கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன் நகர்கிறது தமிழக சிறுபான்மை முஸ்லிம்களின் அரசியல். புதிதாக அரசியல் பட்டிருக்கும் முஸ்லிம் வாக்கு வங்கியின் விழிப்புணர்வாக இதை நாம் புரிந்து கொள்ளலாம். வர இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் அமைப்புகள் தங்கள் கூட்டணி சீட்டு பேரத்திற்கு இந்த கோரிக்கையை துருப்புச்சீட்டாக பயன்படுத்த போகின்றன.
"கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்கும்" என்று தமிழக முதலமைச்சர் கூறிய உடனேயே அதற்கு எதிரான கருத்துக்களை பத்திரிகைகள் கவனமாய் முக்கியத்துவப்படுத்துகின்றன. ராமகோபாலன், ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் வெளியிடுகின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான கருத்துக்களை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றது இடஒதுக்கீட்டின் வழியாக மேலெழுந்து வந்த சமூகத்தின் பத்திரிகையான 'தினத்தந்தி'. 'கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டோர் என்று ஒரு பட்டியலை வழங்க சம்மதிப்பார்களா? (இரா.சோமசுந்தரம் தினமணி அக்.23. 2005) என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு பெறுவதற்கு எதிரான தனது குரலை பதிவு செய்கிறது தினமணியின் அரசியல் அரங்கம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என்ற வட்டங்களைத் தாண்டி அதிகார அமைப்பில் சாதி, மத ரீதியாக ஒடுக்கப்பட்டோர்கள் பங்கேற்பதற்கான சமூக நீதி நடவடிக்கையே இடஒதுக்கீடு.
பொதுவாக இந்துத்துவ மயமான அரசியல், அறிவுத்தளங்களில் எதிர்ப்புகள் இருந்தாலும் இடஒதுக்கீடு குறித்து ஏதாவது ஒரு முடிவை அறிவித்தாக வேண்டிய நெருக்கடியில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இருகட்சிகளுக்கும் இருக்கின்றன.
சமீபத்தில் குமுதம் வார ஏடு தமிழக அரசியல் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பின்படி. தி.மு.க. தலைமையிலான ஏழு கட்சி கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருக்கின்ற வாக்கு வித்தியாசம் ஏழு சதவீதம் என்று பதிவாகி இருந்தது. இந்த சதவீத இடைவெளியை இட்டு நிரப்ப அ.தி.மு.க. தலைமை எல்லா தளங்களிலும் தன் வலையை விரித்துப் போட்டிருக்கிறது. சலுகைகள், நலத்திட்டங்கள், மாநாடுகள், கருணைத் தொகைகள் என்று அரசாங்கத்தின் அறிவிப்புப் பலகை புதிய புதிய செய்திகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் பவனி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவான சில அசைவுகளை இது பரவலாக உருவாக்கினாலும் மொத்தமாக ஒரு வாக்கு வங்கியை அ.தி.மு.க. குறிவைக்கிறது. அதற்கு ஏற்றதுபோல் முஸ்லிம் வாக்கு வங்கி இருக்கிறது. தமிழக அரசியல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை ஜெயலலிதா பரிசீலிப்பதாக தெரிவித்திருப்பது தனக்குத் தேவையான ஆதரவு வாக்குகளை மொத்தமாக பெறுவதற்குரிய அவரின் அரசியல் நடவடிக்கையே இது எனத் தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் நீண்ட நெடுங்காலமாக தி.மு.க.வுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை ஆரம்பித்த போதும் தி.மு.க.விலிருந்து முஸ்லிம் வாக்கு வங்கி பெரும்பாலும் அப்படியே இருந்தது. முஸ்லிம்களின் அரசியல் எதிரியான பாரதீய ஜனதா கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்த போது அந்தத் தேர்தலில் தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குவங்கி அ.தி.மு.க.விற்கு ஆதராவாக திசை மாறியதே தவிர பெரிய அளவில் இதுவரையில் அ.தி.மு.க. முஸ்லிம் வாக்கு வங்கியை பெற்றிருக்கவில்லை.ஆனால் இந்த முறை இடஒதுக்கீட்டை முன்வைத்து நடத்தப்படும் சிறுபான்மை அரசியல் தி.மு.க.வுக்கு சில பின்னடைவுகளை முஸ்லிம் வாக்கு வங்கியில் உருவாக்குமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. 'முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' இதுதான் எங்கள் கோரிக்கை. கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுக்குத் தான் எங்கள் ஓட்டு (புதிய பார்வை செப்.16-30) என்று கூறுகிறார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் போ.ஜவாஹிருல்லா.
"முன்பு ஒருமுறை கமுதி பஷீர் (தேசியலீக்) நடத்திய நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கலைஞர் கமுதி பஷீரின் கோரிக்கையான இடஒதுக்கீடு குறித்து தனது அரசாங்கம் சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து நிச்சயம் ஆவனச் செய்யும் என்று உறுதி அளித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியுடன் கைத்தட்டினார்கள். ஆனால் அவர் (கருணாநிதி) தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயமாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை" (சமநிலைச் சமுதாயம்-அக்.2005) என்று நேரடியாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் வர்த்தக பிரமுகர்களில் ஒருவருமான ஏ.வி.எம். ஜாபர்தீன். இந்த வெளிப்பாடுகள் எல்லாம் தி.மு.க.வுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உரசல்களின் வெளிப்பாடுகள்.
'தி.மு.க.வின் முஸ்லிம் வாக்கு வங்கி பலகீனப்பட ஆரம்பித்து பத்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன' என்கிறார் த.மு.மு.க.வின் மாநிலச் செயலாளர் தமீம் அன்சாரி. 1991-ல் பா.ம.க.வுடன் பழனிபாபா கூட்டணி உருவாக்கிய காலம் தொட்டுத் தொடங்கியது இந்த சரிவு. கோவைப் படுகொலையில் அன்றைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு நடந்து கொண்டது, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது என்ற தி.மு.க.வின் அசைவுகள் ஒவ்வொன்றும் முஸ்லிம்களை கொஞ்சம் கொஞ்சமாக தி.மு.க.விடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கின்றன என்றார் அவர்.
ஆனால் 'கலைஞரை நம்பலாம். கலைஞரிடமிருந்து முஸ்லிம்கள் அன்னியப் படவில்லை' என்கிறார் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் டாக்டர் சையது சத்தார்.
"புதிதாக வாக்களிக்கத் துவங்கியிருக்கும் முஸ்லிம் இளைய தலைமுறையும், இந்தத் தேர்தலில் முதன் முதலாக வாக்களிக்க இருக்கின்ற புதிய முஸ்லிம் இளைஞர்களும் தி.மு.க. மீதான நம்பிக்கை எதையும் வைத்திருக்கவில்லை. வேறு மாற்று எதுவும் இல்லாத சூழலில் இந்த புதிய தலைமுறை முஸ்லிம் வாக்காளர்களின் ஓட்டு அ.தி.மு.க.வுக்குத்தான் சாதகமாக அமையும்" என்கிறார் வஞ்சிக்கப்பட்டோர் அமைப்பின் பொறுப்பாளர் கே.எம்.ஷரீப்.
ஆயிரம் ஆண்டுகாலம் தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு, வாழ்வியல், பொருளாதார ஓட்டங்களுடன் தங்களை ஒன்றிணைத்து வாழ்ந்த தமிழக முஸ்லிம்கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் மயப்பட்டார்கள். தமிழ்ச் சூழலில் பார்ப்பனியத்திற்கு எதிரான, இந்துத்துவத்திற்கு எதிரான போரை பெரியார் தொடங்கிய போது அவரோடு முஸ்லிம் சமூகம் அரசியல் களத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. பெரியார் முன்னெடுத்துச் சென்ற சமூக நீதிப் போராட்டத்தில் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பெற இஸ்லாத்தை முன்வைத்தார். இனஇழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்ற கோசம் முன் வைக்கப்பட்டது. இஸ்லாம் குறித்த சில சின்னச் சின்ன விமர்சனங்களுக்கு அப்பால், இஸ்லாமிய சமூகத்தோடு பெரியார் கொண்டிருந்து உறவு வலுவானதாகவும் கொள்கை ரீதியானதாகவும் இருந்தது.
பார்ப்பன எதிர்பபு, தீண்டாமை ஒழிப்பு, பெண்விடுதலையின் சில அம்சங்கள் உள்ளிட்ட பல புள்ளிகள் பெரியாரும் முஸ்லிம்களும் சந்திக்கும் முக்கிய சந்திகளாக இருந்தன. இறுதிவரை இந்தக் கொள்கை ரீதியான உறவு பெரியாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வலுவாகவே இருந்தது. பெரியாரிடமிருந்து விலகி தி.மு.க. உருவாகி அதன் முதல் பத்து ஆட்சி ஆண்டுகள் இந்த உறவை தி.மு.க. வைத்திருந்தது. ஆனால் 1980களுக்குப் பின்னால் தி.மு.க.வின் செயல்பாடுகள் தி.மு.க.வின் மேட்டுக்குடி வாக்குகள், கருணாநிதியின் குடும்பம் என்ற சூழலுக்குள் சிக்கிக் கொண்டன.
தலித் மக்கள், சில இடைநிலைச் சாதிகள், முஸ்லிம்கள் என காலம் காலமாக தி.மு.க.விற்கு வாக்களித்து வந்த வாக்கு வங்கிகள் குறித்த அக்கறையோ அவர்கள் முன்னேற்றத்திற்கான எவ்வித செயற்திட்டங்களோ தி.மு.க.வினால் உருவாக்கப் படவில்லை. 70களில் உருவான மதுரை வஃக்பு வாரிய கல்லூரியை தவிர வேறு எந்த சொல்லிக் கொள்ளும்படியான நடவடிக்கைகளையும் முஸ்லிம்களுக்காக தி.மு.க. மேற்கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் தலைமைகளும் தி.மு.க.வின் மீது நிர்பந்தம் எதையும் தங்கள் சமூகத்திற்காக கொடுக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது. இதே காலகட்டத்தில் இடை நிலை சமூகங்களில் ஒன்றான நாடார் சமூகம், மற்றொரு சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகம் இரண்டும் கல்வி, தொழில் இதர பொருளாதார நடவடிக்கைகளில் தங்கள் சமூக நலன்கள் சார்ந்து செயல்பட்டு ஓரளவு வெற்றியும் பெற்றன என்பதும் உண்மையே. ஆனால் முஸ்லிம் சமூகத் தலைமை இத்தகைய சமூகம் சார்ந்த அக்கரையுடன் செயல்படவில்லை என்பதும், இப்பொழுதும் கூட இந்த இடஒதுக்கீட்டுக்கான குரலில் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் பேரம் கேட்கக் கூடிய தொனி வெளிப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அதிகாரத்திற்கான எல்லா சமரசங்களுக்கும் கருணாநிதி தயாராகிய காலகட்டம் அது. ஆண்டு தோறும் காயிதேமில்லத் நினைவிடத்தில் மரியாதை செய்வது, நோன்பு காலத்தில் முஸ்லிம் கனவாண்களுடன் அமர்ந்து கஞ்சி குடிப்பது, சிறுபான்மையினரை ஒழிப்பது என் பிணத்தின் மீதுதான் நடந்தேறும் என வசனம் பேசுவது என்ற எல்லையுடன் கருணாநிதியின் முஸ்லிம் ஆதரவு நடவடிக்கைகள் நின்று போயின. முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே தி.மு.க. மதிப்பிட்டதின் வெளிப்பாடு இது. திராவிட இயக்கத்தின் கடைசி கண்ணியமாக இருக்கக்கூடிய கருணாநிதி பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்துக் கொண்டதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதியின் செயலை இராமகோபலான் விமர்சித்த போது, 'வேண்டுமானால் இராமகோபாலன் கூப்பிடட்டும் விநாயகர் சதுர்த்திக்குப் போய் கொளுக்கட்டை சாப்பிடுறேன்' என்று கருணாநிதியால் தயக்கமின்றி கூறமுடிந்தது.
இப்தார் நோன்பு திறப்பு, விநாயகர் சதுர்த்தி இரண்டும் பண்பாட்டு தளங்களில் அரசியல் படுத்தப் பட்டவைகள். பார்ப்பன எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி என்ற பொது கருத்தியலில் பார்ப்பனரல்லாதவரும் சிறுபான்மையினரும் ஒன்றிணைகிற அரசியல் பண்பாட்டு இணைப்பின் குறியீடாக இப்தார் இருக்கிறது. பார்ப்பன அதிகாரத்தை மீண்டும் நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இந்த இரண்டையும் ஒரே தரத்தில் அணுகுவது என்ற கருணாநிதியின் பார்வை அவரது கொள்கைரீதியான பலவீனத்தையே காட்டுகிறது. இந்த சிக்கல்களுடனேயே இடஒதுக்கீடு குறித்த அரசியலில் முஸ்லிம்களின் அணிசேர்க்கை தி.மு.க.வுக்கு எதிராக மாறுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தரும் பட்சத்தில் முஸ்லிம் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு போவது உறுதி என்கிறார் தேசிய லீக்கின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது. ஆனால் 'கலைஞரை நம்பலாம் ஜெயலலிதாவை நம்பமுடியாது. கலைஞர் என்பது ஏழுகட்சி கூட்டணி. எனவே அவர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய முழுமைக்கும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்டத்தைக் கொண்டு வரமுடியும். ஜெயலலிதா ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார். அதில் ஒரு அவதாரம் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அவரது கருத்தும்' என்கிறார் முஸ்லிம் லீக்கின் சையது சத்தார்.
இடஒதுக்கீடு கோரிக்கை விசயத்தில் முஸ்லிம் லீக்கைத் தவிர பிற முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ஒரே அணியில் நிற்கின்றன என்று தெரிகிறது. தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா, இந்திய தேசியலீக், த.மு.மு.க., தவ்கீத் ஜமாஅத் என பலதரப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் குரல்கள் சேர்ந்தே ஒலிக்கின்றன. 'நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜே.எம். ஹாரூன் தலைமையில் கலைஞர் முதல்வராக இருக்கும் போது தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பாக முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை வைக்கப்பட்ட போது கலைஞர் (அப்போது அவர் முதல்வர்) அதைத் தரமுடியாது என்று மறுத்தார். இப்பொழுது தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம் என்கிறார்' என்று பழைய சம்பவத்துடன் நினைவு படுத்திக் கூறுகிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. ஆனாலும் ஜெயலலிதாவை விடவும் கருணாநிதியை நம்பலாம் என்கிறார் கொடிக்கால். ஜெயலலிதா பரிசீலிக்கலாம் என்றுதான் கூறிஇருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பு அதன் பிறகு பரிசீலித்தல் என்ற வார்த்தையே காலம் தாழ்த்தும் முயற்சி தான் என்பது அவர் மதிப்பீடு.
இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு கலைஞர்தான் காரணம் என்று கூறுகிறார் த.மு.மு.க.வின் தமீம் அன்சாரி. காலம் காலமாக வாக்களித்த முஸ்லிம்களுக்கு கலைஞர் எதுவும் செய்யவில்லை. எனவே தி.மு.க.வின் முஸ்லிம் வாக்குகள் ஜெயலலிதா இடஒதுக்கீடு வழங்கும் போது அ.தி.மு.க.வுக்கு திரும்புவது தவிர்க்க முடியாதது என்கிறார் அவர்.
இடஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து இருக்க அப்படி கொடுத்தாலும் இதனால் பெரிய பலன்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்ற கருத்தும் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் வேலைக்கு ஆள் எடுப்பதையே பல ஆண்டுகளாக நிறுத்திவிட்ட சூழலில் இப்பொழுது இடஒதுக்கீடு பெறுவது என்பது பெரிய பலன் எதையும் தந்துவிடாது என்கிறார் கே.எம். ஷரீப். இது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால் பலன் இருந்திருக்கும் என்பது அவரது பார்வை. "இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை விடவும் முஸ்லிம்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வைப்பதே இன்றைக்குத் தேவையானது" என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா. முஸ்லிம்கள் எந்தத் துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதை முன்னேற்றுவதற்கோ, அந்தத்துறை சார்ந்த நலன்களை பாதுகாப்பதற்கோ, அந்த துறைக்கான நிதிகளை அரசிடம் இருந்து பெறுவதற்குரிய உத்தர வாதங்களைப் பெற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கச் சொல்லி முஸ்லிம் அமைப்புகள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்கிறார் கொடிக்கால் சேக் அப்துல்லா.
இடஒதுக்கீடை மையப்டுத்தி முஸ்லிம் அமைப்புகளிடமும், புதிதாக வாக்காளர்களாக உருவாகி இருக்கும் முஸ்லிம் வாக்காளர்களிடமும் ஏற்பட்டிருக்கும் அசைவுகளைப் புரிந்து கொண்டு அதனை தனக்கு சாதகமான சக்தியாக மாற்றுவதில் கருணாநிதியை விடவும் ஜெயலலிதா முந்திவிட்டார் என்றே தெரிகிறது. 69% இடஒதுக்கீடு வழக்கு தீர்வுக்கு வந்த பிறகு தான் முழுமையான இடஒதுக்கிடு குறித்து பரிசீலிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் கருத்தோடு, அதுவரையிலும் தற்காலிகமாக எம்.பி.சி. (மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள்)க்குரிய இடஒதுக்கீட்டிலிருந்து சில சதவீதங்களைத் முஸ்லிம்களுக்கு வழங்கலாம் என்று தெரிகிறது.
அப்படி வழங்கும் பட்சத்தில் ஒரு அறிவுப்பு வந்தால் முஸ்லிம் வாக்கு வங்கி அ.தி.மு.க.வின் பக்கம் நகர்வதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியாது. பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை பாரதீய ஜனதா என்ற எதிரியை வீழ்த்தவே காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க. தலைமை இவற்றை முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாற்று உண்மை. வெறும் மதச்சார்பின்மை மட்டும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திவிடாது என்ற அனுபவ அரசியலின் அடுத்த நகர்வுதான் இடஒதுக்கீடு கோரிக்கை. இந்த நகர்வுகள் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு என பல தளங்களில் விரிவடைய வேண்டிய காலத் தேவை இருக்கிறது. அப்படி விரிவடையும் போதுதான் அரசியல் அரங்கில் அவர்கள் குரல் இன்னும் கவனமாக பரிசீலிக்கப்படும். ஏற்கனவே தலித் மக்கள், இடைநிலை சமூகங்கள் குறிப்பாக வன்னியர்கள், தேவர்கள், நாடார்கள் என்று தனது வாக்குவங்கிகள் ஒவ்வொன்றாக தி.மு.க. இழந்துவரும் சூழலில் முஸ்லிம் வாக்குவங்கியும் கைநழுவிப்போவது கருணாநிதிக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல.
நன்றி: புதியகாற்று - மாதஇதழ் (நவம்பர் 2005)
Wednesday, August 8, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment