அரசியலமைப்பின் நான்காவது தூண் என்று ஊடகங்களின் ஒன்றான பத்திரிகைகள் பேசப் படுகின்றன. தொலைக் காட்சி என்பது சக்தி வாய்ந்த ஊடகமாக நம் சமகாலத்தில் உருவெடுத்துள்ளது. இக்கட்டுரை, மேற்குலக ஊடகங்களையும் அரபுலக ஊடகங்களையும் ஒப்பு நோக்கும் ஓர் ஆய்வாகும்.
ஜான் பிராட்லெ மேற்கத்திய ஊடகத்துறையின் மூத்த பத்திரிகையாளராவார். ஆக்ஸ்ஃபோர்ட் / லண்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி முடித்தவர். சவூதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவர். கெய்ரோவின் அல்-அஹ்ரம் பத்திரிகையின் மூத்த பதிப்பாசிரியராகவும் சவூதி அராபியா - ஜித்தாவிலிருந்து இயங்கும் அரப் நியூஸ்இல் நிர்வாகப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றியவர். Saudi Arabia Exposed: Inside a Kingdom in Crisis (Palgrave-Macmillan Publication, June 2005), The Lonely Planet Guide to the Middle East (4th ed; 2003) போன்ற சர்சைக்குரிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். நியாயமான விஷயங்களை உறுதியான வாதங்களாக முன்வைப்பவரும் நடுநிலையாளர் என்று சர்வதேச பத்திரிகையாளர்களால் பெயர் பெற்றவருமான இவரின் கருத்துகள் சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு இங்குப் பதிக்கப் படுகின்றன.
சர்வதேச ஊடகங்கள் பற்றி தனது ஆய்வுக்கட்டுரைகளை மேற்கொண்டதோடு மேற்கத்திய செய்தி ஊடகங்களின் இரட்டை நிலைபாட்டை முழுமையாக அறிந்த ஜான் பிராட்லெ, அவற்றோடு அரபுலகப் பத்திரிகை ஊடகங்களைப் பற்றிய தனது ஒப்பீட்டினை ஒளிவு மறைவின்றி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.
அரபுலக ஊடகங்கள் பல வருடங்களாகக் கேட்டு வந்த கேள்விகளான "இஸ்ரேலுக்கு என்ன தான் வேண்டும்?", "ஏன் இத்தனை அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்?" போன்ற விடை வராதக் கேள்விகளை மிக மிகத் தாமதமாக மேற்கத்திய ஊடகங்களும் இப்போது பின்பற்றிக் கேட்க ஆரம்பித்திருப்பதற்கு அரபுலக ஊடகங்களின் ஆதிக்கம் மேற்கத்திய மக்களைத் தொட்டுப் பரவ ஆரம்பித்து இருப்பதுதான் இம்மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாகும் என்று உடைக்கிறார் ஜான் பிராட்லெ.
மேற்கத்திய ஊடகங்களோ தேய்ந்து போன ரெக்கார்டாக சுன்னி-ஷியா பிரிவினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளைப் பற்றி "ஆடுகள் நனைவதற்காக அழும் ஓநாய்களைப் போல்" திரும்பத் திரும்ப நீலிக் கண்ணீர் விட்டு நினைவுறுத்திக் கொண்டிருக்கையில், அதி நவீன ஆயுதங்கள் கொண்ட படையினராக சித்தரிக்கப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தைப் புறமுதுகிட்டு ஓட வைத்த ஹிஸ்புல்லாஹ் அமைப்பினரின் நடவடிக்கைகள் அரபுலக ஊடகங்களில் அலசப்படுகின்றன என்கிறார்.
அரபுலக மீடியாவிற்கும் மேற்கத்திய ஊடகங்களுக்குமிடையான பெரும் வித்தியாசங்களாக இவர் பட்டியலிட்டிருப்பது:
நேரலை ஒளிபரப்பில் சம்பவ இடத்திலிருந்தே துல்லியமாகப் படம் பிடித்து உலகிற்குக் காண்பிக்கும் விரைவுச் சேவை.
நேரலை நிகழ்ச்சிகளை நேரலையிலேயே மொழிபெயர்ப்புச் செய்து ஒலி-ஒளி பரப்பும் பிரமிக்க வைக்கும் ஆற்றல்
ஐநா அலுவலராகட்டும், இஸ்ரேலிய ராணுவ பிரதிநிதியாகட்டும் நடப்பைத் துணிச்சலாகக் கூறும் நேர்மையான அணுகுமுறை
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஷேக் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்களைத் தேடி அமெரிக்க / இஸ்ரேலிய படைகள் அலைந்து கொண்டிருக்கும் அதேவேளை, அவருடன் ஆற அமர அமர்ந்து நேரலை ஒளிபரப்புச் செய்வது போன்ற புருவத்தை உயர்த்தும் துணிச்சல்
போன்ற விஷயங்களில் மேற்கத்திய ஊடகங்களுக்குப் பாடம் நடத்துகின்றன அரபுல ஊடகங்கள். அதில் குறிப்பாக மேற்கத்திய ஊடகங்களுக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்துக் கொண்டே வரும் அல்ஜஸீராவின் ஊடகத்திறனை ஆய்வு செய்து வியந்திருக்கும் இவரது கட்டுரை Will Al-Jazeera bend? அல்ஜஸீராவின் துணிச்சலையும் நேர்மையான ஊடகத் திறனையும் பாராட்டுவதோடு அல்ஜஸீரா சந்திக்கும் அரசியல் சமூக நெருக்கடிகளைப் பற்றிக் கேள்விகளை அடுக்குகிறது.
அல்ஜஸீரா பற்றிக் கூறுகையில் இவர் "அனைத்து அரபுலகத்தையும் ஓரணியில் திரளச் செய்யும் அரசியல் சார்ந்த முயற்சியான Pan-Arabism என்பதே அல்ஜஸீராவின் உண்மையான குறிக்கோளாகும். இதன் காரணமாகவே மேற்கத்திய அரசியல் விமர்சகர்களின் உச்சகட்ட கண்டனத்திற்கு அல்ஜஸீரா உள்ளாகியுள்ளது. அதேவேளை, பல நாட்டுப் பத்திரிகையாளர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள அல்ஜஸீராவின் கோட்பாடுகள் அரபுலகத்தினாலும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டு வருகிறது.
அரபுலகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் காரணிகள், அரபுலக அரசுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏற்படும் நெருக்கடிகள், முட்டுக்கட்டைகள் அனைத்தையும் அலசி ஆய்ந்து வெளிக்கொண்டு வரும் அதன் செய்திகள் அரபுலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை ப்ராட்லே சுட்டிக்காட்டுகிறார். அரபுக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டுக்குள் (Arab League Summit) அரங்கேறும் உட்பூசல்களையும் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து காட்டுவது அல் ஜஸீராவின் மீது அரபுலகின் சந்தேகக் கண் விழுவதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.
இஸ்ரேலுக்கு எதிராக அல்ஜஸீரா?
அல்ஜஸீரா இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற கூற்றையும் ப்ராட்லெ மறுக்கிறார். இஸ்ரேல் லெபனான் போரின் போது இஸ்ரேலிய வீரர்களின் பார்வையில் லெபனான் பற்றி முழுச் செய்தித் தொகுப்பாக அல்ஜஸீரா வெளியிட்டதையும், முழு நீள இஸ்ரேலிய ராணுவ பிரதிநிதியின் பேச்சுகளையும் வெளியிட்டதையும் அத்துடன் இஸ்ரேலிய மக்களின் வாழ்க்கைத் தரம் ஹிஸ்புல்லாஹ் படையினரின் குண்டுமழையினால் எவ்வாறு சீரழிந்துள்ளது என்பதையும் விளக்கமாக விவரித்தது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.
ஊடகங்களில் அமெரிக்க-இஸ்ரேலிய உறவு
அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலைத் தாங்கிப்பிடிப்பவை (There is no doubt the American media is deeply pro-Israeli). இஸ்ரேல் நாட்டினுள் உள்ள ஊடகங்கள் இஸ்ரேலை எதிர்த்துக் குரல் கொடுப்பதை விட அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரானவற்றைப் பேசுவது மிகமிகக் குறைவு. CNN மற்றும் BBC போன்ற ஊடகங்கள் அளிக்கும் செய்திகளையும் ஆய்வுகளையும் சில நிமிடங்கள் நடுநிலைப் பார்வையோடு கவனித்தோமானால் அதில் உள்ள இஸ்ரேலிய ஆதரவுத் தன்மை விளங்கும்.
அமெரிக்க ஊடகங்களில் அரபுலக (ஃபலஸ்தீன)ச் சிறுவர்கள் கொலை செய்யப்படுவது மறைக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு சிறுவன் இஸ்ரேலில் இறந்தால் அதற்கான 'சிறப்புப் பார்வை' நிகழ்ச்சிகள் அமெரிக்க ஊடகங்களில் அரங்கேறுவதைக் காணலாம். கஸ்ஸா / மேற்குக்கரைப் பகுதிகளை அமெரிக்க ஊடகங்கள் முன்பு குறிப்பிடுகையில் "Occupied" அல்லது "Occupation" போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு வந்தது. தற்போது அத்தகைய வார்த்தைப் பிரயோகங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு "Contested / Disputed" போன்ற பிரயோகங்களாக மாறுதல் அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு படி மேலே போய் ஃபலஸ்தீனின் அப்பகுதிகளையே "இஸ்ரேல்" என்றே அழைக்கும் ஊடங்களும் அமெரிக்காவில் உண்டு.
இஸ்ரேல், லெபனான் மீது தொடுத்த போரின் உண்மைக் காரணிகளை அமெரிக்க ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? இரு இஸ்ரேலியப் படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் பிடித்துச் சென்றது மட்டும் காண்பிக்கப்பட்ட ஊடகத்தில் அந்த இரு வீரர்கள் லெபனான் எல்லைக்குள் என்ன செய்து கொண்டிருந்தபோது பிடிபட்டனர் என்பது பூசி மெழுகி மறக்கப்பட்டு விட்டது. இரு வீரர்கள் பிணைக்கைதிகளானது போர்க்காரணம் என்றால் பதினான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களும் பெண்களும் அடங்கிய 9000 பேர் இஸ்ரேலியச் சிறையில் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களே, அவர்கள் படும் வேதனைகளை யார் வெளியே சொல்வது? அவர்களை யார் விடுவிப்பது?
இவை வெறும் கேள்விகள் மட்டுமா?
ஆக்கம்: அபூ ஸாலிஹா
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=936&Itemid=278