Thursday, July 26, 2007

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 2)

தொடங்கும் முன் முதல் பகுதியை ஒருமுறை வாசித்துவிடுங்கள்.

இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான அச்சம் இன்று உலகம் முழுக்க பரந்து விரிந்து காணப்படுகின்றது. இதற்குரிய நீண்ட பட்டியலில், சமீபத்திய உதாரணமாக கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் ஹனீஃப் அவர்களைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசின் அநீதியான நடவடிக்கையைக் கூறலாம்.

மருத்துவர் ஹனீஃப் அவர்களின் கைதுக்கான பின்னணி நிச்சயம் இஸ்லாமோஃபோபியா தவிர வேறில்லை. இந்தியாவிற்குப் பயணிக்கக் காத்திருக்கும் பொழுது அவரைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசு, அதற்குரிய காரணமாக கிளாஸ்கோ குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு மருத்துவர் ஹனீஃப் உதவியதாக முதலில் கூறியிருந்தது.

ஹனீஃபின் மீதான குற்றச்சாட்டுக்கான விளக்கம் கொடுக்கும் பொழுது, "இங்கிலாந்து அரசு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மருத்துவர் கைது செய்யப்பட்டார் எனவும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிற்கு நட்புநாடு என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது " என்றும் கடந்த 2007 ஜூலை 20ந்தேதியன்று ஆஸ்திரேலிய அரசு கூறியிருந்தது. தன் மீதான அரசின் சந்தேகங்கள் அனைத்திற்கும் உரிய விளக்கங்களை மருத்துவர் ஹனீஃப் விசாரணையின் பொழுது தெளிவாக கூறியிருந்தார். ஆனால் அவரின் பெயர் ஒரு முஸ்லிமை அடையாளப்படுத்திய காரணத்தினால், இங்கிலாந்து அரசு சொல்வது தான் ஆஸ்திரேலிய அரசுக்கு உண்மையாக தெரிந்திருக்கின்றது. அதுவே டாக்டர் ஹனீஃபை ஒவ்வொரு முறையில் வழக்கில் இருந்து விடுவித்து வீட்டிற்கு சென்று சேரும் முன் அள்ளிக்கொண்டு வந்து புதிய வழக்கில் விசாரணையைத் துவங்க வகையும் செய்தது.

இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் சிலரின் வன்செயல்களுக்கு இஸ்லாத்தின் மீதே புழுதிவாரித் தூற்றுவதில் தேர்ச்சி பெற்ற இஸ்லாத்தின் மீது வெறுப்பு கற்பிக்கும் துவேஷகுழுக்கள், ஒரு நாட்டின் அரசே ஒரு முஸ்லிம் மீது குற்றம் சாட்டும்போது வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கும்? வெறும் வாய்க்கு அவலாக, இச்சம்பவத்தை வைத்து இந்த ஆதிக்க சக்திகள் குதூகலத்துடன் பெருமளவு இலாபம் சம்பாதித்தன. குற்றம் சுமத்தப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருந்தாலே போதும்; அவனை அந்நிமிடமே தீவிரவாதியாக்கி அழகு பார்க்கும் அடிப்படையில், இணையத்தில் இலக்கியத்தைக் கூறு போடும் சங் பரிவார எழுத்தாளர்களில் ஒருவரான மலர்மன்னன், மருத்துவர் ஹனீஃபை தீவிரவாதியாகவே ஆக்கினார். ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் அமைந்த மலர்மன்னனின் வெறுப்பு தோய்ந்த எழுத்துக்களைப் பிரசுரித்து, 'திண்ணை'யும் இந்திய அரசுக்கு எதிராக தன் முஸ்லிம் விரோத அடிமன வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்தது. மேற்கில் விதைக்கப்படும் இஸ்லாமோஃபோபியா கிழக்கின் மூலை வரை எவ்வளவு அமோகமாக அறுவடை செய்யப்படுகின்றது என்பதற்கு இது மற்றுமோர் தெளிவாகும் (தமிழக ஃபோபியாக்களைக் குறித்து இத்தொடரின் பிற்பகுதியில் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணலாம்.)

ஒரு விதத்தில் ஆஸ்திரேலியாவின் விருந்தினர் என்ற அந்தஸ்தில் உள்ள மருத்துவர் ஹனீஃபின் மீது ஆஸ்திரேலிய அரசு சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என ஆஸ்திரேலிய காவல்துறையே தற்பொழுது ஒப்புக்கொண்டு உள்ளது. இங்கிலாந்தோ, ஆஸ்திரேலியாவோ மருத்துவர் ஹனீஃபின் விவகாரத்தில் உலகம் முழுவதிலிருந்தும் இத்தனை நெருக்குதல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை ஏனைய பிற குற்றச்சாட்டுக்களைப் போன்று மருத்துவர் ஹனீஃபின் விவகாரத்திலும் இவர்கள் கூறுவதை வைத்து "உண்மையாகத் தான் இருக்கும்" என, இதனை பெரிய விஷயமாக எடுக்காமல் உலகம் விட்டிருந்தால் முஸ்லிம் என்ற காரணத்திற்காக மருத்துவர் ஹனீஃபும் அதிபயங்கர தீவிரவாதியாக இன்று ஆகி இருப்பார். தீர விசாரிக்க வேண்டும் என்று உரிய தருணத்தில் உலகமெங்கும் எழுப்பப்பட்ட நியாயவான்களின் எதிர்ப்புக் குரல், இன்று ஒரு நிரபராதியை அடையாளம் காட்ட உதவியிருக்கின்றது. கடந்த இருபது நாட்களாக உலகின் அத்தனை ஊடகங்களிலும் பாஸ்போர்ட் விபரங்கள் முதல், அவரின் இந்திய வீட்டிற்கு முன் முகாமிட்டு காட்சிகளைப் பதிவு செய்யும் மீடியாக்களின் மூலம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்திற்கோ அல்லது அவருக்காக குரல் கொடுத்த இந்திய அரசு முதல் மற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கோ ஹனீஃபின் விடுதலை மகத்தான வெற்றியாக தோன்றலாம். தேவையெனில் ஆஸ்திரேலிய அரசின் நடுநிலை(!) நிலைபாட்டிற்கு நன்றி நவின்றதோடு இவ்விஷயத்தை இத்தோடு விட்டும் விடலாம்.

ஆனால், இதன் மூலம் அதிர்ந்து போயுள்ள முஸ்லிம் உலகம் இவ்விஷயத்தை அவ்வளவு இலகுவாக காணத் தயாராக இல்லை. ஏனெனில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, குற்றம் சாட்டும்படியாக ஒரு துரும்பளவு தெளிவு கூட இல்லாத நிலையில், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள ஒரு மருத்துவரையே முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக சந்தேகக்கண் கொண்டு இறுதிவரை விடாப்பிடியாக அவரை தீவிரவாதியாக்கி விடவேண்டும் என ஒரு அரசே முனைப்புடன் செயல்பட்டிருக்கின்றது எனில், அதற்கான காரணத்தையும், இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத பயத்தின் பின்னணியையும் குறித்து ஆராய வேண்டியது மிக அவசியமாகும்.

இன்று உலகில் எந்த மூலையில் ஏதேனுமோர் அசம்பாவிதம் நடந்தாலும் அது உடனடியாக திட்டமிட்டு இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தப் படுகிறது. உலக மக்களை ஒருங்கிணைக்கும் "நம்பகத்தன்மை" வாய்ந்த ஊடகங்கள் இதனைச் செவ்வனே நிறைவேற்றுகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசின் கீழ் உள்ள ஊடகங்கள் உலகின் எந்த மூலையில் ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், அதனை உடனடியாக பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சொற்களுடன் இஸ்லாத்தை சேர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகின்றன.

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அதிபயங்கர ஆயுதமாக கருதப்படும் ஊடகங்கள், மேற்கத்தியர்களின் கைகளில் தஞ்சமடைந்ததன் விளைவு என்று இலகுவாக எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், கடந்த நூற்றாண்டின் இறுதிகாலம் வரை உலகில் தீவிரவாதம்/பயங்கரவாதம் என்ற சொற்களோடு இஸ்லாம் பின்னப்பட்டுப் பார்க்கப்பட்டதில்லை. உலகில் இஸ்லாமியர்களுக்கு மிக கடுமையான நெருக்கடி காலமாக கருதப்பட்ட, முஸ்லிம்களை கருவறுப்பதற்காகவே நடத்தப்பட்ட சிலுவை யுத்த காலமான மத்திய காலகட்டத்தில் கூட தீவிரவாதி/பயங்கரவாதிகளாக சிலுவை யுத்த படைகளே கருதப்பட்டன. மிகக் குறுகிய கால அளவில் இஸ்லாத்துடன் இன்று உலகில் பிரபலமாக்கப்பட்டுள்ள இவ்வார்த்தையின் பின்னணி நிச்சயம் இஸ்லாத்தின் மீதான அதீத அச்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது.

காலனியாதிக்கங்களுக்கு எதிராக உருவான புரட்சிகளின் மறு வெளிப்பாடான இரண்டு உலகப் போர்களுக்கு முன்னும் பின்னும் இவர்கள் பொய்யாக உருவகப்படுத்தும் இந்த இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் தோன்றியதில்லை. இரு உலகப்போர்களுக்குப் பின் பனிப்போர் மூலம் உலகில் யார் பெரியவன் என்ற போட்டியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஈடுபட்டிருந்த காலத்திலும் இவ்வார்த்தை பிரபலம் ஆகவில்லை. இன்னும் கூறவேண்டுமெனில், இன்று ஜார்ஜ் புஷ்ஷிற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி தீவிரவாதம்/பயங்கரவாதங்களை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த காரணமாகக் காட்டப்படும் உசாமா பின் லேடன், அன்றைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவிற்கு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு வீரப்போராளியாகவும், கதாநாயகனாகவும் திகழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

"சுமார் 1428 வருடங்களாக தலையெடுக்காத இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் கடந்த 20 ஆண்டுகளில் திடீரென எங்கிருந்து தலையெடுத்தது? சாதாரணமாக சிந்திக்கும் மக்களுக்கு கூட இதில் அடங்கியுள்ள சூட்சுமம் எளிதில் விளங்கும்..."

பனிப்போர் மூலம் ஒருங்கிணைந்த ரஷ்யாவை என்றைக்கு அமெரிக்கா வீழ்த்தியதோ அன்றிலிருந்து தான் இவ்வார்த்தைகள் உலகில் பிரபலமடைய ஆரம்பித்தன. அதாவது உலகின் சர்வாதிகார சக்தியாக தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் அமெரிக்காவை எதிர்க்க சரிக்கு சமமான வேறு நாடோ, தனிநபரோ இல்லை என்ற நிலை வந்த பின்னரே உலகில் இந்த உருவகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் என்ற சொற்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. சுமார் 1428 வருடங்களாக தலையெடுக்காத இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் கடந்த 20 ஆண்டுகளில் திடீரென எங்கிருந்து தலையெடுத்தது? சாதாரணமாக சிந்திக்கும் மக்களுக்கு கூட இதில் அடங்கியுள்ள சூட்சுமம் எளிதில் விளங்கும்.

இங்கே இஸ்லாமிய பாரம்பரியத்தையும், கொள்கை சார்ந்த வரலாற்றையும் சற்று சிறிது திரும்பிப் பார்த்தல் அவசியமானதாகும். முஹம்மது(ஸல்) அவர்களால் புனர்நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம், சுமார் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த அறியாமைக் கால கட்டத்திலேயே மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியையும், எவருக்கும் அஞ்சாத துணிவையும், சுயமரியாதையையும் கொடுத்தது. ஒருவர் இஸ்லாத்தை மனதார ஏற்றுக் கொண்ட கணம் முதல் இவ்வுலகில் எவருக்கும் தலை குனியாத, எதற்கும் அஞ்சாத தன்னம்பிக்கையைப் பெறுகின்றார். அதன் மூலம் அவரை எத்தகைய ஓர் கொடுமையான அடக்குமுறையாளனும் எளிதில் அடக்கி அடிபணிய வைத்து விடமுடியாது என்பதே இதன் பொருள்.

ஒருவர் உண்மையிலேயே இஸ்லாத்தை மனமுவந்து பின்பற்றுகின்றார் எனில், அவர் கண்முன் எவ்வித அநியாயத்தையும் நடக்க விடமாட்டார். அநியாயம், அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார். இதனால் தான் முஹம்மது(ஸல்) அவர்களால் ஒரு மிகச்சிறிய சாதாரண குழுவாகத் தொடங்கிய இஸ்லாமிய மார்க்கம், மிகப்பெரிய பரந்து விரிந்த அரபுப் பகுதி, பாரசீகம் முதல், ரோம் வரை பரவியது. அது மட்டுமின்றி அக்காலகட்டத்திலேயே இஸ்லாம் சென்று சேர்ந்த இடங்களில் உள்ள மக்களையெல்லாம் வெகு எளிதில் கவர்ந்து, அரசாங்கங்கள் மாறும் நிலைகள் உருவாகின.

ஒரு கட்டத்தில் ஜெரூசலேமை வெற்றி கொண்ட இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களை, அன்றைய பைத்துல் முகத்தஸின் நிர்வாகிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் இன்முகத்துடன் வரவேற்று அதன் சாவியை கேட்காமலே அவரிடம் வழங்கிய சம்பவம் வரை நடந்தது. இதன் தொடர்ச்சியாக உலகில் எப்பொழுதெல்லாம் தமது பகுதிகளில் அடக்குமுறையாளர்கள் கோலோச்சினார்களோ, அப்பொழுதெல்லாம் அதுவரை அமைதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களே அநியாயத்திற்கெதிராகப் பொங்கியெழுந்து அக்கிரமக்காரர்களை விரட்டி அடித்துள்ளனர் என்பது வரலாறு.

இதில் குறிப்பிடத்தக்கவராக ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு சிறு சிற்றரசராக இருந்த அவர், பைத்துல் முகத்தஸின் சுற்றுப்புறங்களை கபளீகரம் செய்து புனித ஹரத்தை கையப்படுத்தி ஐரோப்பாவின் ஆசியோடு கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிலுவைப் போர்வீரர்களை விரட்டியடித்து பைத்துல் முகத்தஸை மீட்ட நிகழ்வு வரலாறு மறக்க முடியாததாகும்.

இத்தகைய வீரமும், எந்த அடக்குமுறையாளனுக்கும் தலை வணங்காமையும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவன் அதனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தருணமே வழங்கி விடுகின்றது. இதனாலேயே ஒரு இடத்தில் ஒருமுறை இஸ்லாம் விதைக்கப்பட்டு விடுமானால், பின்னர் அது எவ்வளவு தான் வேரோடு பிடுங்கப்பட்டாலும் மீண்டும் புத்துணர்வுடன் எழுந்து விடுகின்றது. இதற்கு இக்காலகட்டத்திய உதாரணமாக ஸ்பெயினின் இஸ்லாமிய வரலாற்றை குறிப்பிடலாம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Saturday, July 21, 2007

பாலைவனச் சோலை!

இஸ்மாயிலும் இப்ராஹிமும் நெருங்கிய நண்பர்கள்.

ஒருநாள் பாலைவனப்பகுதி ஒன்றை சுற்றிப் பார்க்க வந்த அவர்கள், திரும்பிச் செல்ல வழி தெரியாமல் தவித்தனர். சூரிய வெப்பத்தின் தாக்கம் ஒரு பக்கமும், அனலை வாரி இறைக்கும் சுடுமணல் மறுபக்கமும் அவர்கள் கொண்டு வந்திருந்த நீரை விரைவில் காலியாக்கி விட்டிருந்தது.

வழி தெரியாத விரக்தியுடன் பசியும், தாகக்கொடுமையும் ஒன்று சேர்ந்துவிட, வழி தவறியதன் காரணத்தை ஆராய்ந்த அவர்களின் பேச்சு, ஒரு சமயத்தில் கடும் விவாதமாக மாறி விட்டது. பேச்சின் இடையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற இஸ்மாயில் தன்னிலை மறந்து இப்ராஹிமின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். மனம் புண்பட்ட இப்ராஹிம், மேற்கொண்டு எதுவும் பேசாமல் மவுனமாக சுடுமணலில் அமர்ந்து இவ்வாறு எழுதினான்:

"என்னுயிர் சகோதரன், என் கன்னத்தில் அறைந்த நாள் - இன்று"

அதன் பின்னர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கடுமையான நீர் தாகத்துடனே வெகு நேரம் நடந்த அவர்கள், இருவரும் தொலைவில் ஒரு பாலைவனச் சோலை தெரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மகிழ்ச்சியுடன் அங்குள்ள குளத்தின் நீரை அள்ளிப்பருகிய இருவரில் இப்ராஹிம், பாலைவன சூட்டில் ஆர்வம் தாளாமல் குளிப்பதற்காக குளத்தில் குதித்தான். சிறிது நேரம் சென்றது.

குளத்தின் கரையோரம் மரங்களின் நிழல் தந்த சுகத்தில் லேசாகக் கண்ணயர்ந்திருந்த இஸ்மாயில், திடீரென கேட்ட இப்ராஹிமின் கூக்குரல் கேட்டு அதிர்ச்சியடைந்து குளத்தின் பக்கம் ஓடினான். அங்கே மரத்தின் வேர்களுக்குள் சிக்கி நீந்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த இப்ராஹிமைக் கண்டு உடனடியாக தாமதிக்காமல் தானும் குளத்தில் குதித்தான். கடும் சிரமங்களுக்குப் பின்னர் இப்ராஹிமை கரையோரமாக இழுத்து வந்தான் இஸ்மாயில்.

அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட இப்ராஹிம் சிறிது நேரம் கழித்து உணர்வு பெற்றான். நன்றியுடன் தன் நண்பனை பார்த்துக்கொண்டே சுற்றும் முற்றும் நோக்கி சற்று தள்ளி இருந்த பெரும் பாறை ஒன்றில் இவ்வாறு செதுக்க ஆரம்பித்தான்:

"என்னுயிர் சகோதரன், உண்மையிலேயே என்னுயிரைக் காத்த நாள் - இன்று"

இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்மாயில், "முன்பு நான் உன் கன்னத்தில் அறைந்தபோது பாலைவனத்தின் மணலில் எழுதிய நீ, இப்போது தேடிப்பிடித்து கல்லில் இதனை செதுக்குகிறாயே! ஏன்?" என்று சந்தேகத்துடன் நண்பனிடம் கேட்டான்.

லேசாக புன்னகைத்த இப்ராஹிம், "நம் சகோதரன் ஒருவன் உடலாலோ, உள்ளத்தினாலோ நமக்குத் தீங்கிழைத்து விட்டால் அத்தகைய செயல்களை, எதையும் நிமிடங்களுக்குள் மூடி மறைத்து விடும் பாலைவன மண்ணைப் போன்று மிக விரைவில் மறந்து மன்னித்து விடுமாறும், அதே சமயம் அச்சகோதரன் நன்மையான காரியங்களைச் செய்துவிட்டால் அதனைக் கல்லில் செதுக்கி வைக்கும் எழுத்துக்கள் நீண்டகாலம் நிலைத்திருப்பது போன்று என்றென்றும் மறவாமல் நிலையாக மனதில் நன்றியுடன் பதிய வைத்து நன்றி பாராட்டுமாறும் இஸ்லாம் நமக்குப் போதித்துள்ளது. இதனை ஏற்கனவே நீ அறிந்திருந்தாலும் அதனை உனக்கு வேறு வகையில் மனம் புண்படா வண்ணம் மென்மையாக உணர்த்த எண்ணியே இவ்வாறு செய்தேன்" என்று கூறினான் இப்ராஹிம்.

இதைக் கேட்டு வெட்கம் அடைந்து தலை குனிந்திருந்த இஸ்மாயிலின் கண்களிலிருந்து வடிந்த நீர் துளிகள், தன் உயிர் நண்பனை காயப்படுத்தியதற்கு அவன் மனதார மன்னிப்பு கோரியதையும், சகோதரர்/நண்பர்களுடன் பழக வேண்டிய முறை பற்றி தெளிவான முழு அறிவை அவன் பெற்றுக் கொண்டதையும் ஒருங்கே உணர்த்தின.

7:199 எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக! மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.

7:200 ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

(மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலச் சிறுகதை)

தமிழாக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

நன்றி: மறுபதிப்பு (முத்துப்பேட்எக்ஸ்பிரஸ்)

Monday, July 9, 2007

பொய்க்கும் டார்வின் கொள்கை: ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!


உலகின் படைப்பாளனை மறுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட, "குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்" என்ற டார்வினின் சித்தாந்தத்தை சமீபத்தில் வெளியாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள "படைத்தல் பற்றிய வரைவு (Atlas of Creation)" என்ற ஹாரூன் யஹ்யா அவர்களின் புத்தகம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுவரை ஐரோப்பிய நாடுகளின் பள்ளிப் பாடப்புத்தகங்களில் மனிதனின் தோற்றம் பற்றி டார்வினின் அனுமானத்தின் அடிப்படையிலான நிரூபிக்கப்படாத குரங்குக் கொள்கையான "பரிணாமக் கோட்பாடே" இடம்பிடித்து வருகிறது. இதற்கு நேரெதிராக, மனிதன் சுதந்திரமாக சிந்திக்கும் வகையில் வளர பள்ளிப்பாடங்களில் "படைத்தல் பற்றிய வரைவையும்" இடம் பெற செய்ய வேண்டும் என இப்புத்தகத்தின் ஆசிரியர் ஹாரூன் யஹ்யா கோரிக்கை எழுப்பியுள்ளதே ஐரோப்பிய பாராளுமன்ற சர்ச்சைக்கு முக்கியக் காரணமாகும்.

அனுமானத்தின் அடிப்படையிலான பரிணாமவாதத்தை பல்வேறு ஆதாரங்களுடன் தகர்க்கும் அத்னான் அக்தர் எனப்படும் ஹாரூன் யஹ்யாவின் இப்புத்தகம், ஐரோப்பியக் கண்டத்தின் டார்வின் கோட்பாடுகள் மீதான பரிணாமவாத நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சேர திகில் உண்டாகியிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பரிணாமக்கோட்பாட்டில் நம்பிக்கையற்றவர்களிடம் இருந்து இதுவரை வெளியான அனைத்து புத்தகங்களையும் விட இந்த "படைத்தல் பற்றிய வரைவு" (Atlas of Creation) என்ற புத்தகம் அதிக எதிர்ப்பை எழுப்பியுள்ளதற்குக் காரணம் உள்ளது. இதுவரை கட்டிக் காத்து வந்த பரிணாமக் கோட்பாட்டிற்கும் அதன் மூலம் ஊடுறுவியிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சிந்தனை மற்றும் கலாச்சாரங்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று அவர்கள் கருதுகின்ற காரணத்தினாலேயே இப்புத்தகத்தை முழு உலகிலும் தடை செய்யும் அளவிற்கு மனம் வெதும்பியுள்ளனர் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

டார்வின் தத்துவ ஆதரவாளர்களிடம் இருந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் தற்போது ஒரு சேர எழுந்திருக்கும் கூக்குரல்களே இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் நுட்பமான தகவல்களையும் மறைமுகமாக அறிவிக்கின்றன. "ஒன்றிலிருந்து மற்றொன்று வளர்சிதை மாற்றங்கள் மூலம் தோன்றின" என்ற பரிணாம வளர்ச்சி எனும் டார்வின் சிந்தனையை அடியோடு கருவறுக்கும்படியாக, அதிரவைக்கும் பல்வேறு அறிவியல் ஆதாரங்களோடு இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

இப்புத்தகம் வெளிப்படுத்தியிருக்கும் அறிவியல் ஆதாரங்கள் மூலம், ஐரோப்பியர்கள் கடந்த 150 வருடங்களாக தாங்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டு வந்துள்ளோம் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளதாக பிரபல பிரெஞ்ச் இணையதளமான Science Actualities தெரிவிக்கிறது. இத்தளம் "படைத்தல் பற்றிய வரைவு" புத்தகம் கூறும் படைத்தல் கொள்கையை முன்வைத்து எடுத்திருக்கும் ஒரு கருத்துக்கணிப்பில் 92% ஐரோப்பியர்கள் இறைவனின் படைப்பை நம்புவதாகவும், 5% ஐரோப்பியர்கள் பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இப்புள்ளி விபரங்கள் பொய்யான எவ்வித ஆதாரமும் இல்லாத டார்வின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் பரிணாமவாதிகளுக்கு பலத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரிணாம வளர்ச்சி என்பது 19 ம் நூற்றாண்டில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சியின் போது நிலவிய, போதிய அறிவின்மை காரணமாக பரப்பப்பட்ட கட்டுக்கதை என்பதை ஐரோப்பியர்கள் தற்போது படிப்படியாய் உணரத் துவங்கியுள்ளனர். ஹாரூன் யஹ்யாவின் இப்புத்தகத்தின் மூலம் மிக உறுதியான அறிவியல் ஆதாரங்களுடன் இக்கட்டுக்கதைகளின் முகம் சிதைக்கப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்தும் வருகின்றனர். அதே சமயம், உலகலாவிய அளவில் பரவும் இத்தகைய கருத்தாய்வுகளும் அறிவியல் வெளிச்சத்தில் சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வுகளும் குரங்குக் கொள்கையைத் தூக்கிப்பிடிக்கும் டார்வின் விசிறிகளுக்கு அமைதியின்மையைத் தோற்றுவித்திருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.

ஐரோப்பிய பாராளுமன்ற பேரவை தயாரித்து அளித்திருக்கும் கலாச்சாரம், அறிவியல் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான திட்ட அறிக்கையில் டார்வின் ஆதரவாளர்களின் இந்த அமைதியின்மை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை, படைத்தலின் மீதான ஐரோப்பிய மக்களின் நம்பிக்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பிரெஞ்ச் பொதுவுடைமைவாதியான கை லெங்கேன் எழுதி வெளியிட்டுள்ள ஆவணமான "கல்வித்துறையில் பரம்பொருளின் ஆபத்துக்கள் (The Dangers of Creationism in Education)" அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. அதில் மிகவும் பிரத்தியேகமாக 12 க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் ஹாரூன் யஹ்யாவின் Atlas of Creation பற்றியும் அது ஐரோப்பிய சமூகத்தில் ஏற்படுத்தவிருக்கும் பெரும் விளைவுகள் பற்றியும் பேசுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கை, "படைத்தல் பற்றி துருக்கிய எழுத்தாளர் ஹாரூன் யஹ்யாவின் 750 பக்கங்கள் அடங்கிய "அட்லஸ் ஆப் கிரியேஷன்" பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஸ்பெய்ன் நாடுகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் இலவசமாக விநியோகமாகியிருக்கின்றது என்றும் அதன் மூலம் அங்கு பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதையும்" வாஷிங்டன் டைம்ஸ் தினசரியில் கடந்த ஜூன் 24, 2007 இல் அழுத்தமாகக் கூறியுள்ளது.

பாரிஸ் பல்கலைக்கழகத்தின் உயிரின ஆய்வாளர் ஹெர்வெ லீ கையடர், "இதற்கு முன் பல்வேறு சமயங்களில் பலரால் எடுத்து வைக்கப்பட்ட பரிணாம வளர்ச்சியின் எதிர்மறை வாதங்களை விடவும் ஹாரூன் யஹ்யாவின் இந்த அறிமுகம் மிக, மிக ஆபத்தானது" என்றும் " இதனை இஸ்லாமிய சிந்தனையாளர்களிடமிருந்து விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ள இயலும்" என்றும் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

"Atlas of Creation எடுத்து வைக்கும் படைத்தல் சம்பந்தமான அறிவியல் ஆதாரத்திற்கு எதிராக களமிறங்க 47 ஐரோப்பிய மாநில உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்" என்பதே இந்த அறிக்கை கூறும் இறுதித் தகவலாகும். மேலும், "பரிணாம வளர்ச்சி கொள்கை அடியோடு சாயத்துவங்கி விட்டதால் ஐரோப்பா கண்டம் முழுவதுமாகவே ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளதாகவும்" அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

ஐரோப்பிய கல்வித்திட்டத்திற்கான தோழமை நாடுகளின் உறுப்பினர்களின் முன்னிலையில், கடந்த ஜூன் 26, 2007 இல் ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் நடத்தப்பட்டுள்ள வாக்கெடுப்புக்களின் அடிப்படையிலேயே, ஹாரூன் யஹ்யாவின் இந்த படைத்தல் பற்றிய வரைவு ஐரோப்பிய பள்ளிப் பாடத்திட்டங்களில் இணைக்கப்படுவதற்காக பரிந்துரைக்கப்படும். இந்தத் தீர்மானம் தோழமை நாடுகளை கட்டுப்படுத்தாது என்றாலும், ஐரோப்பாவின் அடிப்படைக்குறிக்கோள், மனித உரிமைகள், கருத்துச்சுதந்திரம் மற்றும் மக்களாட்சி ஆகிய அம்சங்களுக்கு இணங்கவே செயல்படும் என்ற கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தனது படைத்தல் பற்றிய வரைவு புத்தகத்தைக் குறித்து கூறும் பொழுது, "மனிதனின் தோற்றம் சம்பந்தமாக பள்ளிப்பாட ஆக்கங்களில் வைக்கப்பட்டிருக்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனையுடன், அதனை முற்றிலுமாக எதிர்க்கும் படைத்தல் பற்றிய அறிவையும் கலந்தே மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்" என்ற தனது நிலையை அத்னான் அக்தர் (ஹாரூன் யஹ்யா) அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். "மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சிந்தனையை விரிவுபடுத்தி அதன் மூலம் தாங்கள் விரும்பியதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே தன் ஆவல்" என்கிறார். ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடிப்படையான "கருத்துச் சுதந்திரம் மற்றும் மக்களாட்சியின் அடிப்படையில் இதுவே சிறந்த அணுகுமுறையாக இருக்க இயலும்" என்றும் ஆணித்தரமாகப் பேசுகிறார்.

"பரிணாம வளர்ச்சியை ஆதரித்துப் பேசுவோர், தங்களது வாதங்களைத் தவிர மற்ற எதுவும் மேலோங்கி விடக்கூடாது எனும் அடக்குமுறையைக் கொண்டிருப்பதை" சுட்டிக்காட்டிய ஹாரூன் யஹ்யா, "இது ஐரோப்பிய பாராளுமன்ற பேரவையின் அடிப்படை விதிகளுக்கு முரணானது" என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் இக்காலகட்டத்திலும் கூட, மனிதனின் தோற்றத்தைக் குறித்து கூறும் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் வகுத்தளித்த குரங்குக் கொள்கையான டார்வினின் பரிணாம வாதத்தை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுச்செல்லும் நிலையில் மக்கள் இல்லை என்பதை ஹாரூன் யஹ்யாவின் அறிவியல் ஆதாரங்களுடனான "படைத்தல் பற்றிய வரைவு" தெளிவிக்கின்றது. உலகில் மக்களிடையே இது ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில்
எவ்வித சந்தேகமும் இல்லை.

அட்லஸ் ஆஃப் கிரியேஷன்-II புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் (Download) படிக்க இங்கே சொடுக்கவும். PDF - MS Word


ஆங்கிலத் தகவல்: கலீல் இஸ்மாயில், இலண்டன்

மொழியாக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)