Showing posts with label ஈராக். Show all posts
Showing posts with label ஈராக். Show all posts

Thursday, April 24, 2008

அமைதியை இழந்து தவிக்கும் அமெரிக்க வீரர்கள்!

'அமைதியை நிலை நாட்ட ஒரு போர்' என்ற பெயரில் பொய்யான காரணத்தை அவ்வப்போது உலக அரங்கிற்கு முன் அரங்கேற்றிப் பொருளாதாரத்திலும், ஆயுத பலத்திலும் குன்றிய ஏழை நாடுகளைத் தேர்ந்தெடுத்து அதன் மீது படையெடுப்பதைத் தன் இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் அமெரிக்க ராணுவத்துறை இப்போது அமைதியின்றித் தவிக்கிறது.

ஆம்! ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிய அமெரிக்கப் படைவீரர்களில் மூன்று இலட்சம் பேருக்கு உணர்வதிர்ச்சி (post-traumatic
stress disorder) எனும் நோயினால் பாதிக்கப்பட்டு கடுமையாக மனநலம் குன்றியிருப்பதாக வாஷிங்டனில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.ரிஸர்ச் அண்டு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (RAND Corporation) சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட 320,000 அமெரிக்கப் படைவீரர்களுக்கு இத்தகைய மனநோய் ஏற்பட்டுக் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்றுவரும் வீரர்களின் எண்ணிக்கையை இதுநாள் வரை ரகசியமாக வைத்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உள்பட உலகம் முழுவதும் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் படையில் பணிபுரிவோர், விரக்தியில் வேலையை விட்டு ஒதுங்கியோர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவோரில் சிலர் என்று கிட்டத்தட்ட இரண்டாயிரம் அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்க்கையினைப் பகுத்தாய்ந்து புள்ளிவிபரங்களுடன் துல்லியமாகத் 500 பக்கங்கள் அடங்கிய RAND நிறுவனத்தின் இவ்வறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வீரர்களைப் பாதித்து வரும் PTSD எனப்படும் இந்நோயின் அறிகுறிகள்:

- கொடூர சம்பவங்கள் மற்றும் அவற்றின் நினைவலைகள் கண்ணில் தோன்றி மறைதல், சிறு சப்தமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துதல் (உதாரணம்: போக்குவரத்து சத்தம், செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவற்றின் மூலம்)

- தனது போர்க்காலங்களில் நடந்த நிகழ்வை திரும்ப நினைவு படுத்தும் எவ்வித காரணிகளில் இருந்தும் தூர விலகி ஓடுதல்

- குடும்பம், சொந்த பந்தங்களுடன் உறவுகளை முறித்துக் கொள்ளல், விரக்தியான மனோநிலை, எளிதில் கோபப்படுதல், தூக்கமின்மையால் அவதியுறுதல், அதிர்ச்சியால் துடித்தல்


இது தவிர மூளையின் உட்புறம் ஏற்பட்டுள்ள நோயால் விளையும் உடல்நலக் குறைகள்:

— அடிக்கடி வரும் தலைவலி
— குழப்பமான மனநிலை
— தலைசுற்றல், தலை கனத்திருத்தல்
— விசித்திர மனநிலை
— நினைவில் எதுவும் நிற்காமல் இருப்பது
— குமட்டல் வாந்தி

— பார்வைக்குறைபாடு மற்றும் காது கேளாமை

பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாமல் இருக்கும் திடுக்கிடும் உண்மையும் இவ்வறிக்கை மூலம் வெளிவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள மூளை நோய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படா விட்டால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது" என்று RAND இன் தலைமை ஆய்வாளர் டெர்ரி டேனிலியன் குறிப்பிட்டுள்ளார். பெண்டகனிடம் இத்தகவல்கள் பற்றிய ஆய்வறிக்கை ஏதும் இல்லாததே இது பற்றின ஆய்வில் RAND இறங்கத் தூண்டியது என்று கூறினார்.

தாம் மனநலம் குன்றியுள்ள விவகாரம் வெளியே வந்தால் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பெருமளவு அமெரிக்க வீரர்கள் மருத்துவர்களிடம் செல்ல வெட்கப்பட்டு உள்ளுக்குள் அவதியுறும் விவகாரமும் வெளியாகியுள்ளது. மனநலம் குன்றிய நிலையிலேயே அவர்கள் பணியினைத் தொடர்வது அமெரிக்க படைக்கு ஆபத்தானது என்ற எச்சரிக்கையும் கூடவே விடுக்கப்பட்டுள்ளது.

போரினால் தொடர்ச்சியாக ஈடுபடும்போது படைவீரர்களுக்கு ஏற்படும் நோய்க்கு Post-traumatic stress disorder என்று பெயர். இது PTSD என்று சுருக்கமாக அழைக்கப்படும். அதிகப்படியான மனித உயிர்களைக் கொலை செய்வதும், துடிதுடித்து இறப்பவர்களையும் அதீத (ம)ரணங்களை அருகிலிருந்து பார்ப்பதனாலும், இந்நோய் ஏற்படுகிறது. (இந்நோயின் மூலம் ஏற்படும் அறிகுறிகள் இடப்புற பெட்டிச் செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Veterans Affairs அறிக்கை

- 19 % அல்லது 320,000 அமெரிக்கப்படைவீரர்கள் PTSD நோயினால்
அவதியுறுகின்றனர்


- 7 % வீரர்கள் மன அழுத்தம் முற்றியதால் மூளையில் சேதம்
ஏற்பட்டுள்ளது


- 43 % தலையில் ஏற்பட்டுள்ள வேதனை காரணமாக மருத்துவர்களால் பணிநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டவர்களாவர்

- 53 % PTSD மற்றும் மன அழுத்தம் காரணமாக அவதியுறுபவர்கள் (கடந்த வருடம் மட்டும்)

RAND அளித்துள்ள அறிக்கையின் முடிவில் படைவீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக பெண்டகன் செய்ய முன்வர வேண்டுமென்றும் அவர்களது உடல்நலம் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கை தாமதம் ஆகும் பட்சத்தில் படைவீரர்களிடையே தற்கொலைகள் செய்து கொள்வது அதிகரிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளது. மன நோயினால் ஆர்வம் குன்றி பணிபுரியும் அமெரிக்கப் படைவீரர்களின் தரம் குறைந்த பங்களிப்பினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தையும் மேற்கோள் காட்டியுள்ளது.

டிம் நோ என்ற பெயருள்ள இப்படைவீரர் (காண்க: மேலேயுள்ள புகைப்படம்) மன அழுத்தம் காரணமாக மூளையில் ஏற்பட்டுள்ள நோய்க்கு அமெரிக்க மருத்துவர்கள் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை முடிந்துவிட்டாலும் வாழ்நாள் முழுக்க பிளாஸ்டிக்கிலான ஹெல்மெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கப் படையிலிருந்து ஓய்வு பெறும் வீரர்களின் பிற்கால வாழ்க்கை நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள Veterans Affairs ஒப்புக்கொண்டுள்ள அறிக்கையில் 120,000 படைவீரர்கள் கொண்ட ஒரு குழுவில் 60,000 பேருக்கு இத்தகைய PTSD மனநோய் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில புள்ளிவிபரங்கள் அருகில் உள்ள பெட்டிச்செய்தியில் காண்க.

RAND அறிக்கை பற்றிய சிறு குறிப்பு: கலிஃபோர்னியா சமூக நல அறக்கொடை சார்பில் RAND உடல்நலத்துறை மற்றும் RAND தேசிய பாதுகாப்பு ஆய்வுத்துறை இணைந்து மேற்கொண்ட இந்த அறிக்கைக்கு கண்ணுக்குப் புலப்படா போர்க்காயங்கள்: உளவியல் மற்றும் புலன் உணர்வு, அதன் விளைவுகள், மற்றும் மீட்புப்பணிக்கான சேவைகள் ("Invisible Wounds of War: Psychological and Cognitive Injuries, Their Consequences, and Services to Assist Recovery.") என்று பெயர். கடுமையான உழைப்பில் 25 ஆய்வாளர்கள் குழுவின் மூலம் கடந்த ஜனவரி மாதம் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையே மேலே நாம் குறிப்பிட்டுள்ள RAND அறிக்கை ஆகும்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகியுள்ள இவ்வறிக்கை மூலம் அமைதியை உலகில் நிலைநாட்ட பிறந்தவர்கள் என்ற மமதையுடன் வலம் வந்தவர்கள் இன்று அமைதியிழந்து அவதிக்குள்ளாகியுள்ளதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இத்தகைய "அமைதியை நிலை நாட்டும்(?) போர்" அடுத்தடுத்த நாடுகளில் தொடர்ந்து நடத்தி பிணக்குவியல்களை அதிகரித்துக் கொண்டிருக்கும் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளன.

இவ்வளவுக்கும் காரணமாகச் சொல்லப்பட்ட அல்காயிதா தொடர்பு, அணுஆயுதம் தயாரிப்பு போன்ற பொய்யான காரணங்களும் முகத்திரை கிழிந்து தொங்கும் இச்சூழலில், இதுநாள் வரை இரட்டை வேடம் கட்டிய ஊடகங்கள் இதனை உணர்ந்து, சர்வதேச அளவில் மக்களுடன் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களிலாவது மனித உயிர் மதிப்பின்றி சருகாய் கருகுவதைத் தடுக்க வழிவகை செய்ய முன் வரவேண்டும்.

- அபூ ஸாலிஹா

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=896&Itemid=278

Thursday, August 16, 2007

அமெரிக்கப் படையெடுப்பும் ஆயிரக்கணக்கான விதவைகளும்!

கடந்த வருடம் அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய கொடூரமான ஆயுதத்தாக்குதலில் தன் கணவரைப் பறிகொடுத்த ராணா ஜலீல் என்ற 38 வயது பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்ற தான் விபசாரியாக்கப்படுவோம் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

நான்கு குழந்தைகளுக்குத் தாயான இப்பெண் தன் குடும்பத்தின் உயிர் பிழைக்க ஒரு வேலை தேடி, கடந்த ஒருவருடமாக கடுமையாக முயற்சி செய்து வருகிறார். அமெரிக்கப் படையெடுப்பிற்குப் பின் நடைப்பிணங்கள் நடமாடும் சுடுகாடாய் காட்சியளிக்கும் ஈராக்கில் நிர்க்கதியான பெண்கள் அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்கள் பெருமளவு குறைந்து விட்டது.

பசியால் துடிக்கும் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற எத்தகைய கடுமையானதொரு வேலையையும் செய்ய, தான் தயாரான போதிலும் வேலை கிடைக்காத ஒரே காரணத்தினால் பிச்சை எடுக்கும் கேவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இவருக்குப் பிச்சையிட்டவர்கள் கூட இவரை நடத்திய விதம் மோசமானதாகவே இருந்தது. இவருக்கு வேலை தருவதாகவும் உதவி செய்வதாகவும், போலிவேஷம் போட்டு முன்வந்தவர்கள் மனதில் கீழ்த்தர எண்ணங்களே மிகைத்திருந்தன என்கிறார் இவர்.

சம்பாதித்துக் கொண்டிருந்த கணவர் இறந்த சில வாரங்களிலிலேயே இவரது குழந்தைகளின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதற்கு ஒரே காரணம் - பசியும் பட்டினியும் என்பதால் செய்வதறியாது மருத்துவர்கள் திருப்பியனுப்பி விட்டனர்.

நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் செய்வதறியாது விக்கித்து நின்ற நிலையில் தான் மிக மோசமான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து கண்களில் நீர் பனிக்க அவர் கூறுகிறார்: ஆரம்பத்தில் இவை என் வாழ்க்கையின் மிகப் பயங்கரமான நாட்களாக இருந்தது. என்... என்... குழந்தைகள் பசியின் காரணத்தால் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் என்னால் இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை"

இறை விசுவாசத்தையும், துடிக்கும் தன்மான உணர்வுகளையும் மீறி மனதில் ஏற்படுத்திய இரணத்தின் காரணத்தினால் வீட்டை விட்டு வெளியேறினேன். அருகிலுள்ள சந்தைப் பகுதிக்கு சென்றேன். நான் இயற்கையாகவே அழகிய உருவம் கொண்டுள்ளதால் எனக்கு சிரமம் ஏதும் ஏற்படவில்லை. என்னுடன் ஒப்புக்கொண்ட நபருடன் நான் தனியறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது திடும் என்று அடி மனதில் எழுந்த அச்சத்தினால் அலறி ஓட முயன்றேன். ஆனால், அந்த நபர் என்னை விடவில்லை. பலவந்தப்படுத்தி என் கற்பை சூறையாடிவிட்டார். அவர் வீசி எறிந்த காசைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு நேராக கடைக்கு ஓடினேன். அவசரமாக உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன். என் கையில் உணவைப் பார்த்த போது என் குழந்தைகள் சந்தோஷத்தில் கத்திய குரல் என் காதில் இன்னும் ஒலிக்கிறது. பசிக்கொடுமையின் காரணத்தால் நான் கேட்டிருந்த என் குழந்தைகளின் மரண ஓலத்தை விட எனது மானம் எனக்குப் பெரிதாக தெரியவில்லை.

நம்பிக்கையிழந்த ஈராக்கிய விதவைகள்

ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்குப் பிறகு பெருமளவில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்தில் பொதுமக்கள் அழிந்து கொண்டு வருகின்றனர். கடைவீதியில், பொதுவிடங்களில், பொதுமக்கள் குழுமியிருக்கும் இடங்களில் குண்டு வெடித்துக் கொண்டு இருப்பதனால் தினசரி எழுபது, எண்பது பேர் இறந்தனர் என்ற செய்தி எல்லாம் இப்போது வெகு இயல்பாக, கேட்டுக்கேட்டுப் பழகிப்போன சர்வ சாதாரண செய்தியாய் மாறிவருவதை எவரும் மறுக்க இயலாது.

அமெரிக்கப்படை ஈராக்கினுள் கால் வைப்பதற்கு முன்னர் வரை ஈராக்கில் விதவைப் பெண்களுக்கு, குறிப்பாக ஈரான் - ஈராக் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு அப்போதைய ஈராக்கிய அரசு வீடு, இலவசக் கல்வி, மற்றும் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதனை முறையாகவும் கொடுத்து வந்திருந்தது.

அத்தகைய எவ்வித உதவியும் தற்போதைய பொம்மை அரசு வழங்குவதில்லை என்பதும் கொடுத்து வந்த உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஓரளவு வசதி வாய்ந்த விதவைகள் இதில் விதிவிலக்காக தப்பித்துக்கொள்கிறார்கள்.

பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் அரசு சாரா அமைப்பான OWFI சமர்ப்பித்துள்ள புள்ளி விபரப்படி, அமெரிக்க அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய விதவைகளில் 15 % பெண்கள் தங்களின் குடும்பத்தினருக்காக வேலை தேடிப் போராடி வருவதாகவும், தற்காலிக திருமணமோ, விபச்சாரமோ செய்யும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் என்ற பெண்மணி அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில், "ஈராக்கிய விதவைகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே இதற்கான தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே இப்பெண்களின் பரிதாப நிலைமையின் பயங்கரம் முகத்தில் அறைய ஆரம்பித்து விட்டது. எங்களால் விவரிக்க இயலாத அளவிற்கு இப்பிரச்னை பூதாகரமாக உருவாகியிருக்கிறது. ஈராக்கிய தெருக்களில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான விதவைகள் வேலை தேடியும், பிச்சை கேட்டும் அலைகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கப் படையினர் ஈராக்கில் நுழைந்த பிறகு, அங்கே நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அதில் 20% பெண்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல்கள் என்றும், NGO நிறுவனம் இத்தகவலை தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்.

பெரும்பாலான பெண்கள் ஈராக்கிற்கு வெளியில் கடத்திச் செல்லப்பட்டும் விபச்சார விடுதிகளில் விற்கப்பட்டும் இருக்கலாம் என்று OWFI நம்புவதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற தாக்குதலில் கணவர்களை இழந்து பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் (ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மட்டும்) 350,000 விதவைப் பெண்கள் என்றும், நாட்டில் மொத்த விதவைகள் மட்டும் எட்டு மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர் என்றும் ஈராக்கின் பெண்கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தெரிவிக்கிறது.

துயரமான வியாபாரம்

விதவைகளாக உள்ள இளம் வயது ஈராக்கிய பெண்கள் நிலை இப்படி எனில் அமெரிக்க அராஜகத்தில் உடல் உறுப்புக்களை இழந்து நடைப்பிணமாக வாழ்ந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களுக்கான வாழ்வாதாரம் ஏதுமற்று தங்களது மகள்களையே விபச்சாரத்திற்காக சந்தையில் விற்கும் மிகக் கொடூரமான இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கொடுமை எத்தனை பேர் அறிவர்?

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அபூ அஹ்மத் என்பவர் குண்டுவீச்சில் தன் மனைவியை இழந்து தானும் ஊனமுடைந்தவர். தன்னுடைய குழந்தைகளுக்கு உணவளிக்கத் திறனற்று, கடும் அவதியுற்று, வெளிநாடுகளிலிருந்து விபச்சாரத்திற்காக பெண்களை விலைக்கு வாங்க வந்திருந்த நபர்களிடம், லினா என்ற தன் சொந்த மகளையே விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

என் மகள் லினாவிற்காக விபச்சார விடுதியினர் கொடுத்த தொகையைக் கொண்டு என் மற்ற மூன்று மகள்களையும் ஒரு மகனையும் ஒரு வேளை உணவாவது சிரமமின்றி உண்ண வைக்க முடியும் என்று அல்ஜஸீரா நிரூபர்களுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.

அபூ அஹ்மத்தின் சூழலைக் கண்டு பரிதாபப்பட்டு(?) தாமே அவரை வற்புறுத்தி அணுகி உதவியதாக ஷாதா என்கின்ற விபச்சார விடுதியைச் சேர்ந்த தரகுப்பெண் அல்ஜஸீராவிற்கு பேட்டியளித்துள்ளார். இளம் விதவைகளை இனம் கண்டு அவர்களது ஏழ்மையை தமக்குச் சாதகமாக பயன்படுத்தி வருவதாகக் கூறும் இவர் இளம் பெண்கள் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டு மிக அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படும் பெரும் வியாபாரம் பற்றி விளக்கினார். "ஒருவேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ள இவர்களுக்கு குறைந்தது பத்து அமெரிக்க டாலர் பெற்றுத்தருகிறோம். அதற்காக அப்பெண் குறைந்த பட்சமாக ஒருநாளைக்கு இரண்டு வாடிக்கையாளர்களுடன் 'இருந்தால்' போதும்" என்கிறார் சர்வ சாதாரணமாக.

வெளிநாடுகளுக்கு பலவந்தமாகக் கடத்தபடும் ஈராக்கிய பெண்கள்

OWFI அமைப்பின் செய்தித் தொடர்பாளரான நுஹா சலீம் மேலும் கூறுகையில் லினாவைப் போன்ற அபலைப் பெண்கள் வறுமையின் காரணமாக ஐநூறு அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறார்கள்.

தந்தையை இழந்ததினால் தன் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிப் போன சுஹா எனும் 17 வயது இளம்பெண், தன்னுடைய பெற்ற தாயினாலேயே விபச்சார விடுதியில் விற்கப்பட்டார். சுஹாவிடம் பேட்டி கண்ட அல்ஜஸீராவிடம் அவர் கூறியது:

தான் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு ஏமாற்றி விற்கப்பட்டதாகவும் சிரியா மற்றும் ஜோர்டானின் தலைநகரான அம்மானில் உள்ள பெரும்புள்ளி விலங்குகளுக்கு தினசரி உணவாவதாகவும் கூறியது உருக்கமாக இருந்தது. விபச்சாரக் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு நாள் விடுதியிலிருந்து தப்பித்து ஓடி சிரியாவிலுள்ள ஈராக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். தற்போது தனது அத்தையின் வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருக்கும் சுஹா, சிரியாவின் விபச்சார விடுதியில் இருந்து தான் தப்பித்து ஈராக் திரும்பும் வரை தனக்கு உதவிய ஒரு ஈராக்கிய குடும்பத்திற்கு தான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நினைவுகூர்ந்தார். தன்னைப் போன்றே பலப்பல பெண்கள் இத்துயரத்தில் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தின் பெண்ணுரிமைச் சங்கத்தின் (WRA) செய்தித் தொடர்பாளரான மயாதா ஜூஹைர் என்ற பெண் பேசுகையில் ஈராக்கிய அரசு மற்றும் அரசு சாரா (NGO) அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இளம் பெண்களைக் கடத்துவதையும் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதையும் தடுக்க முயன்று வருகிறோம். அமெரிக்கப் படையெடுப்பினால் நாசமாகிப் போய் இருக்கும் ஈராக்கில், வறுமையில் நிர்க்கதியாய் நிற்கும் விதவைகளும், இளம் பெண்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவது பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான உதவியும் போதுமான அளவிற்கு நிதியுதவியும், மனித வளமும் இல்லாமல் இப்பிரச்னையை எளிதாக தீர்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

தனது மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்து கொண்டிருப்பதை, தான் நன்கு உணர்வதாகக் கூறுகிறார், தன் கணவரை ஒரு வெடி விபத்தில் இழந்திருக்கும் நிர்மீன் லத்தீஃப் என்ற 27 வயதான விதவைப் பெண். தனது நிலையை எடுத்துக்கூறி பொருளாதார உதவி செய்யுமாறு தனது உறவினர்களை எவ்வளவு வேண்டிக் கொண்டும் பலனின்றிப் போகவே, வேறு வழியே இன்றி விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர் கூறியவை:

"எனக்குத் தெரிவதெல்லாம் பசியினால் என் கண்முன்னே துடித்து இறந்து கொண்டிருக்கும் என் குழந்தைகள்; என் குழந்தைகள் மட்டுமே!" என்கிறார் வெறித்த பார்வையுடன்.

அகத்தில் இறைநம்பிக்கையின் விளிம்பில் நின்றுகொண்டு மனதோடு கடும் போர் நடத்திக்கொண்டும், புறத்தில் வாழ வழியின்றித் துடிக்கும் இவரைப் போன்ற இலட்சக்கணக்கான பெண்களின் இந்த இழிநிலைக்கு, சர்வதேச அளவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாயம் என்ன பதில் வைத்திருக்கிறது?

- அபூ ஸாலிஹா (சத்தியமார்க்கம்.காமில்)

மறுபதிப்புகள்: (தட்ஸ்தமிழ்.காம் / PKP Blogs / முதுவை ஹிதாயத் / சங்கப்பலகை / நீதியின்குரல் / முத்துப்பேட் எக்ஸ்பிரஸ் / நிதர்சனம்.நெட் / நெருடல்.காம் / உணர்வுகள்.காம் / ஈராக்கின் நிலமை)


இந்தச் செய்திக்கட்டுரையை நாம் பதிக்கும் வேளையில் நேற்று (15-08-2007) நடந்த ஒரு குண்டுவெடிப்பில் 175 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறி இறந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதுகுறித்த அல்ஜஸீரா தொலைக்காட்சியின் Inside IRAQ நிகழ்ச்சியை இந்த வீடியோவில் காணலாம்.