Showing posts with label வளைகுடா. Show all posts
Showing posts with label வளைகுடா. Show all posts

Monday, June 23, 2008

ஆ! அல்-ஜஸீரா!!

ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்ற வல்லவை ஊடகங்கள் என்றால் மிகையில்லை.

அரசியலமைப்பின் நான்காவது தூண் என்று ஊடகங்களின் ஒன்றான பத்திரிகைகள் பேசப் படுகின்றன. தொலைக் காட்சி என்பது சக்தி வாய்ந்த ஊடகமாக நம் சமகாலத்தில் உருவெடுத்துள்ளது. இக்கட்டுரை, மேற்குலக ஊடகங்களையும் அரபுலக ஊடகங்களையும் ஒப்பு நோக்கும் ஓர் ஆய்வாகும்.
ஜான் பிராட்லெ மேற்கத்திய ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளராவார். ஆக்ஸ்ஃபோர்ட் / லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி முடித்தவர். சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர். கெய்ரோவின் அல்-அஹ்ரம் பத்திரிகையின் மூத்த பதிப்பாசிரியராகவும் சவூதி அராபியா - ஜித்தாவிலிருந்து இயங்கும் அரப் நியூஸ்இல் நிர்வாகப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். Saudi Arabia Exposed: Inside a Kingdom in Crisis (Palgrave-Macmillan Publication, June 2005), The Lonely Planet Guide to the Middle East (4th ed; 2003) போன்ற சர்சைக்குரிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். நியாயமான விஷயங்களை உறுதியான வாதங்களாக முன்வைப்பவரும் நடுநிலையாளர் என்று சர்வதேச பத்திரிகையாளர்களால் பெயர் பெற்றவருமான இவரின் கருத்துகள் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு இங்குப் பதிக்கப் படுகின்றன.

சர்வதேச ஊடகங்கள் பற்றி தனது ஆய்வுக்கட்டுரைகளை மேற்கொண்டதோடு மேற்கத்திய செய்தி ஊடகங்களின் இரட்டை நிலைபாட்டை முழுமையாக அறிந்த ஜான் பிராட்லெ, அவற்றோடு அரபுலகப் பத்திரிகை ஊடகங்களைப் பற்றிய தனது ஒப்பீட்டினை ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.

அரபுலக ஊடகங்கள் பல வருடங்களாகக் கேட்டு வந்த கேள்விகளான "இஸ்ரேலுக்கு என்ன தான் வேண்டும்?", "ஏன் இத்தனை அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்?" போன்ற விடை வராதக் கேள்விகளை மிக மிகத் தாமதமாக மேற்கத்திய ஊடகங்களும் இப்போது பின்பற்றிக் கேட்க ஆரம்பித்திருப்பதற்கு அரபுலக ஊடகங்களின் ஆதிக்கம் மேற்கத்திய மக்களைத் தொட்டுப் பரவ ஆரம்பித்து இருப்பதுதான் இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும் என்று உடைக்கிறார் ஜான் பிராட்லெ.

மேற்கத்திய ஊடகங்களோ தேய்ந்து போன ரெக்கார்டாக சுன்னி-ஷியா பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைப் பற்றி "ஆடுகள் நனைவதற்காக அழும் ஓநாய்களைப் போல்" திரும்பத் திரும்ப நீலிக் கண்ணீர் விட்டு நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், அதி நவீன ஆயுதங்கள் கொண்ட படையினராக சித்தரிக்கப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தைப் புறமுதுகிட்டு ஓட வைத்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரின் நடவடிக்கைகள் அரபுலக ஊடகங்களில் அலசப்படுகின்றன என்கிறார்.

அரபுலக மீடியாவிற்கும் மேற்கத்திய ஊடகங்களுக்குமிடையான பெரும் வித்தியாசங்களாக இவர் பட்டியலிட்டிருப்பது:


  • நேரலை ஒளிபரப்பில் சம்பவ இடத்திலிருந்தே துல்லியமாகப் படம் பிடித்து உலகிற்குக் காண்பிக்கும் விரைவுச் சேவை.

  • நேரலை நிகழ்ச்சிகளை நேரலையிலேயே மொழிபெயர்ப்புச் செய்து ஒலி-ஒளி பரப்பும் பிரமிக்க வைக்கும் ஆற்றல்

  • ஐநா அலுவலராகட்டும், இஸ்ரேலிய ராணுவ பிரதிநிதியாகட்டும் நடப்பைத் துணிச்சலாகக் கூறும் நேர்மையான அணுகுமுறை

  • ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஷேக் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்களைத் தேடி அமெரிக்க / இஸ்ரேலிய படைகள் அலைந்து கொண்டிருக்கும் அதேவேளை, அவருடன் ஆற அமர அமர்ந்து நேரலை ஒளிபரப்புச் செய்வது போன்ற புருவத்தை உயர்த்தும் துணிச்சல்

போன்ற விஷயங்களில் மேற்கத்திய ஊடகங்களுக்குப் பாடம் நடத்துகின்றன அரபுல ஊடகங்கள். அதில் குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்துக் கொண்டே வரும் அல்ஜஸீராவின் ஊடகத்திறனை ஆய்வு செய்து வியந்திருக்கும் இவரது கட்டுரை Will Al-Jazeera bend? அல்ஜஸீராவின் துணிச்சலையும் நேர்மையான ஊடகத் திறனையும் பாராட்டுவதோடு அல்ஜஸீரா சந்திக்கும் அரசியல் சமூக நெருக்கடிகளைப் பற்றிக் கேள்விகளை அடுக்குகிறது.

அல்ஜஸீரா பற்றிக் கூறுகையில் இவர் "அனைத்து அரபுலகத்தையும் ஓரணியில் திரளச் செய்யும் அரசியல் சார்ந்த முயற்சியான Pan-Arabism என்பதே அல்ஜஸீராவின் உண்மையான குறிக்கோளாகும். இதன் காரணமாகவே மேற்கத்திய அரசியல் விமர்சகர்களின் உச்சகட்ட கண்டனத்திற்கு அல்ஜஸீரா உள்ளாகியுள்ளது. அதேவேளை, பல நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள அல்ஜஸீராவின் கோட்பாடுகள் அரபுலகத்தினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டு வருகிறது.

அரபுலகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரணிகள், அரபுலக அரசுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏற்படும் நெருக்கடிகள், முட்டுக்கட்டைகள் அனைத்தையும் அலசி ஆய்ந்து வெளிக்கொண்டு வரும் அதன் செய்திகள் அரபுலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை ப்ராட்லே சுட்டிக்காட்டுகிறார். அரபுக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டுக்குள் (Arab League Summit) அரங்கேறும் உட்பூசல்களையும் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து காட்டுவது அல் ஜஸீராவின் மீது அரபுலகின் சந்தேகக் கண் விழுவதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.

இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜஸீரா?

அல்ஜஸீரா இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற கூற்றையும் ப்ராட்லெ மறுக்கிறார். இஸ்ரேல் லெபனான் போரின் போது இஸ்ரேலிய வீரர்களின் பார்வையில் லெபனான் பற்றி முழுச் செய்தித் தொகுப்பாக அல்ஜஸீரா வெளியிட்டதையும், முழு நீள இஸ்ரேலிய ராணுவ பிரதிநிதியின் பேச்சுகளையும் வெளியிட்டதையும் அத்துடன் இஸ்ரேலிய மக்களின் வாழ்க்கைத் தரம் ஹிஸ்புல்லாஹ் படையினரின் குண்டுமழையினால் எவ்வாறு சீரழிந்துள்ளது என்பதையும் விளக்கமாக விவரித்தது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

ஊடகங்களில் அமெரிக்க-இஸ்ரேலிய உறவு

அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலைத் தாங்கிப்பிடிப்பவை (There is no doubt the American media is deeply pro-Israeli). இஸ்ரேல் நாட்டினுள் உள்ள ஊடகங்கள் இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பதை விட அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரானவற்றைப் பேசுவது மிகமிகக் குறைவு. CNN மற்றும் BBC போன்ற ஊடகங்கள் அளிக்கும் செய்திகளையும் ஆய்வுகளையும் சில நிமிடங்கள் நடுநிலைப் பார்வையோடு கவனித்தோமானால் அதில் உள்ள இஸ்ரேலிய ஆதரவுத் தன்மை விளங்கும்.

அமெரிக்க ஊடகங்களில் அரபுலக (ஃபலஸ்தீன)ச் சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான 'சிறப்புப் பார்வை' நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். கஸ்ஸா / மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் "Occupied" அல்லது "Occupation" போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு "Contested / Disputed" போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் ஃபலஸ்தீனின் அப்பகுதிகளையே "இஸ்ரேல்" என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.

இஸ்ரேல், லெபனான் மீது தொடுத்த போரின் உண்மைக் காரணிகளை அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? இரு இஸ்ரேலியப் படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் பிடித்துச் சென்றது மட்டும் காண்பிக்கப்பட்ட ஊடகத்தில் அந்த இரு வீரர்கள் லெபனான் எல்லைக்குள் என்ன செய்து கொண்டிருந்தபோது பிடிபட்டனர் என்பது பூசி மெழுகி மறக்கப்பட்டு விட்டது. இரு வீரர்கள் பிணைக்கைதிகளானது போர்க்காரணம் என்றால் பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பெண்களும் அடங்கிய 9000 பேர் இஸ்ரேலியச் சிறையில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் படும் வேதனைகளை யார் வெளியே சொல்வது? அவர்களை யார் விடுவிப்பது?

இவை வெறும் கேள்விகள் மட்டுமா?

ஆக்கம்: அபூ ஸாலிஹா

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=936&Itemid=278

Thursday, April 24, 2008

அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!

'அமைதியை நிலை நாட்ட ஒரு போர்' என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.

ஆம்! ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு உணர்வதிர்ச்சி (post-traumatic
stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND Corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டுக் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:

- கொடூர சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)

- தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்

- குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல், விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல்


இது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:

— அடிக்கடி வரும் தலைவலி
— குழப்பமான மனநிலை
— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்
— விசித்திர மனநிலை
— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது
— குமட்டல் வாந்தி

— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது" என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார். பெண்டகனிடம் இத்தகவல்கள் பற்றிய ஆய்வறிக்கை ஏதும் இல்லாததே இது பற்றின ஆய்வில் RAND இறங்கத் தூண்டியது என்று கூறினார்.

தாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும். அதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. (இந்நோயின் மூலம் ஏற்படும் அறிகுறிகள் இடப்புற பெட்டிச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Veterans Affairs அறிக்கை

- 19 % அல்லது 320,000 அமெரிக்கப்படைவீரர்கள் PTSD நோயினால்
அவதியுறுகின்றனர்


- 7 % வீரர்கள் மன அழுத்தம் முற்றியதால் மூளையில் சேதம்
ஏற்பட்டுள்ளது


- 43 % தலையில் ஏற்பட்டுள்ள வேதனை காரணமாக மருத்துவர்களால் பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்

- 53 % PTSD மற்றும் மன அழுத்தம் காரணமாக அவதியுறுபவர்கள் (கடந்த வருடம் மட்டும்)

RAND அளித்துள்ள அறிக்கையின் முடிவில் படைவீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக பெண்டகன் செய்ய முன்வர வேண்டுமென்றும் அவர்களது உடல்நலம் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை தாமதம் ஆகும் பட்சத்தில் படைவீரர்களிடையே தற்கொலைகள் செய்து கொள்வது அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மன நோயினால் ஆர்வம் குன்றி பணிபுரியும் அமெரிக்கப் படைவீரர்களின் தரம் குறைந்த பங்களிப்பினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.

டிம் நோ என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள Veterans Affairs ஒப்புக்கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில புள்ளிவிபரங்கள் அருகில் உள்ள பெட்டிச்செய்தியில் காண்க.

RAND அறிக்கை பற்றிய சிறு குறிப்பு: கலிஃபோர்னியா சமூக நல அறக்கொடை சார்பில் RAND உடல்நலத்துறை மற்றும் RAND தேசிய பாதுகாப்பு ஆய்வுத்துறை இணைந்து மேற்கொண்ட இந்த அறிக்கைக்கு கண்ணுக்குப் புலப்படா போர்க்காயங்கள்: உளவியல் மற்றும் புலன் உணர்வு, அதன் விளைவுகள், மற்றும் மீட்புப்பணிக்கான சேவைகள் ("Invisible Wounds of War: Psychological and Cognitive Injuries, Their Consequences, and Services to Assist Recovery.") என்று பெயர். கடுமையான உழைப்பில் 25 ஆய்வாளர்கள் குழுவின் மூலம் கடந்த ஜனவரி மாதம் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையே மேலே நாம் குறிப்பிட்டுள்ள RAND அறிக்கை ஆகும்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள் இன்று அமைதியிழந்து அவதிக்குள்ளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய "அமைதியை நிலை நாட்டும்(?) போர்" அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.

இவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் கட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.

- அபூ ஸாலிஹா

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=896&Itemid=278

Monday, September 3, 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 2)

விடிகாலைத் தொழுகை நேரத்திற்கு வெகு முன்பாகவே கண்விழித்து விடுகிறார்கள் இவர்கள்.

ஒரு நாளைக்கு 14 மணி நேரங்கள் என்ற கணக்கில் வாரத்திற்கு ஆறு நாட்கள், வெள்ளிக்கிழமையன்றும் ஓவர்டைம் கிடைக்கும் எனில் நோகும் உடலைக் கிடைக்கவிருக்கும் காசின் ஆசைகாட்டி ஒத்துழைக்க வைத்து கிளம்பிவிடுவதும, உச்சி வெயிலும் தணல் காற்றும் உள்ளும் புறமும் சுட்டெரிக்க தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் ஆபத்துக்கள் சூழ்ந்த புழுதி பறக்கும் சிறைச்சாலை போன்ற தொழிற்சாலைகள், கட்டிடப் பணியிடங்கள், உடலும் உள்ளமும் துவண்டு போய் காய்ந்த வியர்வையே போர்வையாக மாறியிருக்கும் மாலை நேரத்தில் துவண்டு நடக்காமல் ஓடிப்போய் அடித்துப் பிடித்து ஏறினால் தான் அழைத்து போக வரும் பேருந்தில் இடம் கிடைக்கும்.

நான்கு பேர் மட்டுமே தங்கப் போதுமான இடம் என்று சர்வதேசச் சட்டம் ஏட்டில் எழுதி வைத்துள்ள ஒரு அறையில் பதினான்கு பேருடன், ஒரு காலத்தில் சுத்த பத்தமாய் நாட்டில் சுகவாழ்வு வாழ்ந்ததை நினைவுகளில் நிறுத்தி, வீட்டு நினைவுகள் அதிர்ஷ்டவசமாக அழுத்தவில்லை என்றால் படுக்கையில் படுத்தவுடன் பத்து எண்ணுவதற்குள் கண்ணைச் சுழற்றும் கணங்களுடன், காலையில் அணிந்து செல்ல அதே அழுக்கு வியர்வைக் கரைசல் மணத்துடன் சுவற்றில் மாட்டியிருக்கும் யூனிஃபார்மும் அதற்குச் சற்றும் சளைக்காத விதத்தில் கல்லில் மாட்டிய ஈரத்துணியாய் ரணமான மனதுடன் தூங்கிப்போகின்றனர்.

வளைகுடா நாடுகள் 1950களின் இறுதியில் கச்சா எண்ணெய் வளம் கண்டுபிடிப்பின் மூலம் ஏற்பட்ட பெரும் தொழிற்புரட்சியில் உண்டான மாற்றங்களின் விளைவாகப் பெரும் மனித வளம் இங்கே தேவைப்பட்டது. வளைகுடா நாடுகளில் 90% அளவிற்கு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். வளைகுடாவின் பரந்து விரிந்த தொழிலாளர் பிரச்னைகளை நாடுவாரியாக எடுத்துச் சொன்னால் கட்டுரை நீண்டுவிடும் என்று அஞ்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு சாராரை மட்டும் கையில் எடுத்துள்ளோம்.

BMW சொகுசு கார்களில் உலாவரும், கோல்ஃப் விளையாடிவிட்டு ஒரு வாய் டீயை ஒரு மணிநேரம் எடுத்துக் குடிக்க ஏழு நட்சத்திர ஹோட்டல்களைத் தேடி அலையும், வளைகுடாவின் "சூடான" மாதங்களில் அடிக்கடி மேற்கத்திய நாடுகளில் "சன்"பாத் எடுக்கச் செல்லும் நபர்கள் இந்த ஆக்கத்தின் பட்டியலில் சேர்த்தியில்லை. பொறுப்பான உயர்பதவிகளில், தலைசிறந்த நிர்வாகத்தினை நடத்தி வரும் தமிழ் அன்பர்களும் இதிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்.

வறுமைக்கோடு என்பது வளைகுடாவில் வேலை செய்பவர்களுக்கும் உண்டு என்ற புதிய இலக்கணம் படைத்து, சொல்லவொண்ணா துன்பமும் துயரமும் அடைந்து கொண்டிருக்கும் இந்திய - குறிப்பாக - தமிழக முஸ்லிம்கள் நிலை பற்றி இங்குப் பார்ப்போம்.

காரணம், கழுத்து வலிக்கும் உயரத்தில் கண்ணாடிக் கட்டிடங்களும், மார்பிள் பளபளக்கும் 'மால்'களுக்கும் இங்கே பஞ்சமில்லை. ஆனால் வெளியுலகில் பிரதானப் படுத்தப்படும் தரமான, ஆடம்பரமான பார்வைகளின் பின்னணியில் நசிந்து போயிருக்கும் பல நிகழ்வுகள் நம் பார்வைக்கே வருவதில்லை. அவற்றுள் சிலவற்றை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வியர்வைத்துளி 1 - முபாரக்!

தலைக்கு மேல் கொளுத்தும் 49 டிகிரி செண்டிகிரேட் வெயிலில் கைகளுக்கு அணிந்திருக்கும் உறைகளை மீறிய சூட்டில் கட்டிடத்தின் நூறாவது மாடியின் மேல் தளத்திற்காக கம்பிகள் மேல் அமர்ந்து கான்க்ரீட் கொட்டும் இந்திய முஸ்லிம்களைப் பார்த்தால் கண்ணீர் வராத உள்ளம் கல்லேயன்றி வேறில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னால் வளைகுடா மண்ணை மிதித்த முபாரக், ஊரில் வளைகுடாவைப் பற்றி கனவு காணும் டிப்பிக்கல் இளைஞர்களில் ஒருவராக தன் இரு வருடச் சம்பாத்தியத்தை முன்பணமாக மும்பை ஏஜண்டிற்கு தாரை வார்த்துவிட்டு வந்தவர். வளைகுடா தொழிலாளர் சட்டம் இது போன்ற ஏஜண்ட் இலஞ்சமாக வாங்கும் பணத்தை சட்ட விரோதமாக கருதினாலும் கூட கண்ணீரையும் வியர்வைத் துளியையும் உணவாக உட்கொண்டு செழிப்பாக இவ்வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. (வாசிக்க: Saudi Arabian Basic Labor Legal Information for Indians.)

வளைகுடாவில் தான் சிந்திய முதல் வியர்வைத் துளியிலேயே அதன் பயங்கரமும் தலைக்கு மேல் குறிவைக்கப்பட்ட ஆபத்தும் முபாரக்கிற்கு புரிந்து விட்டது. அஸ்திவாரம் தோண்டும் முன்பே கட்டிடத்தின் வாடகைக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடுவதால் அவசர அவசரமாகக் கட்டப்படும் கட்டிடங்களுக்கிடையே தரக்கட்டுப்பாட்டினையும், தொழிலாளர்களின் பாதுகாப்பும் பற்றி பேச நிறைய முதலாளிகளுக்கு நேரமிருப்பதில்லை.

விளைவு, போதுமான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்படாததால், தன் கண் முன்னே கான்க்ரீட் கலவைக்குள் சரிந்து புதைந்து போன தனது நண்பர்களை கண்ணீருடன் நினைவு கூர்கிறார் முபாரக். கம்பெனியில் கடந்த ஆறு மாதமாக சம்பளம் சரிவர வராத சூழலில் ஒவ்வொரு நாளும் இரவில் தத்தம் குடும்பத்தினைக் காப்பாற்றவும், நலிவுற்றிருக்கும் தன் சமுதாயத்தின் நிலை பற்றியும் பேசிப் பாதியிலேயே பிரிந்துவிட்ட தனது நண்பர்கள் நினைவு வர துக்கம் தொண்டையை அடைக்க பேச்சை நிறுத்திக் கொள்கிறார்.

12x7 சதுர அடி அளவிலுள்ள நான்குபேர் மட்டுமே தங்கக்கூடிய இவரது அறையில் பன்னிரண்டு பேருடன் தங்கியுள்ளார். மேல்மாடி டாய்லெட்டிலிருந்து கான்க்ரீட் கூரை வழியே சொட்டுச் சொட்டாய் கசியும் கழிவுநீருடன் தான் வாசம். ஒருவர் படுக்கையின் மீது அடுக்கடுக்காய் அமைந்துள்ள இன்னொருவர் படுக்கை. மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு ஒருபக்கம் என்றால், போல்ட் நட்டு சரியில்லாத இரும்புக் கட்டிலில் ஒருவர் திரும்பிப் படுத்தால் அவர் "அப்பார்ட்மெண்ட்"டில் உள்ள அனைவருக்கும் தூக்கம் கலையும். கம்பெனி கொடுக்கும் ஐநூறு திர்ஹத்தைக் கொண்டு இவரும் சாப்பிட்டு(?) உடுத்தி விட்டு எஞ்சியுள்ளதை வைத்து ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்றும் வித்தையை இங்கே தான் பார்க்க முடியும். ஓட்டல்களில் சாப்பிட்டு ராஜ போக (!) வாழ்க்கை வாழ சம்பளம் இடம் கொடுக்காததால் கிடைத்த சந்தில் அடுப்பை வைத்து கிடைக்கும் நேர இடைவெளிகளில் சமைத்துக்கொள்ளவும் வேண்டிய சூழ்நிலை.

லேபர் டிபார்ட்மெண்ட் இதுபோன்ற கம்பெனிகள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் இவர் போன்றவர்கள் பிரச்னை தீர்ந்ததா என்றால் இல்லை. இரண்டு வருடத்துக்குள்ளாவது ஏஜண்ட் இடம் கொடுத்த கடனை வட்டியோடு அடைத்து விட்டு ஊர் திரும்பினால் கூட போதும் என்ற நிலையிலேயே பலர் தன்னுடன் இருப்பதாகக் கூறுகிறார்.

"பர்தாவுடன் மினி ஸ்கர்ட்டுகளையும், பள்ளிவாசல்களோடு சர்ச்சுகளையும் தாராளமயமாக்கல் என்ற பெயரில் கையாளும் வளைகுடா நாட்டு அரசாங்கங்களின் மனம் என் போன்றவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவில்லையே?" என்று வேதனையை வெளிப்படுத்துகிறார் இவர்.

அல்ஜஸீராவின் டாக்குமெண்டரி!

இந்த கண்ணீர்க்கதைகளை வெட்டிக்கதை பேசிக்கொண்டிராமல் கேமராவை இருட்டான லேபர் கேம்ப்களுக்கு எடுத்துச் சென்று படம் பிடித்து உலக அரங்கில் வெளிச்சமிடத் துணிச்சலுடன் களமிறங்கியிருப்பதற்கு அல்ஜஸீராவிற்கு நன்றிகூற வேண்டும்.

"இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் - வளைகுடா தொழிலாளர்களின் வேதனைகள்!" என்ற பெயரில் டாக்குமெண்டரி அல்ஜஸீரா படம் பிடித்து உலகிற்குக் காட்டியுள்ளது. அல்ஜஸீரா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே உள்ள வீடியோவில் அதைக் காணலாம்.







(முதல் பாகம் மேலே / இரண்டாம் பாகம் கீழே)








வியர்வைத்துளி 2 - இப்ராஹிம்!

"மூன்று வருடங்கள் பதினோரு மாதங்கள்!" ஊர் போய் எத்தனை நாளாகிறது என்று 37 வயதான இப்ராஹிமைப் பார்த்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்தது இதுதான். பத்து வயது மகளுடனும் பன்னிரண்டு வயது மகனுடனும் இரு வாரங்களுக்கொருமுறை இண்டெர்நெட் போனில் உறவைப் புதுப்பிக்கும் இப்ராஹிம் "எங்களப் பாக்க எப்போ வர்றீங்க வாப்பா?" என்ற கேள்வியைப் பிள்ளைகள் கேட்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்காமல் வெளியேறியதில்லை.

"அல்லா காப்பாத்தணும்...இந்தியாவுக்கும் கல்ஃபுக்கும் இடையில ஏதாச்சிம் பெருசா தகராறு வந்து, எல்லா இந்தியர்களுக்கும் நாங்களே வேலை போட்டுத் தர்றோம். எல்லாத்தையும் திருப்பி அனுப்புன்னு இந்தியாவே கேக்கணும். எங்க நாட்டின் ஏர்போர்ட்டுகள் மூடப்படணும் அப்படியாச்சிம் எங்க குடும்பம் குட்டிகளோட சேர்ந்து நாங்க வாழ முடியுதான்னு பாக்கணும்!" என்றவரின் பேச்சில் தெறித்த இயலாமை முற்றிய வன்மம், எந்த அளவிற்கு அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்தது.

ஊரில் சம்பாதிப்பதை விட நான்கு மடங்கு இங்கே கிடைக்கிறது என்பவர்களை விட "இதே நாய்ப்பொழைப்பை கேவலம் பார்க்காம ஊர்ல இருந்துகிட்டு உழைச்சேன்னா இதை விட எட்டு மடங்கு சம்பாதிக்க முடியும்" என்ற முணுமுணுப்புகள் கேட்பது இங்கே சகஜம். சரி! பின்னே அதைச் செய்ய வேண்டியது தானே என்று கேட்டால் மெளனம்தான் பதிலாகக் கிடைக்கிறது!

சிவந்த கண்களுடன் பேசியவரை பார்த்து துக்கம் தொண்டையில் பந்துபோல் சுழல, பாதித் தூக்கத்தில் இருந்த அவரிடம் பேச்சை முடித்துக்கொண்டேன். அடுத்த நாள் கருக்கலில் எழுந்து தெம்புடன் வேலை செய்ய வேண்டுமென்றால் ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கையில் விழுந்தால் தான் முடியும். பல பேருக்கு கனவுலக தாம்பத்யமும், பிள்ளைகளுடன் கற்பனைகளில் கொஞ்சிப்பேசவும் முடிவது அந்த சில மணித்துளிகளில் தான்.

பெரும்பாலானோரின் சம்பாத்தியங்கள் தங்களின் சின்னஞ்சிறு கனவுகளை நனவாக்குவதிலேயே செலவாகின்றன ஒழிய, தாங்கள் சம்பாதிக்கும் பருவத்திலேயே அதனை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பொருளீட்ட எண்ணுவதில்லை.

ஆர்ப்பாட்டங்கள்/எதிர்க்கும் குரல்கள்

எவ்வளவு தான் பிரச்னைகள் என்றாலும் ஆர்ப்பாட்டம் என்பதெல்லாம் அசாதாரணம் என்றிருக்கும் துபாயில் கூட கடந்த வருடம் மார்ச் மாதம் ஆயிரக்கணக்கான கட்டிடத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்ததும், கண்ணில் பட்ட வாகனங்களை துவம்சம் செய்ததும் வளைகுடாத் தொழிலாளர்களின் பிரச்னைகளின் வீரியத்தை உலகுக்கு உணர்த்தியது எனலாம்.

உலகத்தின் மிக உயரமான கட்டிடம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் புர்ஜ்-துபை கட்டிடத்தின் தினசரி பணிகள் தொழிலாளர்களின் புரட்சியில் சென்ற வருடம் ஸ்தம்பித்துப்போனது.

"இங்குள்ள தொழிலாளர்களுக்குப் பிரச்னைகளே இல்லை என்று நான் சொல்லவில்லை. அதைத் தீர்க்க முயன்று வருகிறோம்" என்று சொல்கிறார், துபையின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அலீ பின் அப்துல்லாஹ் அல் காஅபி.

"இவர்களை நாங்கள் கட்டாயப்படுத்திக் கூப்பிடவில்லை" என்கிறார் அலீ அல் காஅபி. "இவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே நான் பார்க்கிறேன்" என்கிறார்.

ஆனால் மனித உரிமை விழிப்புணர்வு இயக்கத்தின் மத்திய கிழக்கு பிரிவின் இயக்குனரான சாரா லீ விட்ஸன் அலீயின் இக்கூற்றை அடியோடு மறுக்கிறார் - "தனது சுயநலத்திற்காக அடுத்தவர்களின் இயலாமையைப் பயன்படுத்திக் கொள்வது என்றால் அது இதுதான்!" என்று சாடுகிறார். "மெர்ஸிடிஸ் கார்கள் மூலமாகவோ, விண்ணை முட்டும் கட்டிடங்களாலேயோ மட்டும் வளைகுடா நாடுகளை உலக அரங்கில் மிளிர வைத்துவிட முடியாது. அத்தகைய வெற்றியும் வளர்ச்சியும், வளைகுடாத் தொழிலாளர்களின் நலனை முன்னுறுத்திக் கொண்டு சென்றால் தான் கிட்டும்" என்கிறார்.

வியர்வைத்துளி 3 - சாதிக் பாஷா!

இங்கே சம்பாதிப்பதைப் போன்று என்னால் ஊரில் மீன் பிடித்தே காலம் தள்ள முடியும் என்று அலட்சியமாக் கூறும் சாதிக் பாஷா தமிழகக் கடற்கரை கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர். கடந்த நிமிடத்தில் அப்படிப் பேசியவர், பதினெட்டு வருடங்கள் கடந்தும் தன் எதிர்காலத்தைப் பற்றி தான் எவ்விதப் பிடிப்புமின்றி இருப்பதாகவும் எதிர்மறையாகப் பேசுகிறார். இத்தனை வருட காலங்களில் என்ன சம்பாதித்தீர்கள் என்றால் ஏற்கனவே இருந்த வாப்பாவின் நிலத்தில் தான் சிறிதாக ஒரு வீட்டை கட்டியதாகவும், ஒன்றே கால் லட்ச ரூபாயில் தனது தங்கைக்கு வரதட்சணை கொடுத்து "பெரிய" இடத்தில் கல்யாணம் கட்டிக் கொடுத்ததாகவும் நாற்பதை நெருங்கும்போது தானும் கல்யாணம் செய்து கொண்டு இரண்டே மாதத்தில் இங்கே வந்து விட்டதாகவும் வேதனையுடன் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கூறும் சகோதரனைப் பாத்து எம்மால் விம்மாமல் இருக்க முடியவில்லை.

பொருளியல் குறிப்புகள்:

இந்தியாவின் வெறும் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டும் வளைகுடாவிலிருந்து வந்து சேரும் அந்நியச்செலாவணி ரூ. 126.40 மில்லியன் (ரூ. 12 ஆயிரம் கோடி) என்று அதிர வைக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு செய்திக்குறிப்பு. கிட்டத்தட்ட முப்பத்தியோரு இலட்சம் இந்தியர்கள் வேலை செய்யும் வளைகுடா நாடுகளில் ஒரு அறிக்கையில் 36% பேர் 500 திர்ஹம் (US$ 120) சேமிப்பதாகவும், 37%பேர் 500 முதல் 1000 திர்ஹம் வரை (US$ 120-140)சேமிப்பதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரப் நியூஸ் பத்திரிக்கையின் அறிக்கைப்படி கடந்த வருடத்திற்கும் இவ்வருடத்திற்கும் இடையே ஏற்பட்ட பணவீக்கத்தினாலும் அமெரிக்க டாலரின் கிடுகிடு வீழ்ச்சியாலும் 30% சம்பளம் குறைந்திருக்கிறது. (கடந்த வருடம் திர்ஹம் மதிப்பு 12.70 ஆக இருந்தது இன்றைய நிலவரத்தில் 11.00 ஐ விட குறைந்து போயுள்ளது. சவூதியில் இன்னும் மோசம், அது 10.70 ஐயும் விட மோசமாக குறைந்தவண்ணம் உள்ளது.)

ஒருபக்கம் பணவீக்கம் காரணமாக வயிற்றெரிச்சல் பட்டுக்கொண்டிருக்கையில் மறுபக்கம் கிடுகிடுவென ஏறும் விலைவாசிகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. வீட்டு வாடகை எட்ட முடியாத உயரத்தில் பன்மடங்கு எகிறுவது ரியாத், ஜெத்தா, அபூதாபி மற்றும் ஷார்ஜாவில் என்றால் துபாய் மற்றும் கத்தரில் நினைத்துப் பார்க்கவே அஞ்சும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை சவூதியின் சில பகுதிகளைத் தவிர வளைகுடாவெங்கும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு தயாரிப்புக்குப் பெயர் போன வளைகுடாவில் 50% விலை உயர்ந்துள்ளது. மருத்துவம், இன்னபிற செலவுகள் பற்றி கேட்கவே வேண்டாம். விமான சேவைகளில் இருப்பவற்றிலேயே மிகமட்டரக சேவைகளுக்குப் பெயர் போன இந்திய வளைகுடா மார்க்கத்தில் ஏகபோக உரிமை கொண்டாடும் ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் சந்தடி சாக்கில் ஏற்றிய கொள்ளை லாப விலை உயர்வினாலும் பாதிக்கப்படுவது அடிமட்டத் தொழிலாளர்களே!

Pravasi Bandhu Welfare Trust (PBWT) அமைப்பின் சேர்மன் கே.வி. ஷம்சுத்தீன், இதுபற்றிக் கூறுகையில் இந்தியர்கள் வளைகுடாவில் சம்பாதிப்பதால் பயனொன்றும் இல்லை என்பதை இப்போது நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த வருடங்களை விட இந்தியர்கள் வளைகுடாவில் சேமிப்பது 40% குறைந்துள்ளது என்பதான் உண்மை. இதில் சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோனோர் குறைந்த மற்றும் நடுத்தர சம்பளக்காரர்களே" என்கிறார்.

தற்போது வேலை செய்து வரும் வளைகுடா தொழிலாளர்கள் 1. செயல்திறனற்றவர் (Unskilled), 2. ஓரளவு கை தேர்ந்தவர் (Semi-skilled) மற்றும் 3. தேர்ச்சி பெற்றவர்(Skilled) என்ற மூன்று நிலைகளில் கட்டுமான, தயாரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுகின்றனர். 500 திர்ஹமுக்குக் கீழே உள்ள சம்பளங்களில் வேலை செய்யும் பெரும்பாலான இந்திய தொழிலாளர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை இவர்கள் வேலை செய்கின்றனர். டெக்னிஷியன்கள், கம்யூட்டர் ஆபரேட்டர்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், எலக்ட்ரீஷியன்கள், புரஃபஷனல் ரீதியில் பார்த்தால் டாக்டர்கள், இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், அக்கவுண்ட்டண்ட்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை என்னவெனில் படிப்புத் தகுதி அதிகரிக்க அதிகரிக்க சம்பளம் அதிகரிக்கிறது. வசதி வாய்ப்புக்களும், வழங்கப்படும் வசதிகளும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் அவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமில்லை.

இந்தியாவில் ஒளிரும் வேலை வாய்ப்புக்கள்:

இந்தியாவில் மிளிரும் தொழில்நுட்பப் புரட்சியின் மூலம் இளம் தலைமுறையினருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த நிலையில் ஒரு நிறுவனத்தில் இளம் தலைமுறையினர் இப்போது குறைந்த சம்பளத்தில் நுழைவதில்லை. "கை நிறைய" காசு சம்பாதிக்கனும்னா கல்ஃப்க்கு போவனும்" என்கிற பழைய சித்தாந்தமெல்லாம் மாறியிருக்கிறது. ஆனால் வளைகுடாவில் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும், அவர்கள் வருவதற்கு முன் தான் கண்ட இந்தியாவே இன்னும் கண்ணில் நின்று கொண்டிருப்பதை ஒரு வித துரதிருஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

அதிலும் 2006-ஆம் வருடத்திற்குப் பிறகு வளைகுடாவில் வசந்தம் வீசும் என்று எல்லாம் எதிர்பார்த்து வேலை தேடி வருபவர்கள் கையில் வெண்ணையை வைத்து நெய்க்கு அலையும் "பாவப்பட்டவர்கள்" என்கிறது இன்னொரு அறிக்கை.

இப்போது இந்தியாவில் IT கம்ப்யூட்டர் இஞ்சினியர்களுக்கு அடுத்தபடியாக கடுமையான டிமாண்ட் ஏற்பட்டிருப்பது ஆச்சரியப் படத்தக்க வகையில் சிவில் இஞ்சினியர்களுத்தான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வளைகுடா நாடுகளுக்குத் தேவைப்படும் சிவில் இஞ்சினியர்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்த்து வர மறுத்து விடுகின்றனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்தியாவிலேயே வேலை வாய்ப்புகளும் தொழில் முனைவுகளும் அதிக சம்பளமும் தயாராக இருக்கிறது.

"உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்போது கிடைப்பதை விட அல்லது அதே அளவிற்கு சம்பளம் இந்தியாவிலேயே கிடைப்பதால் கஃல்ப்பிற்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியாவில் வந்து பணியைத் தொடர்கிறார்கள்" என்கிறார் கட்டிடக்கலை தொடர்பான பெங்களூரிலிருந்து இயங்கும் Civil Aid Technoclinic Pvt. Limited நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சுனில் சன்னாட்.

வளைகுடாவைப் புறக்கணிக்கும் இந்தியர்கள்

வளைகுடா நாட்டு நிறுவனங்கள் வேண்டி விரும்பிக் கேட்கும் உழைப்பிற்குப் பெயர் போன இந்திய தொழிலாளர்கள், இன்றைய தேதிக்குப் போதுமான அளவிற்கு வளைகுடா செல்லத் தயாரில்லை என்பதே யதார்த்த உண்மை. வளைகுடா நிறுவனங்கள் இந்திய விசா இல்லை என்று கையை விரித்த காலம் போய் விசாக்களை வைத்துக்கொண்டு, இந்திய மேன்-பவர் ஏஜண்ட்டுகளிடம் மல்லுக் கட்டுகின்றன.

Pravasi Bandhu Welfare Trust, ஷம்சுத்தீன் சமர்ப்பித்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்த மாத வருமானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தன் குடும்பத்தினருக்கு மாத செலவுகளுக்கு உரிய பணம் அனுப்புவதற்காக தன்னுடைய அத்தியாவசியச் செலவையும் சேமிக்கும் கொடுமையைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

படிப்பு, வருமானம், குடும்பத்தை வளைகுடாவில் குடியமர்த்தும் பதவிநிலை, அவர்களை நம்பியிருப்போர், நாட்டிற்கு பணம் அனுப்பும் நிகழ்வுகள், சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் வழிமுறைகள், ஓய்வு பெறும் சூழல்கள், முப்பது வயதிலிருந்து ஐம்பது வயது வரையிலான வளைகுடா பணியாளர்கள் பத்தாயிரத்து நூறு பேர் பங்குபெற்ற இந்த சர்வேயில் 98 சதவீதம் பதிவான சர்வே விபரங்கள் கீழே:


சம்பாத்தியமும், சேமிப்பும்:
---------------------------------

5% - நிரந்தமாக ஓய்வு பெற்று நாட்டிற்குத் திரும்பிச்சென்றால் ஓரளவு நிம்மதியாக வாழும் அளவிற்கு பொருளாதாரம் உள்ளது.

2% - பணத்தை சேமித்துள்ளதாக கூறியுள்ளனர்

10% - குடும்பத்துடன் வளைகுடாவில் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் சேமிப்பில்லை.

15% - நான்காயிரம் திர்ஹமுக்கு மேல் சம்பாதிப்போர். சேமிப்பில்லை.

26% - விபரங்களைக் கொடுக்க மறுத்துள்ளனர்


இந்தியாவிற்கு பணம் அனுப்புவோர் விபரம்:
----------------------------------------------------------

31% ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார்கள்

24% இரு மாதங்களுக்கு ஒருமுறை

11% மூன்று மாதங்களுக்கு

34% பணம் அனுப்பியதில்லை. காரணம் சேமிப்பில்லை

23% சம்பாதிப்பதில் ஓரளவு சேமிப்பு இருக்கிறது


"வளைகுடாவில் NRI-க்கள் தங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளும் தருணம் வந்துவிட்டது" என்கிறார் ஷம்சுத்தீன். மேலும், "சேமிப்பை முறையாகத் துவங்க தங்கள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்" என்கிறார். "தங்கள் குடும்பத்தினருக்கு வளைகுடாவின் அல்லல்களை எடுத்துரைத்து செலவீனங்களை கட்டுப்படுத்தி சேமிப்பின் மகத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். தவிர, ஹலாலான வழிகளில் சிரமப்பட்டு சம்பாதித்த காசை புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்வதன் மூலம் மட்டுமே தக்கவைக்கவும், பெருக்கவும் முடியும்" என்கிறார்.

இவ்வாக்கத்தை நாம் எழுதத் துவங்கியதன் பின்னணி யாதெனில், படிப்பறிவில்லாத தமிழ் இஸ்லாமியச் சமுதாயம், தலைமுறை தலைமுறையாக ஆட்டுமந்தையைப் போன்று செயல்பட்டு வரும் பழைய சித்தாந்தங்களைச் சிறிது நேரம் ஒதுக்கிச் சிந்திக்க வேண்டும் என்பதுதான். பதினைந்து வருடங்கள் வளைகுடாவில் குப்பை கொட்டி பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்ட ஒரு தந்தையே எப்படியும் பாஸ்போர்ட் எடுத்து தன் மகனை வளைகுடாவிற்கு அனுப்பிவிடவே எத்தனிக்கிறார். இது, வளைகுடா தொழிலாளர்கள் படும் அல்லல்களின் பின்ணனியை முற்றிலும் அறியாததாலா? இல்லை குறுகிய காலத்தில் கைநிறைய சம்பாதித்துவிட வேண்டும் என்ற அரதப்பழசான சிந்தனை தரும் உந்துதலா?

எது எப்படியோ, தமிழ் இஸ்லாமியச் சமுதாயம் இத்தகைய குறுகிய சிந்தனையிலிருந்து வெளியேறி தீர்க்கமான ஒரு புதுயுகத்தினை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே நம்முடைய ஆதங்கமும் அவாவும். தெளிவான சிந்தனையிலிருந்து புறப்படும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பொருளீட்ட வளைகுடா நாடி வரும் சமுதாயம், இப்போது சந்திக்கும் இழிநிலையில் இருந்து வெளியேறி புதியதொரு சரித்திரம் படைக்கும்.

கல்வியின் மகத்துவத்தையும் பொருளாதாரத்தின் தேவைகளையும் சேமிப்பின் அவசியத்தையும் இதன் மூலம் உணரும். இதனை நம்மிலிருந்து துவங்குவோம். இறைவன் நாடட்டும்.

நன்றி!

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)


< பகுதி 1

Saturday, August 18, 2007

கல்ஃப் ரிட்டர்ன்! - வாழ்வியல் தொடர் (பகுதி 1)

இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் பொருளீட்ட வரும் முஸ்லிம்கள், துவக்க கால கட்டங்களில் சோதனைத் தேர்வு, விசா, புதிய பணி அமைப்பும் சூழலும் ஒவ்வாமை போன்ற பல காரணிகளால் ஆரம்பத்தில் அல்லோல கல்லோலப் பட்டாலும் பின்பு திறமை, அனுபவம், தத்தம் குடும்பச் சூழல் ஆகியவற்றைப் அனுசரித்து பலப்பல படித்தரங்களில் கிடைத்த வாய்ப்புக்கள் தம் தகுதிக்கு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் முதலில் அரைகுறையாகவும் பின்னர் ஒருவழியாக மனமொப்பியும் ஈடுபட்டு விடுகின்றனர்.

ஹெல்ப்பர், வீட்டு டிரைவர், என்ற ரீதியிலான கீழ்மட்டப் படித்தரங்களில் துவங்கி ஒரு நிறுவனத்தை இயக்கக்கூடிய தகுதி வாய்ந்த தலைமை நிர்வாகியாகவும் வெவ்வேறு இயங்குதளங்களில் தமிழ் முஸ்லிம்கள் பணியாற்றி வருகின்றனர். வளைகுடாவில் பணிபுரியும் இவர்களைப் பார்த்து உங்களில் எத்தனை பேர் இங்கே மனமொப்பிப் பணி புரிகிறீர்கள்? என்று கேட்டால் கிடைக்கும் எதிர்மறை பதில் வெளிநபர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

மேற்கத்திய நாடுகளை விட வளைகுடா நாடுகள் பொதுவாகவே சேமிப்புக்குப் பெயர் போனதாக இருந்துவந்த காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் வளைகுடா பணமதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டும், மறுபக்கம் இந்தியாவில் விலைவாசி உயர்ந்து கொண்டும் இருக்கும் சூழலில் சேமிப்பிற்குப் பெயர் போன வளைகுடா நாடுகளிலும் "காஸ்ட் ஆஃப் லிவிங்" எனும் வாழ்வியல் செலவு என்பது பெரிய பிரச்னையாக உருவாகி உள்ளது என்பதே உண்மை. சம்பாதிக்கும் காசு, வாய்க்கும் வயிற்றுக்கும் என்ற நிலையே பலதரப்பட்ட நிலைகளில் பணிபுரிவோருக்கும் உள்ளது. சம்பாதிப்பது எவ்வளவு என்பது இங்கே முக்கியமல்ல; சேமிப்பு எவ்வளவு என்று சிந்தித்தால் அயர்ச்சி ஏற்படுகிறது!

"ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிகிட்டு சம்பாதிச்சிட்டு வந்திட்டா தங்கச்சிய கரையேத்திட்டு, அப்படியே இருக்கற கடனு உடன அடச்சிட்டு ஊர்ல வந்து செட்டிலாகிடலாம்! என்கிற முணுமுணுப்புடன் பிளேன் ஏறும் ஒரு சாமான்ய முஸ்லிமின் எண்ணஓட்டம், வளைகுடா மண் மிதித்தபின் பல்வேறு விதமான கலாச்சாரச் சூழலில் திசை வேகம் மாற்றப்படுகிறது.

அதுநாள் வரை சிறிய அளவில் இருந்த "தேவைகள்", வாழ்க்கைத் தரம் மாற்றியமைக்கப்பட்ட பின் அறிந்தோ அறியாமலோ பெருகத்துவங்குகின்றன. இரண்டு வருடங்கள் எப்போது இருபது வருடங்களானது என்பதை எண்ணி வியந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தான் பெரும்பாலோர். "செட்டிலாவது" என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தத்தை வளைகுடாவாசிகளிடம் பெற முடியாது என்பதே யாதார்த்தம்.

அதே நேரத்தில், வளைகுடாவிற்கு வந்து சம்பாதிப்பவர்களிடம் இப்போதெல்லாம் "நாலு காசு சம்பாரிச்சிட்டு ஊர்ல வந்து ஒக்காந்துட வேண்டியது தான்!" என்ற கப்பலுக்குப் போன மச்சான் முன்னோர்களிடம் காணப்பட்ட குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய அந்தக் குறுகிய சிந்தனை மாறி வருவது கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. தான் கையாளும் தற்போதைய பணியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது எப்படி, இதனையடுத்த உயர் பதவிக்கு முன்னேறுவதெப்படி என்கிற பாஸிட்டிவ்வான சிந்தனை, அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் முயற்சிகள் (பிற மொழிகளைக் கற்றல், தொழிற்கல்வி, தொலைதூரக் கல்வி, தனித்திறமைகளை கண்டுபிடித்து அதனை வளர்த்துக்கொள்ளல் போன்றவை) பாராட்டுக்குரியன.

"முப்பதுக்கு மேல ஆய்டிச்சின்னா இனி கவர்மெண்ட் வேலைக்குப் போவ முடியாது."

"ஆமா! முப்பதுக்குள்ளே ஊரு போயிருந்தாலும் அப்படியே கவர்மெண்ட்காரன் ஒன்னை கூப்ட்டு கைல வேலை தரான் பாரு போவியா...!" என்ற ரக கிண்டல்கள் இங்கேயே அடக்கி வாசி என்ற தொனியில் அறிவுறுத்தத் துவங்கும் அடிநாதங்கள்.

சமீபத்தில் நாம் அறிந்த ஒரு வளைகுடாவாசி ஒருவர், தான் இந்த வருடத்தோடு "பினிஃஷ்" செய்து கொண்டு வந்துவிடுவதாக கூறியது அவர் மேல் பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஏனெனில் வருடங்கள் பலவற்றைக் கடந்தபிற்கு ஒரு வழியாக இந்தியா செல்ல எத்தனித்து கடந்த ஏழு வருடங்களாக அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறார். குடும்பத்தினரைப் பிரிந்திருப்பதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சல், பணியின் கடுமை காரணமாக ஏற்படும் சோர்வுகள், நினைவலைகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவை எல்லை மீறுகையில் எல்லாம் இத்தகைய தழுதழுத்த உணர்ச்சிப்பூர்வ தீர்மானங்கள் நிறைவேறும். இரவில் கண்களின் ஓரம் கசிந்து தலையணை நனைக்கும் இவ்வழுத்தங்கள் பல சமயங்களில் காலையில் புலரும் பொழுதோடு அது தீர்ந்தும் போகும்.

உறவின் அருமை பிரிவில் தான் தெரியும் என்பார்கள். இதை 100% சரியான கோணத்தில் உணர்ந்தவர்கள் கடல் தாண்டி பணிபுரியும் வளைகுடாவாசிகள் எனலாம். மீசை முளைக்கும் முன் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு வந்த சிறுவன், திருமணத்திற்கு தயாராகும் வாலிபர், திருமணம் முடித்த கையோடு திரும்பி வந்த இளைஞன், குழந்தைகள் படிப்பிற்காக சம்பாதிக்கும் பொறுப்புள்ள நடுத்தர வயதினர், பெண் குமரை கரை தேற்ற துடிக்கும் பொறுப்பான தந்தை, வயது முதிர்ந்தும் ஓடாய் தேய்ந்தும் வளைகுடா வாசம் முகர்பவர் என்று ஒரு மனிதனின் பலப்பல பரிணாமங்களை இங்கே பார்க்க இயலும்.

அருகினில் அமர்ந்தால் அவர்களினூடே துடிக்கும் சுவாசத்தில் மெலிதாய் தெரியும் பலகீனத்தையும் இயலாமையையும் உணரலாம். மிக நெருங்கிய உறவுகளுடன் கூட இவர்கள் கடிதங்களையும், தொலைபேசிகளையும் முதலீடாக வைத்து வாஞ்சைத் தடவல்களுடன் இவர்களிடையே வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம்.

ஊரில் உல்லாசமாய், விளையாடி ஊர் சுற்றித் திரிந்தவருக்குக் காசின் அருமை புரியத்துவங்குவது, மார்க்கத்தை உள்ளூரில் வேறொரு கோணத்தில் விளங்கி செயல்படுத்தியவருக்கு அதன் முழுப் பரிமாணமும் புரிவது, கோப்பையை எடுத்து நீர் பருகுவதை விட எளிதாய் ஐவேளைத் தொழுகையை எவ்வித சிரமமும் இன்றி தொழ வசதி வாய்ப்புக்கள், வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டுடன் செய்ய சூழல் ஏற்படுத்தித் தரும் அங்கீகாரம் என்று ஒருவரின் சுருங்கிய எல்லை பரந்து விரியத் துவங்குவது போன்ற பல நன்மைகளும் இங்கே இல்லாமல் இல்லை.

அதிலும் குறிப்பாக "உலகம்" என்ற நான்கெழுத்து வார்த்தையில் முழு அர்த்தமும் விளங்குவது நாட்டை விட்டு விலகி வந்த பின்பு தான். வளைகுடா தவிர்த்து ஏனைய வெளிநாடுகளில் பணிபுரியும் ஓரளவு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள், வளைகுடாதாரிகளைப் பார்த்து பொறாமைப்பட வைப்பது சேமிப்பிற்கு அடுத்தபடியாக இத்தகைய காரணிகள் தாம்.

முன்பு கூறியபடி "சரி... இனிமே ஊருக்குப் போயி ஒக்காந்துட வேண்டியது தான்" என்ற நிலை வரும்போது அல்லது தள்ளப்படும்போது, கூடவே அவருடன் தொற்றிக்கொண்டு வரும் இயலாமைகள் பற்றி பார்ப்போமா?

வளைகுடாவில் தன் வாழ்க்கையை கிட்டத்தட்ட வெள்ளி விழா கொண்டாடி தொலைத்ததால் ஏற்பட்ட தலைமுறை இடைவெளி, கலாச்சார, சுற்றுப்புறச் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் மன உளைச்சல்கள், மனைவி, மக்களின் "தேயும் உபசரிப்பு", "அவருக்கென்னாங்க கல்ஃப் காரரு" என்று இதுநாள் வரை உள்ளூரில் கட்டிக் காத்த "இமேஜ்" மற்றும் ஓரளவிற்கு காசு பார்த்த குதூகலித்த மனம் "தான் உள்ளூரில் எப்படி இந்த மாதிரி வேலைகளைச் செய்வது?" என்று எழும் வறட்டு கவுரவம், ஆரம்பிக்கும் வியாபாரம் ஒருவேளை தோல்வியடைந்து விட்டால் மானம் போய்விடுமே என்ற அவநம்பிக்கை போன்ற பல்வேறு காரணிகளால், சம்பாதித்து விட்டு ஊருக்கு வந்து என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளூரில் தன் வீட்டில் உட்கார்ந்து யோசிப்பதற்கே பலருக்குச் சில வருடங்கள் கூட ஆகின்றன.

கையிருப்பில் சேர்த்துக் கொண்டு வந்த காசு கரைந்த பின்னரே முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக உணர்பவர்கள் பலர். அதையும் கடந்து தன்நிலை சுதாரித்துணர்ந்து, இந்தியாவில் பல ஆண்டுகளுக்குப் பின் தான் காணும் புதிய கலாச்சாரச் சுழலில் கலந்து சீக்கிரம் ஐக்கியமாகி விடுபவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலான "கஃல்ப் ரிட்டர்ன்" முஸ்லிம்கள் மேற்கூறிய பரிதாபச் சூழலில் சிக்கித்தவிப்பவர்கள்.

சரி... இத்தகைய நிலையிலிருந்து தமிழக முஸ்லிம்கள் விடுபட்டு, முறையான வாழ்க்கைத் திட்டத்திற்கு செய்ய வேண்டியது என்ன?

இறைவன் நாடினால் தொடரும்....

ஆக்கம்: அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

Tuesday, August 1, 2006

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை!

வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு

ஐதராபாத், ஜன.8-
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு விரைவில் ஓட்டுரிமை வழங்கப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

3 நாள் மாநாடு
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் 4-வது மாநாடு, ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்தார்.2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் திட்டமும் இந்த மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. பலத்த கைதட்டல்களுக்கு இடையே, 2 பிரமுகர்களுக்கு இந்திய குடியுரிமை சான்றிதழை வழங்கி, பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார். அவர் கூறியதாவது:-

ஓட்டுரிமை
"வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களை 3 வகையாக பிரிக்கலாம்.அவர்களில் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள், தனி ரகம்.அவர்கள் ஒருபோதும் அந்தநாடுகளின் பிரஜையாக முடியாது.எனவே, அவர்கள், நமது நாட்டில் ஓட்டுரிமை வேண்டும் என்று கோருவது, நியாயமானது.இந்த கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.விரைவில் அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு இந்தியர்களுக்காக இன்சூரன்சு திட்டம் ஒன்றும் விரைவில் செயல்படுத்தப்படும். வெளிநாட்டு குடியேற்றம் தொடர்பான விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும்.தங்கள் குடும்பத்தினருக்கு உடனடியாக பணம் அனுப்ப வசதியாக யு.டி.ஐ. வங்கியுடன் இணைந்து புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனி பல்கலைக்கழகம்
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மற்றொரு நீண்டகால கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வசதிக்காக தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.வெளிநாட்டு இந்தியர்கள் இடையே கல்வி-கலாசார பரிமாற்றத்துக்காக தனி அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்.
வெளிநாட்டு இந்தியர்கள் மூலம் கடந்த 2001-ம் ஆண்டில் 1,300 கோடி டாலர் அளவுக்கு நமது நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு இது, 2 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்து உள்ளது."

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்துகொண்டு பேசுகிறார்.


- அபூ ஸாலிஹா (தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)

நன்றி: தினத்தந்தி (8-01-2006)