்கு முன் "நீ செய்வது அநியாயம்" என்று அச்சமின்றிச் சொல்லும் ஆற்றல் மிக்க வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். பாதிப்படைந்த சகோதரன் ஒருவனுக்கு இந்நிலையை ஏற்படுத்திய அநியாயக்காரனைக் கண்ட பின்னும் ஒரு சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டு மொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.

தனது சகோதரனின் துயரத்தில் பங்கு கொள்ளாமல், சிந்தும் கண்ணீரைத் துடைக்காமல் அலட்சியப்படுத்தி சுயநல வாழ்க்கை வாழும் மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் மற்றும் இறுதி நாளில் இது பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதிலைப் பற்றி சிறிது சிந்திக்கவேண்டும். மறுமை நாள் வந்தபின் இவ்வுலகிற்கு மீண்டு வர இயலுமா என்ன?

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Monday, March 13, 2006

அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..(2)

அல்குர்ஆனிலிருந்து.. (தொகுப்பு : முஹம்மது மஸாஹிம்)

சிலந்திப் பூச்சியின் வீடு..
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம், சிலந்திப்பூச்சியின் உதாரணம் போன்றது. அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது. ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்). (அல்குர்ஆன் - 29:41)

சாம்பலினைக் காற்று..
எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது : அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை - புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது. இதுவே வெகு தூரமான வழிகேடாகும். (அல்குர்ஆன் - 14:18)

ஏடு சுமக்கும் (படித்து அறிய முடியாத) முட்டாள் கழுதை..
எவர்கள் தவ்றாத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது : ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்;. எந்த சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் - 62:5)

சைத்தானின் பல்டி..
(இன்னும் இவர்கள் நிலை) ஷைத்தானுடைய உதாரணத்தைப் போன்றிருக்கிறது. (அவன்) மனிதனை நோக்கி - ''நீ (இறைவனை) நிராகரித்து விடு" என்று கூறுகிறான். அவ்வாறு மனிதன் நிராகரித்ததும் ''நான் உன்னை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்; (ஏனெனில்) நான் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என்றான். (அல்குர்ஆன் - 59:16)

இவ்வுலக வாழ்க்கையானது..
அறிந்து கொள்ளுங்கள் : நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்;. மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்;. (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் - விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது.. ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; - பின்னர், அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே.. எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு. (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை - ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் - 57:20)

அறுவடைக்காக காத்திருந்து..
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது. (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளா(விளை)கின்றன. முடிவில் - பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தைப் பெற்றுக் கவர்ச்சியடைந்த பொழுது, அதன் சொந்தக்காரர்கள் - (கதிரை அறுவடை செய்துகொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்;. அச்சமயம், இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம். (அல்குர்ஆன் - 10:24)

பாக்கியம் பெற்ற சுவர்க்கவாசி..
பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன் இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகைய சுவர்க்கவாசிகள்) - நரகத்தில், எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? (அல்குர்ஆன் - 47:15)

(உதாரணங்கள் தொடரும்)

Wednesday, March 8, 2006

அல்லாஹ் கூறும் உதாரணங்களில் சில..(1)

அல்குர்ஆனிலிருந்து.. (தொகுப்பு : முஹம்மது மஸாஹிம்)

இன்னும், இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம். (அல்குர்ஆன் - 39:27)


ஈயைக் கூட..
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது, எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து (ஒரு ஈ) ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால், அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பlலஹீனர்களே. (அல்குர்ஆன் - 22:73)

அற்ப உதாரணத்தின் மூலம்..
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து, தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்;. ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, ''இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?"" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்;. இன்னும் பலரை இதன்மூலம் நல்வழிப்படுத்துகிறான் - ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை. (அல்குர்ஆன் - 2:26)

பத்தொன்பது மூலம்..
அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை. காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் - காஃபிர்களும்: ''அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?"" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்;. அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை, அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் - 74:30-31)


அல்லாஹ் ஏற்படுத்தும் ஒளி..
அல்லாஹ் வானங்கள், பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்). அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை : விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது. அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகின்றது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று, மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் - 24:35)

(உதாரணங்கள் தொடரும்...)

Saturday, February 18, 2006

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்!







கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.

அல் குர்ஆன்(2:115)



மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் குர்ஆன்(2:45)




வர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.


அல் குர்ஆன்(7:206)


- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

Tuesday, February 14, 2006

12 முஸ்லிம் அமைப்புகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு

முஸ்லிம் அமைப்புகள் ஆலோசனை கூட்டம் மைலாப்பூர் பிரசிடண்ட் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு தவுகித் ஜமாத் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாக்கர், பிரசிடண்ட் குரூப் தலைவர் பிரசிடண்ட் அபு, தமிழ்நாடு ஜமாத் துல் உலமா சபை தலைவர் அப்துல் காதர், ஜமாத் ஐ இஸ்லாமி மாநில செயலாளர் ஜமாலுதீன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் உமர் பாரூக், ஜமாத்தே இஸ்லாமி செயலாளர் ஜமாலுதீன், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முகமது அலி, இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகமது கான், பொதுச்செயலாளர் தர்வேஷ் ரசாதி, மனித நீதிபாசறை குலாம் முகமது, தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் காஜா மஜித், காஜி சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கும் பட்சத்தில் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய தேசிய லீக் தலைவர் அகமது தெரிவித்தார்.

- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

நன்றி : மாலைமலர் (09-02-2006)

Monday, January 30, 2006

தினமலர் விஷமம்! நபிகள் நாயகம் மாமிச உணவு உண்ணவில்லையாம்...


லகில் வாழும் ஜீவராசிகளில் இரண்டு வகை உண்டு. மாமிசம் சாப்பிடுபவை. தாவரங்களை சாப்பிடுபவை. மனிதர்களிலும் அவ்வாறே இருவகையினர் உண்டு. இறைச்சி சாப்பிடுபவர்களை அசைவம் என்றும், காய்கறிகள் சாப்பிடுபவர் களை சைவம் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு.

இறைச்சி உணவுகளை சாப்பிட்டால் சக்தி வாய்ந்தவர்களாக, உடல் உரம் கொண்டவர்களாக விளங்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டால் அதிகமாக உடல் உபாதைகள் வர வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இன்று உலகில் ஏராளமானோர் மாமிச உணவு சாப்பிடுபவர்களாகவும், காய்கறி உணவு சாப்பிடுபவர்களில் கூட ஏராளமானோர் இறைச்சி உணவை நோக்கி திரும்பியிருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி உணவு சாப்பிடுபவர்கள் இழிந்தவர்களாகவும், காய்கறி உணவுகள் சாப்பிடுபவர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதும் போக்கு மனுநீதி காலத்தி­ருந்தே நிலவி வருகிறது. உலகில் வேறெங்கும் இத்தகைய நிலை நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உணவு விஷயத்தில் அகிம்சை - ஹிம்சை பிரச்சினைகளை பெரிதாக்கி மக்களை பாகுபடுத்தும் போக்கு இன்னும் மாறக்காணோம்.

சில காய்கறி உணவு பிரியர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்து உணவுப் பிரச்சினைகளில் மக்களிடையே பிணக்கை ஏற்படுத்தி வருகின்றன. தினமலரின் வாரமலர் (ஜனவரி 8-2006) இதழில் அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது - பா.கே.ப. என்ற பகுதியில் சில முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கோவை பாரதியார் பல்கலைக் கழக உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்ததாக அந்துமணி கூறுகிறார்.

அதில் உள்ள கருத்துக்களை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அசைவ உணவை ஏசு நாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சைவ உணவையே உண்டு வந்தார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் என்றும் புதுமைக்(?) கருத்துக்களை புகுத்தியிருக்கிறார்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவில் கூறப்பட்ட இறைவசனங்களை திரித்துக் கூறி தனது வாதத்திற்கு வலுசேர்க்க முயல்கிறார்.

திருக்குர்ஆனின் அற்புதமான தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகள் தாராளமாக எங்கும் கிடைக்கும் நிலையில் பேராசிரியர் வேதகிரி கணேசன் நுனிப்புல் மேய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், தனது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக திருக்குர்ஆனையும் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றையும் தான் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை புலப்படுத்திவிட்டார்.

பெருமானார் அசைவ உணவுகளையே அதிகம் உண்டு வந்தார்கள் என்பதற்கு அநேக சான்றுகள் உண்டு. குர்பானி, அகீகா என்று கால்நடைகளை அறுத்து ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் இறைச்சிகளை பகிர்ந்து வழங்குவதை மதக்கிரியையாகவே செய்ய கற்றுக் கொடுத்த அண்ணல் நபிகளைப் பற்றி முரண்பட்ட கருத்தைக் கூறுவதைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற வேண்டுமென்றால் முத­ல் தனது தரப்பினை வலுவாக்கும் காரணிகளைக் கூற வேண்டும். எதிர் கருத்துக்களை எதிர்த்து தனது தரப்பினை ஆதாரத்துடன் கூற வேண்டும் அதை விடுத்து பொய்களையும், யூகங்களையும், தங்கள் வியூகங்களாக அமைக்கக் கூடாது என்பதை யாராவது இந்த புண்ணியவான்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.

நன்றி: மக்கள் உரிமை

இஸ்லாமிய அடிப்படை நெறிகளை நன்கு அறிந்தும், அறியாததுபோல் தனது விஷமத்தை பரப்பி வரும் தினமலரின் உண்மையான "நிறம்" அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற புண்படுத்தல்களை சர்வதேச அளவில் முஸ்லிம்களால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் விடாப்பிடியாக திருந்த மறுக்கும் தினமலரை தமிழுலகமக்கள் ஒன்று சேர்ந்து புறக்கணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

Sunday, January 1, 2006

டாக்டருக்கே டாட்டா காட்டிய நியூமராலஜி ஜோசியர்

பழைய செய்திப்பத்திரிக்கையில் கண்ணில் பட்ட விஷயத்தைப்பற்றி அபூ உமர் எழுதியிருந்தார். நல்ல (அல்லது கெட்ட) பல செய்திகள் இப்படி அவ்வப்போது கண்ணில் படுவதுண்டு. அது போன்ற ஒன்று இங்கே!


Image hosted by TinyPic.com


கேடுகெட்ட இம்மாதிரி ஏமாற்றுபேர்வழிகளிடம் பாமரர்கள் மட்டுமில்லாமல் படித்துப்பட்டம் பெற்றவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள் என்றால், அடிப்படை நம்பிக்கைகளில் இருக்கும் குறைபாடுதான் காரணம் என்று தோன்றுகிறது.

- அபூ ஸாலிஹா