உலகில் வாழும் ஜீவராசிகளில் இரண்டு வகை உண்டு. மாமிசம் சாப்பிடுபவை. தாவரங்களை சாப்பிடுபவை. மனிதர்களிலும் அவ்வாறே இருவகையினர் உண்டு. இறைச்சி சாப்பிடுபவர்களை அசைவம் என்றும், காய்கறிகள் சாப்பிடுபவர் களை சைவம் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு.
இறைச்சி உணவுகளை சாப்பிட்டால் சக்தி வாய்ந்தவர்களாக, உடல் உரம் கொண்டவர்களாக விளங்கலாம் என்று பொதுவாக கருதப்படுகிறது. காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டால் அதிகமாக உடல் உபாதைகள் வர வாய்ப்பில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது.
இன்று உலகில் ஏராளமானோர் மாமிச உணவு சாப்பிடுபவர்களாகவும், காய்கறி உணவு சாப்பிடுபவர்களில் கூட ஏராளமானோர் இறைச்சி உணவை நோக்கி திரும்பியிருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இறைச்சி உணவு சாப்பிடுபவர்கள் இழிந்தவர்களாகவும், காய்கறி உணவுகள் சாப்பிடுபவர்கள் உயர்ந்தவர்களாகவும் கருதும் போக்கு மனுநீதி காலத்திருந்தே நிலவி வருகிறது. உலகில் வேறெங்கும் இத்தகைய நிலை நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உணவு விஷயத்தில் அகிம்சை - ஹிம்சை பிரச்சினைகளை பெரிதாக்கி மக்களை பாகுபடுத்தும் போக்கு இன்னும் மாறக்காணோம்.
சில காய்கறி உணவு பிரியர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்து உணவுப் பிரச்சினைகளில் மக்களிடையே பிணக்கை ஏற்படுத்தி வருகின்றன. தினமலரின் வாரமலர் (ஜனவரி 8-2006) இதழில் அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது - பா.கே.ப. என்ற பகுதியில் சில முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோவை பாரதியார் பல்கலைக் கழக உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்ததாக அந்துமணி கூறுகிறார்.
அதில் உள்ள கருத்துக்களை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அசைவ உணவை ஏசு நாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சைவ உணவையே உண்டு வந்தார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் என்றும் புதுமைக்(?) கருத்துக்களை புகுத்தியிருக்கிறார்.
திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவில் கூறப்பட்ட இறைவசனங்களை திரித்துக் கூறி தனது வாதத்திற்கு வலுசேர்க்க முயல்கிறார்.
திருக்குர்ஆனின் அற்புதமான தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகள் தாராளமாக எங்கும் கிடைக்கும் நிலையில் பேராசிரியர் வேதகிரி கணேசன் நுனிப்புல் மேய வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், தனது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக திருக்குர்ஆனையும் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றையும் தான் சரியாகப் புரிந்து கொள்ளவேயில்லை என்பதை புலப்படுத்திவிட்டார்.
பெருமானார் அசைவ உணவுகளையே அதிகம் உண்டு வந்தார்கள் என்பதற்கு அநேக சான்றுகள் உண்டு. குர்பானி, அகீகா என்று கால்நடைகளை அறுத்து ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் இறைச்சிகளை பகிர்ந்து வழங்குவதை மதக்கிரியையாகவே செய்ய கற்றுக் கொடுத்த அண்ணல் நபிகளைப் பற்றி முரண்பட்ட கருத்தைக் கூறுவதைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற வேண்டுமென்றால் முதல் தனது தரப்பினை வலுவாக்கும் காரணிகளைக் கூற வேண்டும். எதிர் கருத்துக்களை எதிர்த்து தனது தரப்பினை ஆதாரத்துடன் கூற வேண்டும் அதை விடுத்து பொய்களையும், யூகங்களையும், தங்கள் வியூகங்களாக அமைக்கக் கூடாது என்பதை யாராவது இந்த புண்ணியவான்களுக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.
நன்றி: மக்கள் உரிமைஇஸ்லாமிய அடிப்படை நெறிகளை நன்கு அறிந்தும், அறியாததுபோல் தனது விஷமத்தை பரப்பி வரும் தினமலரின் உண்மையான "நிறம்" அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற புண்படுத்தல்களை சர்வதேச அளவில் முஸ்லிம்களால் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் விடாப்பிடியாக திருந்த மறுக்கும் தினமலரை தமிழுலகமக்கள் ஒன்று சேர்ந்து புறக்கணிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
- அபூ ஸாலிஹா
(தமிழ்முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில்)